Nov 28, 2010

எப்போதும் மகிழ்ச்சி, சந்தோஷம் நிறைந்து வாழ...




இது இந்த கால கட்டத்துக்கு தேவையான ஒரு பதிவு தான்.

நாம் அனைவரும் எப்போதும் சந்தோஷம் நிறைந்து குதூகலத்துடன் வாழ விரும்புகிறோம். ஆனால் எப்போதும் சோகம் தேய்ந்த முகத்துடனும் கவலையுடனுமே நமது வாழ் நாள்கள் ஓடுகின்றன.

நாம் பேருந்தில் செல்லும் போதோ, தெருவில் நடக்கும் போதோ, உணவகத்தில் இருக்கும் போதோ சுற்றிலும் உள்ளவர்களை கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும். அனைவரும் ஏதோ ஒன்றை இழந்தது போல் வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

என்ன செய்வது கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் கலையில் நாம் கை தேர்ந்தவர்களாகி விட்டோம். பல நாட்கள், பல வருடங்கள், பல பிறவிகளின் பழக்கம்! அவ்வளவு சீக்கிரம் அகலுமா? மேலும் நமது உலகமும் சந்தோஷத்திற்கு எதிராகவே செயல் படுகிறது. கல கலப்பாக சிரித்து விளையாடி மகிழும் பள்ளி, கல்லூரி மாணவன் கண்டிக்கப் படுகிறான். விரக்திப் பார்வை பார்த்தவாறு புத்தகமும் கையுமாக இருக்கும் மாணவன் போற்றப் படுகிறான்.

ஆனால் உண்மை என்னவெனில் இந்த சந்தோஷம், ஆனந்தம், குதூகலம் மற்றும் உற்சாகம் அனைத்தும் நமது உள்ளத்தில் ஏற்கனவே இருக்கிறது. ஆனால் நாம் தான் எப்போதும் துக்கம் என்னும் உணர்வையே தேர்ந்தெடுத்து விடாப் பிடியாக பின் பற்றி வருகிறோம்.

நீங்கள் இந்தக் கதையை எப்போதோ கேள்விப் பட்டிருக்கக் கூடும்:
ஏதோ ஒரு ஊரில் ஒரு பேராசிரியர் தனது மாணவர்கள் அனைவரையும் அழைத்தார். ஒரு வெள்ளைத் தாளை காண்பித்தார். அந்த தாளின் மையத்தில் ஒரு சிறிய கரும்புள்ளி வைக்கப் பட்டிருந்தது. தாளை காண்பித்து அதில் என்ன தெரிகிறது என மாணவர்களை கேட்டார். ஒரு ஆள் விடாமல் அனைவ‌ரும் ஒரு கரும் புள்ளி தெரிவதாக சொன்னார்கள்.
பேராசிரியர் சிறிது மௌனத்திற்கு பிறகு சொன்னார் "எனது அன்பு மாணவர்களே, இந்த தாளில் வெண்மையான மிகப் பெரிய பகுதி உள்ளது. ஆனால் நாம் அதை விட்டு விட்டு கரும்புள்ளியில் மட்டுமே கவனம் கொள்கிறோம். இது தான் மனதின் இயல்பு. வாழ்க்கையில் எவ்வளவோ சந்தோஷமான விஷயங்கள் இருந்தாலும், சின்ன சின்ன எதிர் மறையான நெருடல்களிலேயே நாம் கவனம் செலுத்துகிறோம். அதையே நினைத்து மனம் வருந்தி நேர விரையம் செய்கிறோம்."

அதற்காக ஒரு பிரச்சனை வரும் போது அதனை கண்டு கொள்ளாமல் ஜாலியாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்பது அர்த்தமில்லை. அந்த பிரச்சனையை சந்திக்க வேண்டும். அதனை வெற்றிகரமாக தீர்க்க வேண்டும். அதனை வெற்றி கொள்ளும் போது ஒரு சந்தோஷம் ஒரு திருப்தி ஏற்படுகிறதல்லவா, அதில் நிலை கொள்ள வேண்டும்.

ஆனால் நாம் எப்போதும் எதிர் மறையான எண்ணங்களையே நினைத்து வருந்தி வாழ்ந்தால் அது ஒரு பழக்கமாகவே மாறி விடுகிறது.மேலும் மேலும் கவலைகளை உற்பத்தி செய்கிறோம்.

நாம் வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்களை ச்ந்திக்காமலில்லை. சந்திக்கிறோம். ஆனால் எவ்வளவு நேரம் அந்த சந்தோஷத்தில் நிலை கொள்கிறோம் என்பதில் தான் விஷயம் உள்ளது.

சரி, இதற்கு மாறாக எப்போதும் மகிழ்ச்சியாக குதூகலமாக வாழ முடியுமா? கண்டிப்பாக முடியும். ஏனென்றால் சந்தோஷமானாலும், துக்கமானாலும் அந்த உணர்வு நமது உள்ளே இருந்து தான் வெளிப்படுகிறது. அதாவது அந்த உணர்வு ஏற்கனவே அங்கு உள்ளது. புறச் சூழ்நிலைகள் வெறும் கருவிகளே.

இந்த கருவிகளை தவிர்த்து நாமே வேண்டிய உணர்வுகளை உற்பத்தி செய்ய முடிந்தால் பிரச்சனை முடிந்த‌து.

உண்மையான ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் நாம் இழந்த நிலையில் உள்ளோம்.

நமது மனதை துக்கதின் பிடியிலிருந்து அகற்றி சந்தோஷத்தில் லயிக்க வைக்க தியானம் மிகச் சிறந்த, மிக எளிய வழியாகும்.

தியானம் நமது வாழ்க்கையை ஒழுங்கு செய்யவல்லது, நமது நேர்மறை சக்தியை பெருக்க வல்லது, சந்தோஷத்தையும் பேரானந்தத்தையும் தர வல்லது.

சொல்லப் போனால் அது நாம் கற்பனை செய்வதை விட மிகுந்த மகிழ்ச்சியை தரக் கூடியது.

தியானிப்போம். வளமாக வாழ்வோம். வாழ்க வையகம்.!வாழ்க வளமுடன்..!  

Apr 14, 2010

மனோபாவம் என்னும் மந்திரஜாலம்!


நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனோபாவம் உள்ளது.

நமது மனதின் தன்மை தான் மனோபாவம்.

ஒவ்வொருவருக்கும் இத்தன்மை வேறு படலாம்.

நம்முடைய மனோபாவம் எது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

நாம் பெரும்பாலும் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பதை வைத்து நமது மனோபாவம் அமைகிறது.

சில பேர் எப்போதும் கவலைப்படுபவர்களாகவோ, கோபப்படுபவர்களாகவோ, பயப்படுபவர்களாகவோ அல்லது தன்னம்பிக்கையின்றி சலனபுத்திக்காரர்களாகவோ இருப்பர்.

சிலர் எப்போதும் இனிய முகத்துடன் கம்பீரமாகவும், தன்னம்பிக்கையுடனும், நேர் மறையான அணுகுமுறையுடனும் இருப்பர்.

சரி, ஏன் மனிதர்க்கு மனிதர் மனோபாவம் வேறு படுகிறது?

காரணம் அவர்களின் உள்ளங்களில் அது வரை அவர்கள் கொண்டிருக்கும் எண்ணங்கள், நம்பிக்கைகள் தான்.

ஆக, நமது எண்ணங்களை மாற்றுவதன் மூலம் நமது மனோபவத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

மனோபாவம் மாறினால் அனைத்தும் மாறும். நமது முழு வாழ்க்கையிலும் மாற்றத்தைக் காணலாம்.

நேர்மறை மனோபாவத்துடன் எப்போதும் நாம் இருந்து வந்தால் அனைத்தும் சாத்தியம்!

