Jan 31, 2009

சிபியும் நானும்


(இந்த கதைக்கும் அபியும் நானும் படத்துக்கும் எந்த ஸ்னான ப்ராப்தியும் கிடையாது என்பதை கதையின் முடிவில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள். மேலும் கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் யாவும் கற்பனையே)

சிபி நிறைய முறை படை எடுத்து பார்த்து விட்டான்.

இருந்தும் அவனுக்கு வெற்றி கிட்டவில்லை.

" டேய்...உன்னை எவ்வளவோ ட்யூஷனுக்கு அனுப்பி பார்த்தாச்சு...டுட்டோரியலுக்கு அனுப்பிச்சேன்..இன்னும் உன்னால பத்தாவது கணக்கு பரீட்சையில ஜெயிக்க முடியலை. வெளியில கேட்கற ஆளுகளுக்கு என்னாலேயே பதில் சொல்ல முடியலடா.."

சிபியை பெரியப்பா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். 

"வாப்பா..நீயாவது அவனுக்கு கொஞ்சம் சொல்லிக் கொடுக்கக் கூடாதா?" என்றார் என்னை பார்த்ததும்.

இந்த இடத்தில் பெரியப்பாவின் கடைசி மகனான சிபியை பற்றி கொஞ்சம் சொல்வது என் கடமை ஆகிறது.

சிபிக்கு கணக்கு என்றாலே ரொம்ப பிணக்கு என்று இந்த மாநகராட்சிக்கே தெரியும்.

நானும் சில முறை முயன்று பார்த்துள்ளேன்.

ம்ஹூம்..ஒவ்வொரு முறையும் சிபியின் மூளை நான் சொல்லிக் கொடுத்தவற்றிற்கு 'Access Denied' என்ற பதிலை தான் தந்தது.

காரணம் அவரது மனம் கிரிக்கெட் பார்ப்பதிலும், டீ கடை முன் பக்த கோடிகளுடன் நின்று கொண்டிருப்பதிலுமே நாட்டம் கொண்டிருந்தது.

அவனாக படித்து தேறுவது சிரமம் என்று தெரிந்து கொண்டேன்.

எனவே நான் ஒரு முயற்சி செய்து பார்க்க முடிவு செய்தேன். 

எங்கள் ஊரில் ஒரு மனிதர் இருந்தார்.  

குறி சொல்வதில் கில்லாடி. நடக்கப் போவதை சரியாக கூறுவார். 

சூசகமாக தான் சுட்டிக் காட்டுவார். நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் யாரிடமும் பைசா வாங்க மாட்டார். ஆகவே அவரை ஒரு தொழில் முறை சோதிடர் என சொல்ல முடியாது.

கண்டிப்பாக ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டும். 

அவரிடம் சிபியை கூட்டி செல்ல முடிவு செய்தேன்.

"அவரு கிட்ட போய் என்ன பண்ண போறோம்?" என்றான் சிபி.

"உனக்கு கணக்கு பாடம் தானே பிரச்சனை? உன்னோட கணக்கு புக்கை எடுத்துக்கோ..அவர் கிட்ட போய் என்னென்ன கேள்வி வரும்னு குறி கேட்கலாம்.." என்றேன்.

"அதெப்படி அவர்னால சொல்ல முடியும்..?" 

"எதாவது இ.எஸ்.பி. பவரா இருக்கும்.."

"என்ன...இ.எஸ்.பி.என் ஆ.."

"இல்லை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சும்மா வாடா.." என்றேன்.

நான் விஷயத்தை சொன்னதும் அவர் சிரித்து "இதுக்கெல்லாம் போய் குறி சொல்ல முடியுமா..என்ன சொல்றீங்க" என்றவர் கொஞ்சம் யோசித்து, "சரி..முயற்சி பண்ணி பார்த்துடலாம்..என்ன சொல்றீங்க.." என்றார்.

சிபியை முன்னால் உட்கார சொல்லி புத்தகத்தை திறந்து வைக்க சொன்னார்.