ஏதாவது சூழ்நிலையில் மிகவும் கவலையாகவோ தன்னம்பிக்கையின்றியோ உணர்கிறீர்களா?

உடனே உஙகள் மனோபாவத்தை மாற்றுங்கள்! நம்பிக்கையான எண்ணஙகளை எண்ணுங்கள்.

அந்த கணமே நீங்கள் மந்திரம் போட்டது போல் சட்டென்று ஒரு தன்னம்பிக்கை கொண்ட மனிதராக மாறி விடுவீரகள்!

உங்கள் மனோபாவம் மாறிய உடன் நீஙகள் வேறு ஒரு அலை இயக்கத்தில் பிரவேசிக்கிறீரகள்!

அந்த அலை இயக்கத்தில் நுழைந்தவுடன் நீஙகள் ஒரு வித்தியாசமான ஆற்றல் மிக்க மனிதராக மாறி விடுகிறீரகள்!

உங்கள் முன்னுள்ள பிரச்சனைகள் காணாமல் போய் விடுகிறது. உங்கள் முன்னுள்ள எதிர்மறையான விஷயங்கள் காணாமல் போய் விடுகின்றன.

ஆம். அது அப்படித் தான். ஏனென்றால் எதிர் மறையான விஷயங்களின் அலை வேகமும், நேர் மறையான விஷயங்களின் அலை வேகமும் வேறு வேறு. அவை எப்போதும் பொருந்தாது.

அவை உங்களை விட்டு விலகித் தான் ஆக வேண்டும்!

உங்கள் முழு சூழ்நிலையும் மாறி விடுகிறது - நீங்கள் ஒரு ஆற்றல் மிக்க மனிதராகி விடுகிறீர்கள்!

உங்கள் இலக்கை எளிதில் அடைகிறீர்கள்!

சரியான முயற்சி இருந்தால் இது மிகவும் எளிது தான்.

ஆகவே நமது மனோபாவத்தை மாற்றுவோம் - மகத்தான வெற்றி காண்போம்!

Feb 11, 2010

பெண்ணினத்தின் பெருமை - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி


ஆணகளுக்கும், பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் இது தான். கணவன் அலுவலகத்திற்கோ தொழிற்சாலைக்கோ போகும் போது கூட மனைவியானவள் "அவரை நல்லபடியாகக் காப்பாற்று," என்று ஏதேனும் ஒரு தெய்வத்தை வேண்டிக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். சமுதாயத்தில் ஒரு பழக்கமாகவே இது வந்து விட்டது. ஆனால் ஆண்களோ நல்லதாக இருந்தாலும் பெண்ணை பாராட்டுவதற்கு ஒரு கஞ்சத்தனம்! பெரிய பெரிய நன்மைகளை எல்லாம் தொடர்ந்து பெற்றவர்கள் கூட என்ன எண்ணத்தில் இருக்கிறார்கள்? ஒரு சிறிய பாராட்டு வாய் திறந்து சொன்னால் அவள் கை ஓங்கி விடுமாம்!  தானாக தன்னுடைய மனைவியைப் பாராட்டி அதிலே இருந்து அந்த இன்பத்தை அடையக் கூடிய மறுக்கக் கூடிய உள்ளங்களுக்கு அன்பு என்பது எங்கே உண்டாகும்? இதற்கு அடிப்படைக் காரணம் என்ன என்றால் நீண்ட காலமாகப் பழக்கத்தில் பெண்களை சாதாரணமாக உபயோகப்படக் கூடிய பொருளாகவே மதித்து மதித்து, அதே மாதிரி நிலையிலே பல நூல்கள் வந்ததனால் அந்தக் கருத்து இன்றும் நிலவி வருகிறது. பெண்களுக்குச் சம உரிமை மாத்திரம் இல்லை, பெரிய மதிப்பும் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அது தான் எனது கவிதை நூலிலே ஒரு கவியிலே எழுதி இருக்கிறேன்:

"பெண் வயிற்றி லுருவாகிப்
பெண் பாலுண்டே வளர்ந்தாய்
பெண் துணையால் வாழ்கின்றாய்
பெண்ணின் பெருமை உணர்,"

என்று, தாய்க்குலத்திற்கு நாம் ஏன் அவ்வளவு மதிப்புத்தர வேண்டியதாக இருக்கிறது என்று உலக சமாதானம் என்ற நூலில் ஒரு இடத்தில் விளக்கம் கொடுக்கும் போது,

"பெண்ணினத்தின் பெருமதிப்பை உணர்ந்தே உள்ளேன்
பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறென்ன
பெருமை இதை விட எடுத்துச் சொல்லுதற்கு?
பெண்ணினத்தின் இயல்பு பெற்ற மக்கள் தம்மை,
பிறர் வளர்க்க அனுமதியார், மனமும் ஒவ்வார்,
பெண்ணினத்தின் விடுதலைக்கு இந்தத் தியாகம்,
பேருலக அமைதிக்கும் அவசியம் ஆம்,"

என்று எழுதியுள்ளேன்.  வேறு என்ன பெருமை இதைவிட எடுத்துக் கூறுவதற்கு? வேறு ஒரு பெருமையும் நீங்கள் பேச வேண்டியதில்லை; எல்லாருமே பெண்களால் அளிக்கப்பட்ட, பெறப்பட்ட பிள்ளைகள்தான் என்பதை உணர்ந்தாலே போதும்.  சம உரிமை மாத்திரம் அல்ல, இன்னும் பிரத்தியட்சமாக சில உரிமைகள்கூட அவர்களுக்குக் கொடுத்து நாம் வாழ வைக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். போன காலம் எல்லாம் போகட்டும், இனி வருங்காலத்திலேயாயினும் முதலில் அவரவர்கள் வீட்டிலே தொடங்க வேண்டும்.

- அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். - நன்றி: வேதாத்திரி பதிப்பகம், 180, காந்திஜி ரோடு, ஈரோடு - 638 001.

Jan 15, 2010

தியானம் செய்வது எப்படி?



தியானம் செய்வது எப்படி என்று, நீட்டி முழக்காமல் ஒரே வரியில் சொல்லுங்கள் என்று யாராவது கேட்டால்
- மனதை வெறுமையாக்குவது தான் தியானம் என்று சொல்லலாம்.

ஆனால் மனதை வெறுமையாக்குவது எப்படி என்று மறுபடியும் கேட்டால், நீட்டி முழக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

மனதின் இயல்பு தொடர்ச்சியாக எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டு இருப்பது.

நமது ஆழ் மனப்பதிவுகளின் பிரதிபலிப்பே இந்த எண்ண ஓட்டங்கள்.

அவை இழுத்த இழுப்பிற்கெல்லாம் நாமும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் மனம் ஒரு கருவி மட்டுமே.

ஆன்மிக குரு ஓஷோ சொல்லுவார் - மனம் நமது கால்களைப் போல் ஒரு உறுப்பு. அதனை எப்போது வேண்டுமோ அப்போது உபயோகப் படுத்த வேண்டும். நாம் எப்போதுமே கால்களை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை - என்று.

நம்முடைய சுயம் மனதை தாண்டி இருக்கிறது.

நாம் என்கின்ற சுயம் தான் எஜமான். மனம் வெறும் வேலைக்காரன் தான்.

ஆனால் எஜமான் காணாமல் போயிருப்பதால் அல்லது பலம் குன்றியிருப்பதால் வேலைக்காரனின் கொட்டம் அதிகமாகி விட்டது.

வேலைக்காரனின் கொட்டத்தை அடியோடு ஒழிப்பது தான் தியானம்.

எஜமானின் இழந்த கவுரவத்தை, பலத்தை மீட்டுவது தான் தியானம்.

வேலைக்காரனை அதட்டி கொட்டத்தை மட்டுமே அடக்குகிறோம். வேலையை விட்டு நீக்க வேண்டியதில்லை. நீக்கவும் கூடாது. அவனுடைய உதவி அவசியம் தேவை.

ஆனால் எப்போது தேவைப்படுகிறதோ அப்போது உதவி செய்தால் போதுமானது. எஜமான் சொல்வதை கேட்டு நடந்தால் போதுமானது.

அப்படியானால் அவனை முதலில் கட்டுப் படுத்த வேண்டும்.

எஜமான் இருப்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும்.

மனம் எப்போதும் கூச்சலிட்டுக் கொண்டு பிதற்றிக் கொண்டு திரிவதால் எஜமான் இருப்பதை கவனிப்பதே இல்லை.

எண்ண ஓட்டத்தை படிப்படியாக குறைத்தால் தான் தியானம் நிகழ்கிறது.

தியானத்திற்கு நிறைய வழி முறைகளை பெரியோர்கள் வகுத்துச் சென்றுள்ளனர்.

அதில் ஒன்று தான் எண்ணங்களை கவனித்தல்.

எண்ணங்களை கவனிப்பது தான் நம் சுயம் - விழிப்புணர்வு - எஜமான்!

வேலைக்காரனின் சேட்டைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாலே, மெதுவாக அடங்க ஆரம்பிப்பான்.

இவ்வளவு நாள் வேலைக்காரனுடன் சேர்ந்து சுற்றிய பழக்கத்தில் எஜமானுக்கு  அவனை தொடர தோன்றினாலும் விருப்பு வெறுப்பின்றி அவனது நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும்.

நமது சுயம் மனதுடன் சேராமல் தனித்து விலகி நின்று பார்க்க பார்க்க மனம் எண்ண ஓட்டத்தை மெல்ல நிறுத்துகிறது.

நமது விழிப்புணர்வு இன்னும் அதிகமாக அதிகமாக மனம் வெறுமையாகிறது.

அந்த வெற்று மனதில் தான் தியானம் என்னும் அந்த அற்புதம் நிகழ்கிறது!

வெற்று மனதின் சக்தி அபாரமானது.

வெற்று மனதின் சக்தியை பற்றி பின்வரும் சிறிய காணொளி (வீடியோ) யில் புரூஸ்லீ கூறியதை பாருங்கள்:


“Empty your mind, be formless… shapeless, like water. If you put water into a cup, it becomes the cup. You put water into a bottle; it becomes the bottle. You put it into a teapot; it becomes the teapot. Water can flow, or it can crash. Be water, my friend…”
"Be Water, my friend..!"

Dec 1, 2009

பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி?



உங்கள் முன் ஒரு பிரச்சனை வந்துள்ளது.

முதலில் அது எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

ஓடி ஒளிய வேண்டாம்! நெஞ்சை நிமிர்த்தி வீரமாக அதனை அணுகுங்கள்!

'அச்சமில்லை, அச்சமில்லை.. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்' என்ற மகாகவியின் பாடலை நினைவு படுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் சிறிது கூட எதிர்பார்க்காத பிரச்சனை ஆனாலும், 'சரி நடந்தது நடந்து விட்டது. நடந்ததை மாற்ற முடியாது. அதனை நினைத்து அப்படி செய்திருக்கலாம், இப்படி நடந்திருக்கலாம் என குழம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை. இப்போது நாம் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்று தான். என்னவென்றால் இந்த பிரச்சனையில் இந்த சமயத்திலும் நமக்கு சில சாதகமான விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அவற்றை கண்டுபிடித்து அவற்றை உபயோகித்து இந்த பிரச்சனையை இருந்த இடம் தெரியாமல் வெற்றி கொள்ள முடியும்' என்ற உறுதி ஏற்க வேண்டும்.

பிரச்சனையில் ஜெயிப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் துணிவுடன் எதிர் கொண்டு ஜெயிப்பதில் தான் மனிதனின் வீரம் உள்ளது.

'இப்படி நடந்திருக்கலாம்..அப்படி பண்ணியிருக்கலாம்' என இறந்த காலத்தையே நினைத்து வருந்துவது கோழைகளின் செயல்!

நடந்தது நடந்து விட்டது. இப்போது நிகழ்காலத்தில் அதனை அலசி ஆராய்ந்து நாம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தான் பிரச்சனையை போக்கும்.
குறைந்த பட்சம் இப்போது என்னென்ன செய்யலாம் என்று முடிவு எடுக்க வேண்டும். நல்ல வேளை பிரச்சனையை தீர்க்க இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதை நினைத்து கவலையை போக்கிக் கொள்ள வேண்டும்.

முடிவெடுக்காமல் நடந்ததையே நினைத்து கோழையாய் வருந்துவது நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தடுக்கும். பிரச்சனையை மேலும் அதிகப் படுத்தும்.

முக்கியமான விஷயமென்னவென்றால் தவறான முடிவுகள் மட்டும் தோல்விக்கு காரணமல்ல. முடிவெடுக்காத தன்மையும் தான்!
ஆனால் நாம் தைரியமாக எடுக்கும் முடிவுகள் கூட நமது தன்னம்பிக்கையை அதிகரித்து பிரச்சனையின் வீரியத்தை குறைப்பதற்கு உதவும்.

ஆனால் பயந்து கொண்டு எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால் நாம் மனதின் ஆழத்தில் அந்த பிரச்சனையை பார்த்து பயந்து அப்படி ஆகி விடுவோமோ, இப்படி ஆகி விடுவோமோ என்று பயப்படுகிறோம் என்று அர்த்தம். அந்த ஆழ்மன பயமே நாம் விரும்பத்தகாத விளைவுகளை அழைத்து வரலாம்.

ஆக பிரச்சனை வந்து விட்டால் துணிந்து அதனை எதிர் கொள்ள வேண்டும்.

'இந்த பிரச்சனைக்கு நாம் விரும்பும் முடிவு என்ன? இந்த முடிவு நமக்கும், மற்றவர்களுக்கும் இப்போதும், வருங்காலத்திலும் என்னென்ன முடிவுகளை ஏற்படுத்தும்' என நன்கு ஆழமாக அலசி எண்ணி பார்க்க வேண்டும்.

முடிவுகளின் விளைவுகளை நமது அனுபவத்தை வைத்தும், நண்பர்களின் ஆலோசனையை கேட்டும் கணித்து முடிவு எடுக்க வேண்டும்.

சிறிய முடிவுகள் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்தவை என்பதை உணர்ந்து நன்கு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

அதற்காக பயந்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது இன்னும் பிரச்சனையை கொடுமையாக்கும்.

மேலும் அலசி ஆராய்ந்து முடிவு எடுப்பது சரியான முடிவு எடுப்பதற்கு மட்டும் உதவாமல், நாளை நாம் எடுக்கும் முடிவு எந்த விளைவை ஏற்படுத்தினாலும் ' நாம் ஒன்றும் ஒற்றையா ரெட்டையா போட்டு முடிவெடுக்கவில்லை..நன்கு அலசி ஆராய்ந்து தான் எடுத்தோம் என்று மனம் சமாதானமாகும்.

அடுத்தது நமது முடிவை அடைய, செயல் படுத்த தற்போது என்னென்ன வழிகள் உள்ளன என்று ஆராய வேண்டும்.

கண்டிப்பாக பிரச்சனையை ஆராய்ந்தால் நமக்கு சாதகமான ஆயிரம் வழிகள் இருக்கும்! அவற்றை ஒரு தாளில் எழுத வேண்டும். இதற்கு நமது படைப்பு ஆற்றலை உபயோகப்படுத்தினால் வித விதமான யோசனைகள் வரும்.

அடுத்தது தைரியமாக அவற்றை ஒவ்வொன்றாக செயல் படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்தால் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் போவதை கண் கூடாக பார்க்கலாம்.