கொஞ்சம் கண்களை மூடிக் கொண்டார்.

கண்ணை திறந்தவர் முகம் திடீரென்று மாறி இருந்தது.கண்களை அகல விழித்துக் கொண்டு " நான் சொல்ற பக்கத்தை குறிச்சுக்கோ..என்ன சொல்றே.!" என்று கூவினார்.

சிபியின் முகம் வெளிறி இருந்தது.

ஐந்து நிமிடம் தான். எல்லா கேள்விகளையும் சொல்லி விட்டார்.

அவருக்கு நன்றி கூறி புறப் பட்ட போது " இந்த கேள்விகள் மட்டும் தான் வரும்..பயப்படாம எழுது..என்ன சொல்றீங்க.." என்றார்.

"டேய்..இதை மட்டும் தெளிவா போட்டுப் பார்த்துக்கோ..கண்டிப்பா பாஸ்..பாஸ் என்ன, மார்க்கை அள்ளிடலாம்.." என்றேன் சிபியிடம்.

அதற்கு பின்னால் நான் வேலை கிடைத்து வடக்கு பக்கம் போனதும் சிபியை மறந்து போனதும் இந்த கதைக்கு தேவை இல்லாதது.

ஆனால் விடுமுறையில் ஊருக்கு வந்த போது என்னை பார்த்த போது சிபி ஓடி ஒளிந்தது கண்டிப்பாக தேவையானது.

விடாமல் துரத்தி பிடித்து பிடித்து "என்னாச்சு..பாஸ் தானே..?" என்றேன்.

" இல்லை.."

அந்த பதிலை நான் எதிர் பார்க்கவில்லை.

" என்னாச்சுடா..அவர் சொன்ன கொஸ்டீன்ஸ் வரலையா? " என்றேன்.

அவன் தயங்கி "அது வந்து நானும் படிச்சு பார்த்தேன்..முடியலை..அதனால பிட் எடுத்துட்டு போனேன்..அவர் சொன்ன கணக்கு தான் வந்தது..காப்பி அடிக்கும் போது மாட்டிட்டேன்.." என்றான்.

நான் கால்களை உதறியவாறு சிபியை உதைக்க தயாரானேன். 

Jan 26, 2009

பொள்ளாச்சி பேருந்தில் ஒரு வேற்று கிரக வாசி.



உக்கடம் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்து செல்ல இடம் உள்ள பொள்ளாச்சி பேருந்தாக பார்த்து அமர்ந்த போது அந்த ஆள் திரு திருவென விழித்தவாறு என் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.

அவரிடம் கொஞ்சம் படபடப்பு காணப் பட்டது. 

மெதுவாக என்னிடம், "தம்பி ஒரு சின்ன ரிக்வஸ்ட்.." என்றார்.

நான் புரியாமல் "என்னங்க?.." என்றேன்.

"அது வந்து...டவுன் பஸ்ல வரும் போது எவனோ பர்ஸை அடிச்சுட்டான்..ஒரு டிக்கெட் மட்டும் எடுத்து ஹெல்ப் பண்ணினீங்கன்னா பரவாயில்ல..நான் அப்புறம் உங்க அட்ரஸூக்கே வந்து திருப்பி தந்துடறேன்..ப்ளீஸ்.."

யாரென்றே தெரியாமல் எடுத்த எடுப்பிலேயே பணம் கேட்கிறாரே..! சொல்வது உண்மையாக இருக்குமோ? என்று எனக்குள் ஒரு சந்தேகம்.

"அத்னால என்ன..டிக்கெட் நான் எடுத்துடரேன். எப்படி பர்ஸை மிஸ் பண்ணினீங்க..?" என்றேன்.

நான் அவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பேன் என்று அவர் எதிர் பார்க்கவில்லை. 
"டவுன் பஸ்ல தான்...ஹ்ம்ம்..பர்ஸ் ல இருந்த எல்லா கார்டும் போச்சு.." 