மேலும் இந்த பிரச்சனையை அணுகும் செயல்பாடுகள் முழுவதிலும் நமது மனோபாவம் நேர்மறையாகவும், வெற்றியை எதிர் நோக்கி இருப்பதாகவும் இருக்க வேண்டும்.

ஒரு கப்பல் மாலுமியின் மனக் கண்ணில் சென்று சேர வேண்டிய இடம் குறிக்கோளாக இருப்பது போல் வெற்றி நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அது நமக்கு சரியான யோசனைகளையும், சரியான சூழ்நிலைலைகளையும் நம்முடன் இணைத்து விடும். வெற்றியை தேடித்தரும்.

இது என்னுடைய கருத்து மட்டுமே ஏற்கனவே நீங்கள் Probelm solving ங்கிற்கு சிறந்த நுட்பத்தை கையாண்டு வந்தால் அதனை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

Nov 23, 2009

அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி பதில்




ஐயா, நீங்கள் பெண்களை உயர்த்திப் பேசி அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். இது சரியா?


நீங்கள் இந்த உலகத்திற்கு எப்படி வந்தீர்கள்? உங்களை ஒரு பெண் அல்லவா தன் வயிற்றில் பத்து மாதம் வைத்து காத்து உருவாக்கினாள்! 
அப்பொழுது அவள் உண்ட உணவை, அவள் சுவாசித்த காற்றை அல்லவா நீங்கள் பங்கிட்டு கொண்டிருந்தீர்கள்? மேலும் முதன் முதலில்
இந்த உலகிற்கு வந்தீர்களே, அங்கு உங்களுக்கு தன் ரத்தத்தை அல்லவா பாலாக மாற்றி முதல் உணவாக அளித்தாள்.


நாம் கடைகளில் சென்று ஒரு புதிய வாகனம் வாங்கும் பொழுது அந்தக் கம்பெனியே உங்களுக்கு முதல் பெட்ரோலை இட்டு நிரப்பி நீங்கள் சிறிது தூரம் வாகனத்தை இயக்குவதற்கு உதவி செய்வது போல், தாய் தானே உங்களுக்கு தன் ரத்தத்தை பாலாக்கி முதல் உணவு (Fuel) அளித்து நீங்கள் உயிர் வாழ உதவினாள். அதற்கு மேலும் பல மாதங்கள் அந்தத் தாயின் பாலைக் குடித்து தானே வளந்தீர்கள்.


"அந்தப் பெண்மை தானே உங்களுக்கு வாழ்க்கைத் துணையாகவும் வந்து வாழ்நாள் முழுவதும் உங்கள் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு நீங்கள் வீடு பேறு அடையவும் உதவுகிறாள். இயதில் ஏதாவது ஒன்றை உங்களால் மறுக்க முடியுமா? இவ்வளவு பெருமை வாய்ந்த பெண்ணினத்தைப் போற்றுவதில் உங்களுக்கு கஞ்சத்தனமும் பொறுக்க முடியாமையும் ஏன் வர வேண்டும்?" 

- நன்றி: அருள் தந்தையின் பதில்கள் பாகம் 2 - வேதாத்திரி பதிப்பகம். 

Oct 6, 2009

மனதைப் பழக்கினால் மகத்தான வெற்றி!!


தலைப்பைப் படித்தவுடன் யாருக்காவது தோன்றலாம்:

'ஆமாம்..அவனவன் அலைஞ்சு திரிஞ்சு உழைச்சு முயற்சி பண்ணினாலே ஜெயிக்கறதுக்கு எவ்வளவு பாடு பட வேண்டியிருக்கு..இவரு மைனர் மாதிரி உக்காந்துட்டு மனசைப் பழக்குவாராம்..அப்படியே வெற்றியெல்லாம் வந்து குவியுமாம்..போய் பொளப்பப் பாருங்கய்யா..'

கண்டிப்பாக உழைப்புக்கு வெற்றியுண்டு தான்.

ஆனால் நாம் நமது மனதைப் பழக்கும் போது நமது எண்ண ஆற்றல் நம்மை உந்தி சரியான திசையில், சரியான முறையில் செயல்பட வைத்து வெற்றியை தேடித் தரும் என்பதே உண்மை.

சரி, நமது குறிக்கோளை அடைய மனதைப் பழக்க என்ன செய்ய வேண்டும்?

மிகவும் எளிது. இரண்டு விஷயங்களை செய்தால் போதும்.

1. நமக்கு எதை விரும்புகிறோமோ, எதை சாதிக்க நினைக்கிறோமோ அதை மட்டும் நினைக்க வேண்டும்.
2. எது வேண்டாமோ அதை நினைக்க கூடாது.

நமது இப்போது உள்ள நிலையை பொருட்படுத்தாமல் நமது குறிக்கோளுக்கு ஒத்த எண்ணங்களை நினைக்க வேண்டும்.

இதன் மூலம் நமது மனம் நமது செயல் திறனை கூட்டி, நம்மை குறிக்கோளை நோக்கி சரியான திசையில் இட்டு செல்லும்.

நாம் வெற்றி பெற நமக்கு சரியான சிந்தனைகளை அவ்வப்போது சொல்லும்.

மேலும் சரியான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.

நாம் என்ன எண்ணுகிறோமோ அதைத் தான் பெறுவோம்.

ஆகவே மனதைப் பழக்கினால் மகத்தான வெற்றி நிச்சயம்!

Oct 4, 2009

அவசர தேவை: வெற்றி மனோபாவம்!



நாம் ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போது வெற்றி மனோபாவத்துடன் ஆரம்பிக்கிறோமா?

'கண்டிப்பாக அப்படித்தான் ஆரம்பிக்கிறோம்..ஆமாம் வெற்றி மனோபாவம் என்றால் என்ன?'  என்று யாராவது கேட்கலாம்.

அவர்களுக்கெல்லாம் நான் இரண்டு வரிகளுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைந்து சொல்ல வருவது என்னவென்றால் அந்த செயல் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற உறுதியான உணர்வு நம் மனதில் ஏற்படுகின்றதல்லவா? அது தான்.

நண்பர்கள் நன்றாக கவனிக்கவும் - நான் உறுதியான உணர்வு என்று தான் சொல்கிறேன். எண்ணம் என்று சொல்லவில்லை.

ஏனென்றால் எண்ணம் என்பது நமது மேல் மட்ட மனதில் தோன்றுவது. உணர்வு என்பது உள்மனதில் ஏற்படுவது. அதற்கு சக்தி அதிகம்!
அந்த சக்தி நம்மை சரியான வழியில் நடத்திச் சென்று நமது குறிக்கோளை அடைய உதவும்.

சும்மா நமது உணர்வு மனதில் அந்த செயலில் ஜெயித்துக் காட்டுவோம் என்று வற்புறுத்தி நாம் நினைக்கலாம்.

ஆனால் சக்தி வாய்ந்த நமது ஆழ்மனக் கிடங்கில் உள்ள நாம் சேர்த்து வைத்த நமது பழைய குப்பைகள் அந்த நம்பிக்கைகளுக்கு எதிரானவையாக இருந்தால் பயனில்லை.
அந்த நீண்ட நாளைய சேமிப்புக்கு தான் சக்தி அதிகம். அவை 'இவரு ஜெயிச்சுருவாரோம்ல...என்ன கொடுமை சார் இது?'  என கேலி செய்யலாம்.

ஆக அந்த குப்பைகளை காலி செய்ய வேண்டும். எதிர்மறை எண்ணங்களை வேரோடு பிடுங்கி களைய வேண்டும். விழிப்புணர்வுடன் இருந்து மேலும் அவை முளைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆழ்மனதில் நன்னம்பிக்கைகளை விதைக்க வேண்டும்.

அந்த நல்ல நம்பிக்கைகள் நமக்கு வெற்றி மனோபாவத்தை ஏற்படுத்தும்.

சாதிக்கும் சக்தியை கொடுக்கும்.

வெற்றி மனோபாவத்துடன் நாம் செயல்பட ஆரம்பித்தோமானால் நமது சாதனைகளுக்கு வானமே எல்லை!!

 

Sep 5, 2009

சூழ் நிலைகளை உருவாக்குவோம்!


நாம் வழக்கமாக நம்மை சுற்றி ஏற்படும் சூழ் நிலைகளில் நம்மை இணைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் நமது சூழ் நிலைகளை நாமே உருவாக்க முடியும் என்பதை உணர வேண்டும்.

நமது சூழ் நிலைகளுக்கு நாமே பொறுப்பு. நாமே அதனை நிர்ணயிக்க கூடிய தலைவர்.

இது வரையிலும் நமது பதிவுகளில் எண்ணங்கள் ஈர்ப்பு சக்தி உடையன, அவை சூழ் நிலைகளை, மனிதர்களை கவரும் தன்மை உடையன என்பதை அடிக்கடி விவாதித்து வருகிறோம்.

அனைத்திற்கும் ஆணி வேர் எண்ணங்களே!

நமது எண்ணங்கள் எப்போதும் கவலை, பயம், பதட்டம், குழப்பம், சோம்பேறித்தனம் என்று எதிர் மறையாக இருந்தால் சூழ் நிலைகளும் அதே போல் அமையும்.

அதற்குப் பதிலாக எப்போதும் நேர் மறை எண்ணங்களான அனைவருக்கும் நல்லதை நினைத்தல், தன்னம்பிக்கை, துணிவு, மகிழ்ச்சி, அமைதி, சுறுசுறுப்பு என்பனவற்றை கொண்டிருந்தால்
நம்மை சுற்றி நல்ல மனிதர்களும், சூழ் நிலைகளும் அமைவதை காணலாம்.

எதிர் மறை எண்ணங்கள் ஏற்படுவதை கவனித்து தன்னம்பிக்கை தரும் எண்ணங்களை எண்ண மனதை பயிற்றுவிக்க வேண்டும்.

அதற்கு விழிப்புணர்வு அவசியம். விழிப்புணர்வின் மூலம் பிறரின் எண்ணங்கள், செயல்களிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம்.

நமது எண்ணங்கள் நம்மை மட்டுமின்றி சமுதாயத்தையும் பாதிக்கிறது.

எனவே உலகில் பெரும்பாலானவர்கள் நேர் மறை எண்ணங்களையே எண்ணி வந்தால் இவ்வுலகம் மகிழ்ச்சி பூங்காவாகி விடும்.


Aug 28, 2009

நமது இன்றைய நிலைக்கு முந்தைய எண்ணங்களே காரணம்!


நாம் இன்று இருக்கும் நிலைக்கு நாம் இது வரை எண்ணிய எண்ணங்களே காரணம் என்றால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

ஏற்றுக் கொள்ள தான் வேண்டியுள்ளது.

நமது இன்றைய நிலை எப்படி பட்டதாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இந்த நிலைக்கு, இந்த இடத்திற்கு நம்மை கொண்டு வந்து சேர்த்தது நாம் இது வரை எண்ணிய எண்ணங்களின் ஒட்டு மொத்த விளைவு தான்.

இதுவரை நாம் எண்ணிய எண்ணங்களின் ஒட்டு மொத்த கலவை தான் நமது தற்போதைய சுபாவம், உலகில் நாம் உள்ள நிலைக்கு முக்கிய காரணமாகின்றன.

இந்த இடத்தில் சமுதாய எண்ணங்கள், அதாவது நம்மை சுற்றியுள்ளவர்களின் எண்ணங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஆம்! நம்மை சுற்றியுள்ளவர்களின் எண்ணங்களும் நம்மை பாதிக்க தான் செய்கின்றன.

அவை நல்ல எண்ணமாகவும் இருக்கலாம் அல்லது தீயதாகவும் இருக்கலாம்.

தீய எண்ணங்கள் முதலில் எண்ணுபவருக்கு தீமை விளைவித்தாலும், அவற்றிலுருந்து நம்மை பாது காத்து கொள்வதும் அவசியமாகிறது.

அதற்கு விழிப்புணர்வு தேவை.

எந்த சூழ்நிலையிலும் மதி (அறிவு) மயங்காத விழிப்புணர்வு அவசியமாகிறது.

விழிப்புணர்வு மற்றவர்களின் எண்ணங்களிலிருந்து நம்மை பாது காப்பதோடன்றி நல்ல எண்ணங்களை, நமது குறிக்கோளுக்கு ஒத்த எண்ணங்களை எண்ண துணை புரிகின்றது.

அவ்வெண்ணங்கள் நம்மை நல்லவற்றை செய்யவும், நமது குறிக் கோளை அடையவும் வழி கோலுகின்றன.

ஆக நமது வருங்காலத்தை நமது தற்போதைய எண்ணங்களின் மூலம் நிர்ணயம் செய்வோம்! விழிப்புணர்வுடன் வாழ்வோம்!

Aug 27, 2009

விரும்புவதை எளிதாக அடைய என்ன தேவை?


நாம் விரும்புவதை அடைய ஒரு எளிய வழி உள்ளது.

அந்த வழி நமது மகத்தான ஆழ்மன சக்தியின் மூலமாக விரும்புவதை அடைய துணை புரிகின்றது.

அந்த வழி என்ன என்று கேட்கிறீர்களா? நிற்க.

அது தான் சுய உருவக மாற்றம். (இப்போது உட்காரலாம்!)

நாம் இப்போது உள்ள நிலைக்கு காரணம் நாம் நம்பிக் கொண்டிருக்கும், நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் நமது சுய உருவகம் தான்.

ஆகவே இந்த தற்போதைய சுய உருவகத்தை வைத்துக் கொண்டு நமது குறிக்கோளை விரும்புவதை அடைய முடியாது.

ஏனென்றால் நமது தற்போதைய அதிர்வுக்கும், நமது குறிக்கோளுக்கான அதிர்வுக்கும் இடைவெளி உள்ளது, தொலைவு உள்ளது.

அப்படியென்றால் விரும்புவதை அடைபவர்களும், குறிக்கோளை தொடுபவர்களும் இது போல் எங்காவது மூலையில் உட்கார்ந்து கொண்டு சுய உருவகத்தை மாற்றி கொண்டு தான் சாதிக்கிறார்களா என யாராவது நண்பர்கள் பின்னூட்டத்தில் கேட்கலாம்.

விஷயமென்னவென்றால் நமது குறிக்கோளை அடைய நாம் எடுக்கும் செயல்பாடுகள் தன்னிச்சையாகவே நமது சுய உருவகத்தை மாற்றி விடுகிறது.

அதற்கு பதிலாக சுய உருவகத்தை முதலில் மாற்ற முனைந்தால் அதுவே நம்மை நம் குறிக்கோளை நோக்கி சரியான வழியில் வேகமாக செயல்பட வைக்கும்.
தகுந்த சூழ்நிலைகளையும், மனிதர்களையும் நம்மிடம் சேர்க்கும்.

நம் லட்சியத்தை எளிதாக அடைய வழி வகுக்கும்!

Aug 18, 2009

எண்ணஙகளின் ஆற்றல்!


எண்ண ஆற்றல்களைப் பற்றி அனைவரும் அறிவோம்.

எண்ணங்கள் எவவளவு சக்தி படைத்தன, எண்ணஙகள் நமது வாழக்கையை கட்டுப்படுத்துவன என ஞானிகள் மற்றும் அறிஞர்கள் சொல்வதை கேட்டிருக்கிறோம்.

ஆகவே நாம் எண்ணங்களை கண்காணிக்க பழக வேண்டும்.

நாம் நமது எண்ணங்களை தொடர்ந்து ஆராய்ந்து வந்தால் விரைவில் நாமும் அறிஞர்களாக திகழலாம் என்றார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

கவலை, பயம், பொறாமை, சினம் முதலிய தீய எண்ணங்களை கவனித்து ஒதுக்க வேண்டும்.

பழக்கத்தில் வரும் இந்த எண்ணஙகளை விழிப்புணர்வுடன் கண்டு கொண்டு அதற்கு பதிலாக நல்ல எண்ணங்களை எண்ணி வர வேண்டும்.

இதனை ஒரு பயிற்சியாக செய்து வரலாம்.

தீய எண்ணஙகள் நமக்கும் நமது சூழ் நிலைக்கும் தீமை பயக்கும் என்பதை உணர வேண்டும்.

அடுத்தவருக்கு நாம் நன்மை நினைப்பது நமக்கும் நன்மை தரும் என்பதை அறிய வேண்டும்.

எண்ணங்கள் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவை என்பதையும் அவை அவற்றுக்கு ஒப்பான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் ஈர்க்க வல்லன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நமக்கும் மற்றவர்களூக்கும் நல்லதையே நினைப்போம். நல்லவற்றையே பெறுவோம்!!

Aug 15, 2009

ம்னதின் பிடியிலிருந்து சுதந்திரம்!


நாம் அனைவரும் ஏதாவது சில விஷயங்களில் சாதனை படைக்க, குறிக்கோளை அடைய விரும்பிகிறோம்.

ஆனால் நம் விருப்பத்தின் படி சாதனை சிகரத்தை தொட்டவர்கள் மிகச்சிலரே.

அதற்குக் காரணம் என்ன என்று பார்த்தால் நமது குறிக்கோளின் பால் நமது எண்ணங்கள் சரியான அளவு ஒரு முகப்படுத்தாமை அல்லது தன்னம்பிக்கையின்மை என்பது தெளிவாக தெரிய வரும்.

நம் உள் மனதில் கொண்டிருக்கும் நம்மை பற்றிய பழைய நம்பிக்கைகளின் பிடியிலுள்ளோம் நாம்!

அந்த மட்டுப் படுததப் பட்ட நம்பிக்கைகள் தான் நமது சாதனைகளுக்கு தடையாக உள்ளன.

பழைய எண்ணங்களை மாற்றுவோம்!

மனதின் பழைய தன்னம்பிக்கை அற்ற தடத்திலிருந்து விடுபடுவோம்.

மனதின் பிடியிலிருந்து சுதந்திரம் அடைவோம்!

புதிய நல்ல, தன்னமிபிக்கை தரும் எண்ணங்களை மட்டும் மனதில் விதைப்போம்!

எண்ணங்களின் அபார ஆற்றல் நம்மை சிறந்த முறையில் செயல் பட வைத்து வெற்றிகளை குவிக்கும் என்பது நிச்சயம்!

Aug 11, 2009

பழக்கத்தின் மாபெரும் ஆற்றல்..!

ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவனிடம் 'வாழைப்பழம்' என்று சொல்லிக் கொடுத்த போது அவன் "வாயப் பயம்" என்று சொல்ல அவனை திருத்த அவனது தந்தையிடம் விஷயத்தை சொன்ன போது
"எங்க பயக்க வயக்கமே அப்படி தாங்க.." என்று சொல்லப் படும் நகைச்சுவை துணுக்கை கேட்டிருக்கிறோம்.

இது வெறும் நகைச்சுவை துணுக்கு மட்டும் இல்லை. சிந்திக்க வேண்டிய சங்கதி.

பழக்கம் எவ்வாறு மனதை ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்.

ஆகவே தான் சிறு வயது முதல் நல்ல பழக்கத்தை பழகு என்று வழக்கமாக பெரியவர்கள் சொல்லுகிறார்கள்.

பழக்கம் என்பது சாதாரண விஷயமில்லை.

நமது வெற்றியை, தோல்வியை நிர்ணயிப்பது பழக்கமே!

ஒரு பழக்கத்தை பழகி விட்டால் அதனை விட முயல்வது எவ்வளவு சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும்.

நாம் ஒரு செயலை செய்து முடித்தவுடன் அந்த செயல் வேண்டுமானால் முடிந்து விடலாம்.

ஆனால் அந்த செயலின் பதிவு ஒரு ஆற்றலாக நமது மூளையில் சேமிக்கப் பட்டு விடுகிறது.

அந்த செயலை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக செய்கிறோமோ அந்த அளவுக்கு அந்த ஆற்றலின் அளவு கூடுகிறது.

நாம் இப்போது கொண்டிருக்கும் சுபாவம், பாவனை அனைத்தும் இவ்வாறு ஏற்பட்டவையே.

எந்த செயலையும் தொடர்ந்து செய்யும் போது நமது மூளையில் உடல் செல்களில் பதிவாகும் அந்த செயல் மீண்டும் மீண்டும் நம்மை அந்த செயலை செய்ய தூண்டுகிறது.

நகம் கடிப்பது, புகை பிடிப்பது போன்றவை பழக்கதின் ஆற்றலை பறை சாற்றுகின்றன.

ஆகவே தான் நல்ல செயல்களையும் நல்ல எண்ணங்களையும் நாமே விரும்பி செய்து பழக்கி கொள்வதும்; தீய செயல்களையும் எண்ணங்களையும் தவிர்ப்பதும் இன்றியமையாததாகிறது.

பழக்கத்தின் ஆற்றலை அறிய நம் அன்றாட வாழ்க்கையிலேயே நிறைய உதாரணங்களை காண முடியும்.

தேர்வுக்கு சிரமப்பட்டு தொடர்ந்து படிப்பவர்கள் ஒரு விஷயத்தை உணர்வார்கள் - தேர்வுகள் முடிந்த பின்பும் படிக்க வேண்டும் போல் ஒரு உணர்வு ஏற்படும்.

தொடர்வண்டியில் நீண்ட பயணம் செய்து விட்டு வருபவர்கள் வீட்டுக்கு வந்தும் அதில் பயணிப்பது போல் உணர்வார்கள்.

சில பேர் எப்போதும் எங்கு செல்வதென்றாலும் தாமதமாகவே, கடைசி நிமிடத்தில் பரபரப்பாகவே செல்வர். யார் எவ்வளவு முறை சொன்னாலும், ஏன் அவர்களே நினைத்தாலும் அதனை மாற்றுவது மிகுந்த சிரமமாக இருக்கும். ஏனென்றால அப்படிப் பட்டோர் நிறைய முறை இதே போல் தாமதமாக சென்று சென்று அந்த பழக்கத்தின் ஆற்றல் அவரிடத்தில் தங்கி விடுகிறது.

ஆகவே அதனை மாற்றுவது கடினமாக உள்ளது.

இருந்தாலும் பழக்கத்தை மாற்றுவது சாத்தியமே! கொஞ்சம் மன உறுதி மட்டும் வேண்டும் பாஸ்! மீண்டும் சந்திப்போம்!

Aug 9, 2009

ஏன் நல்லவற்றையே நினைக்க வேண்டும்?


நாம் எல்லோரும் நினைவு தெரிந்த நாள் முதல் நல்லவற்றையே நினை, நல்லவற்றையே செய் என்ற அறிவுரைகளை கேட்டு வ்ருகிறோம்.

வழக்கமாக ஏதாவது ஆதாயம் இருப்பின் மட்டுமே மனித மனம் எதையும் செய்ய விழையும்.
ஆகவே நலலதை நினைப்பதால் என்ன நன்மை என்பதனை நமது நண்பர்களுடன் பகிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

எண்ணம் என்பது வெறும் வெற்று சமாச்சாரம் அல்ல. எண்ணங்கள் ஆற்றல் வாய்ந்தவை. நாம் எண்ணும் எண்ணங்கள் நம்மை எண்ணத்திற்கு ஒத்த செயல் புரிய தூண்டுவது மட்டுமின்றி நம்மிடத்தில் ஒரு பதிவை ஏற்படுத்துகிறது. மேலும் அது வெளியே சென்று நமது எண்ணத்திற்கு ஒப்பான சூழ்நிலைகளையும் மனிதர்களையும் ஈர்க்கிறது.

எண்ணம் இரு முனை கத்தி போன்றது. ஒருவர் மற்றவருக்கு எண்ணும் கெடுதல் எண்ணம் முதலில் அவரிடத்தில் பதிவை ஏற்படுத்தி விட்டு வெளியே செல்கிறது. அந்த பதிவு எண்ணுபவருக்கு துன்பமாக விளைகிறது.

ஆகவே எப்போதும் நல்ல எண்ணங்களையே தொடர்ந்து எண்ணி வருவது நல்லது.

நல்ல எண்ணங்களை ஒரு பயிற்சி போல் பழகி எண்ணி வர வேண்டும். தீய எண்ணங்கள் ஏற்படும் போது விழிப்புணர்வுடன் உடனே அதனை களைந்து நல்ல எண்ணத்தை விதைக்க வேண்டும்.

விழிப்புணர்வுடன் வாழ்ந்தால் நமக்கு ஏற்படும் தீய எண்ணங்களை எளிதாக தவிர்ப்பதோடன்றி மற்றவர்களின் தீய எண்ணங்கள், செயல்களிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ள முடியும்.

தொடர்ந்து எண்ணும் நல்ல எண்ணங்கள் நம்மை சுற்றி நல்ல அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன். நாம் இருக்கும் சூழலுக்கும் நன்மை விளைவிப்பதாக உள்ளது. நாம் இருக்கும் சமுதாயத்திற்கும் நன்மை விளைவிக்கும்.

ஞானிகள் கூறிய வழியில் இவ்வுலகில் உள்ள யாவரும் நல்லறிவை உபயோகித்து வாழ்ந்து, யாருக்கும் தீங்கு எண்ணாமல் எப்போதும் நல்லதையே எண்ணி வந்தால் இப்பூமி மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் சந்தோஷ பூங்காவாக மாறி விடும்!

Aug 8, 2009

வேலையை ஒத்திப் போடும் பழக்கம்:

வேலையை ஒத்தி போடுவது மனிதன் தோன்றிய காலத்திலிருந்து தொன்று தொட்டு கடை பிடித்து வந்த பழக்கமாக இருக்க வேண்டும்.

எதையும் கடைசி நாளில், கடைசி நிமிடத்தில் செய்வதை பரம்பரை பரம்பரையாக பின் பற்றி வருகிறோம்.

அதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் அந்த செயலை செய்ய பிடிக்காததே என அறிந்து கொள்ளலாம். ஆகவே மனம் அந்த செயலை செய்ய பிடிக்காமல் அப்போதைக்கு தப்பிக்க ஒத்திப் போட முயல்கிறது.

கடைசி நேரத்தில் பயம் வந்து அடித்து பிடித்து செய்து விடுகிறோம்.
அவ்வாறு செய்கையில் தவறு நேர்ந்தாலும் தெரியாது.

செய்ய வேண்டிய வேலையை திட்டமிட்டு முன்னரே முடிக்கும் போது ஏற்படும் திருப்தியும், மகிழ்ச்சியும் நம்மை பதட்டமில்லாமல் அமைதியாக வாழ வழி வகுக்கிறது.

வேலையை ஒத்திப் போடுவதை தவிர்க்க ஏதாவது வழி இருக்கிறதா என தேடியதில் சில வழி முறைகள் கவர்ந்தன, நன்கு பயன் தருவதாகவும் அமைந்தன.

முதல் வழி:

நம் மனம் ஏதாவது வேலையை ஒத்திப் போட முனைந்தால், எப்பாடு பட்டாவது அந்த வேலையில் முதல் அடியை எடுத்து வைத்து விட வேண்டும். விஷயம் என்னவென்றால், எதிலும் முதல் அடியை எடுத்து வைப்பது தான் கடினம். முதல் அடியை எடுத்து வைத்து உள் நுழைந்து விட்டால் அப்புறம் சுலபமாகி விடும். அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது முதல் குவளை நீரில் நனைவது மட்டும் தான் கடினம். நனைந்து விட்டால் அப்புறம் எளிதே. இதற்கு கொஞ்சம் மன உறுதி மட்டும் அவசியம்.

இரண்டாவது வழி:

மனப் பட வழி முறை. – இதுவும் சிறந்த வழிமுறை தான். இதனை பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் விவாதித்துள்ளோம். அதனுடைய சுட்டி இதோ:


நண்பர்கள் தங்கள் கருத்துக்களையும், வேறு வழிகளையும் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.

Jul 29, 2009

சுய உருவகத்தின் மாபெரும் சக்தி..!


முதலில் சுய உருவகம் என்றால் என்ன என்பதை நான்கு வரிகளுக்கு மிகாமல் தெரிந்து கொள்வோம்.

- சுய உருவகம் என்பது ஒருவர் தன்னை பற்றி நம்பிக் கொண்டிருக்கும் நம்பிக்கைகளின் கலவை ஆகும்.
- ஒருவர் தனது சுய உருவகத்தை மாற்றுவதன் மூலம் தனது செயல்பாடுகளை திறமைகளை, ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

நம்மைப் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கைகள் எப்படி உருவாயின என்று ஆராய்ந்தால் இவை நமது சொந்த நம்பிக்கைகள் அல்ல என்று தெரிய வரும்.

சமூகத்தால் திணிக்கப்பட்ட எண்ணங்களையே நமது சொந்த நம்பிக்கைகளாக நினைத்து, நமது ஆற்றல் இவ்வளவு தான் என நினைத்து வாழ்ந்து வருகிறோம்.

நமது மட்டுப்படுத்தப்பட்ட நம்பிக்கைகள் தான் நமது வெற்றியின் எல்லையை விரிவு படுத்த தடையாக இருக்கின்றன.

ஆனால் உண்மையில் எதையும் சாதிக்க வல்ல அபார ஆற்றலை நாம் கொண்டுள்ளோம் என்பதே உண்மை.

நாம் அனைவரும் சாதனையாளராக முடியும்

அதற்கு நமது மட்டுப்படுத்தப் படுத்தப்பட்ட நம்பிக்கைகளை தகர்க்க வேண்டும்!
- நமது சுய உருவகத்தை மாற்ற வேண்டும்.

சுய உருவகத்தை நாம் விரும்பும் குறிக்கோளுக்கேற்றாற்போல் விரிவு படுத்த வேண்டும்.

சுய உருவகத்தை உருவகத்தை மாற்றினால் சூப்பர் வெற்றி நிச்சயம்!

(சுய உருவகத்தை மாற்றி அமைக்கும் நடைமுறை வழிமுறையை பிரிதொரு சமயம் விவாதிப்போம்.)

Jul 27, 2009

சொற்களின் சக்தி


நாம் உச்சரிக்கும் சொற்களுக்கும் சக்தி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது சொல்களுக்கேற்றவாறு நமது உணர்வில் மாற்றம் ஏற்படுகிறது.

திரும்ப திரும்ப உச்சரிக்கப்படும் வார்த்தைகள் நமது ஆழ்மனதிற்கு சென்று மனதிற்கு தெம்பும் தைரியமும் தருகின்றது.
வேண்டிய குறிக்கோளை நோக்கி நம்மை செலுத்துகிறது. வேகமாக குறிக்கோளை அடைய துணை புரிகிறது.

மேலும் நல்ல எண்ணத்துடன் உச்சரிக்கப்படும் சொற்கள் பிரபஞ்ச மனத்தை அடைந்து எப்போதும் நமக்கு நன்மையை புரிகின்றன.

உலக மக்களுக்கு நன்மை புரிய மனவளக்கலையை அருளிய அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் உரைத்த சங்கற்பங்களில் சில:

அருட்காப்பு:

”எல்லாம் வல்ல அருள் பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”


சங்கற்பம்:

“எல்லாம் வல்ல அருட்பேராற்றல் கருணையால் உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வேன்”

“ ஆறு, ஏரி, குளம், கிணறு எல்லாம் நிரம்பி வழிய, மாரி அளவாய் பொழிய, மக்கள் வளமாய் வாழ..!
வாழ்க வையகம்..வாழ்க வளமுடன்..!”

“வாழ்க வையகம்..வாழ்க வளமுடன்..!”

Jun 17, 2009

மனம் கடக்கும் கலை.


சென்ற பதிவில் விழிப்புணர்வு தியான முறையை பற்றி விவாதித்தோம்.

அதன் நுட்பத்தை பற்றி இன்று தொடர்வோம்.

எண்ணங்களற்று போகும் நிலையே தியானம்.

எண்ணங்கள் அற்ற நிலையே மனம் கடந்த நிலை.

மனதை கடக்க உதவுவது விழிப்புணர்வு.

இந்த விழிப்புணர்வு என்றால் என்ன?

உதாரணமாக - நாம் தியானம் செய்ய அமர்கிறோம்.

அப்போது தூரத்தில் இருந்து ஏதோ ஒரு புதிய திரைப்படப்பாடல் வந்து நம் செவியில் விழுகிறது.

உடனே நமக்கு சமீபத்தில் அந்த படத்துக்கு சென்ற நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
- கூட வந்த நண்பனின் ஞாபகம் வருகிறது
- நண்பனின் பிறந்த நாள் இந்த வாரம் என்பது ஞாபகம் வருகிறது
- பிறந்த நாளுக்கு சிறு விருந்துக்கு எங்கு போகலாம் என்று மனம் சிந்திக்கிறது
- ஒரு குறிப்பிட்ட உணவு விடுதியில் பதார்த்தங்கள் சிறப்பாக இருக்கும் என்று மனம் சொல்கிறது
- அங்கு ஒரு முறை போய் சாப்பிடும் போது நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது...

இந்த எண்ணங்களெல்லாம் நொடிகளில் வந்து போகும்.

ஆக இது தொடர்ச்சியாக போய் கொண்டே இருக்கும். நாம் தியானம் செய்ய அமர்ந்ததையே மறந்து விடுவோம்.

ஏனென்றால் நமது மனம் அவ்வாறு பழ(க்)கி விட்டது. நாம் மனம் போன போக்கில் போய் கொண்டிருக்கிறோம்.

எப்போதாவது நாம் என்னென்ன எண்ணங்களை எண்ணுகிறோம் என்று கவனித்து பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.

நமது மனமாகிய வேலைக்காரன் நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஏனென்றால் எஜமான் அங்கு இல்லை.

எஜமான் வந்தால் வேலைக்காரன் அடங்கி விடுவான் .

அந்த எஜமான் தான் விழிப்புணர்வு.

வேலைக்காரனாகிய மனத்தை கண்காணிக்கும் எஜமான் தான் விழிப்புணர்வு!

இன்னும் சொல்வதென்றால் மேலே சொன்ன அதே உதாரணம்:

இப்போது நாம் விழிப்புணர்வுடன் தியானத்தில் அமர்கிறோம்.

அப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

நாம் தியானம் செய்ய அமர்கிறோம்.

அப்போது தூரத்தில் இருந்து ஏதோ ஒரு புதிய திரைப்படப்பாடல் வந்து நம் செவியில் விழுகிறது. ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டிருக்கிறோம்.)

உடனே நமக்கு சமீபத்தில் அந்த படத்துக்கு சென்ற நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)
- கூட வந்த நண்பனின் ஞாபகம் வருகிறது - நண்பனின் பிறந்த நாள் இந்த வாரம் என்பது ஞாபகம் வருகிறது ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)
- பிறந்த நாளுக்கு சிறு விருந்துக்கு எங்கு போகலாம் என்று மனம் சிந்திக்கிறது - ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)
ஒரு குறிப்பிட்ட உணவு விடுதியில் பதார்த்தங்கள் சிறப்பாக இருக்கும் என்று மனம் சொல்கிறது - ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)

அந்த கவனிப்பு உணர்வு தான் விழிப்புணர்வு.

இப்படி பார்த்து கொண்டு வரும் போது விரைவில் எண்ணங்கள் வலுவிழந்து போய், மறந்து விடும்.

அங்கு தான் தியானம் நிகழ்கிறது.

(குறிப்பு: மேலே சொன்னது தியானத்தில் ஒரு முறை தான். தியானம் செய்ய விரும்புகிறவர்கள் தகுந்த ஞான ஆசிரியரின் துணையுன் அவரவர்களுக்கேற்ற முறையை ஆலோசித்து செய்யவும்.)


Jun 12, 2009

தியானம் செய்வது எப்படி?



ஆம் நம் மனம் தான் தியானத்திற்கு எதிரி. மனதின் இயல்பு எப்போதும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பது.

ஆனால் தியான நிலையோ மனமற்ற, எண்ணங்களை கடந்த நிலையில் ஏற்படுகிறது.

ஒருமுறை எண்ணங்களை கடப்பது எப்படி என்ற நுட்பம், balance கிடைத்து விட்டால் போதும் அப்புறம் மறப்பதில்லை.
தியானம் எளிதாகி விடும். அது மிதி வண்டி ஓட்டிப் பழகும் போது கிடைக்கும் balance ஐ போன்றது.

தியானம் செய்ய உட்கார்ந்து விட்டு ' என்ன எனக்கு இன்னும் தியானம் வரலை..? தியானம் எப்படி இருக்கும்' என்று தொடர்ந்து மனம் எண்ணிக் கொண்டிருந்தால் தியானம் ஏற்படுவதில்லை.

மேலும் தியானம் செய்ய உட்காரும் போதே 'நான் அடுத்த பத்து அல்லது இருபது நிமிடங்களுக்கு எதைப் பற்றியும் எண்ண மாட்டேன்' என்று மனதில் உறுதி எடுத்துக் கொள்வது நன்று.

தியானம் செய்ய அமர்ந்தவுடன் மனம் ஏகப் பட்ட எண்ணங்களை அவிழ்த்து விடும். அப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் 'நாம் தியானத்தில் இருக்கிறோம்' என்ற உணர்வுடன், அந்த எண்ணங்களுடன் கலந்து நம்மை மறந்து பின் செல்லாமல், அந்த எண்ணங்களை சற்று விலகி நின்று உற்று பார்க்க வேண்டும். இதற்கு தான் நமது விழிப்புணர்வு உதவுகிறது.

விழிப்புணர்வின் ஆற்றல் அதிகமாக உள்ளவர்களுக்கு எண்ணங்களை அவற்றுடன் ஒட்டாமல் விலகி நின்று பார்ப்பது எளிதாகிறது.

அப்படி பார்க்க, பார்க்க எண்ணங்கள் மெதுவாக தங்கள் வலுவை இழக்கின்றன.

எண்ணங்கள் மெதுவாக அடங்குகின்றன.

அப்படி எண்ணங்கள் அற்ற நிலையில் தான் தியானத் தன்மை உண்டாகிறது.

அனைத்து தியான முறைகளும் மனமற்ற நிலையை அடையும் வழிக்கான கருவிகளே.

மேலே சொல்லப் பட்டதும் அவற்றில் ஒரு முறை.

இன்னும் வரும் பதிவுகளில் எண்ணங்களை கடந்து செல்லும் நுட்பத்தை பற்றி விரிவாக விவாதிப்போம்.

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...