அவர் பேச்சில் மிகுந்த விரக்தி தெரிந்தது.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர், மெதுவாக "நான் உங்க கிட்ட ஒரு உண்மையை சொல்லணும்..உங்களை பார்த்தா நல்லவர் மாதிரி தெரியுது. அதனால இந்த உண்மையை யார் கிட்டயும் சொல்ல மாட்டீங்கன்னு நம்பறேன். நான் ஆக்சுவலா ஒரு வேற்று கிரக வாசி.." என்றார்.

வேற்று கிரக வாசியா! என்ன சொல்கிறார் இந்த ஆள்? ஒரு வேளை நட்டு கழண்ட கேஸோ? இல்லை பேருந்து சத்தத்தில் எனக்கு தான் சரியாக கேட்கவில்லையா? அதிர்ச்சி அடைந்து " என்ன சொன்னீங்க?"
என்றேன்.

"உண்மை தாங்க. நான் ஒரு வேற்று கிரக வாசி. ஐ ஆம் ஃப்ரம் மார்ஸ்"

கண்டிப்பாக மன நிலை பாதிக்கப் பட்ட ஆளாக தான் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

"சரி..ஆனா க்ளியரா தமிழ் பேசறீங்க..நான் எப்படி நம்பறது.." என்றேன்.

"நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும்..இங்க பாருங்க.." என்று சொல்லியவாறு திடீரெனே தன்னுடைய விரலில் இருந்த ஒரு 'ஜிப்' போன்ற சாதனத்தை லேசாக இழுத்தார்.

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அந்த 'ஜிப்' திறந்ததும் உள்ளே கையினுள் ஏதோ எலக்ட்ரானிக் சர்க்யூட் போல் தெரிந்தது. 

என் கண்களை நம்ப முடியவில்லை.

" நீங்க 'ஏலியன்ஸ்' படம் பார்த்திருக்கீங்களா?"

"இல்ல.." 

"மென் இன் பிளேக்.?"

"ம்..பார்த்திருக்கேன்.." எனக்கு இன்னும் அதிர்ச்சி தீரவில்லை. எவ்வளவு பெரிய விஷயம்? இது யாராவது மீடியாகாரர்களுக்கு தெரிந்தால் உலகமே இங்கு திரண்டு விடுமே..!

அவர் தொடர்ந்து " அந்த படத்துல சொல்லப் பட்டிருக்கிறது உண்மை தான். நான் ஒரு தடவை சின்ன வயசுல 'எர்த் டூர்' வந்தேன். இந்த பூமி பிடிச்சுருச்சு..அதனால இங்கேயே செட்டில் ஆயிட்டேன். பையன் கோயம்புத்தூர்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கறான்..நான் வால் பாறையில தங்கியிருக்கேன். நல்ல இடம். மறுபடியும் கேட்கிறேன்னு தயவு செய்து தப்பா நினைச்சிடாதீங்க..ஒரு பிஃப்டி ரூபீஸ் கொடுத்தீங்க்கன்னா அப்படியே ஊருக்கு போயிடுவேன். உங்க அட்ரஸ் சொல்லுங்க..நான் மணி ஆர்டர் பண்ணிடறேன்."

ஒரு வேற்றுக்கிரக வாசியுடன் பேசிக் கொண்டிருந்த ஆச்சரியத்தில் பணம் ஒன்றும் எனக்கு பெரிதாக தெரியவில்லை. அப்போதே எடுத்து கொடுத்தேன். 
" தாராளமா தர்றேன்..நீங்க திருப்பி கூட கொடுக்க வேணாம். இருந்தாலும் என் அட்ரஸ் சொல்றேன் " என்றேன்.

அட்ரஸை கேட்டதும் " சிங்கநல்லூரா?..பையனை பார்க்க இன்னிக்கு அந்த வழியா தான் வந்தேன்" என்றார்.

"மார்ஸ்ல உயிரனமே இல்லைன்னு சொன்னாங்களே? சாட்டிலைட் பிக்சர்ல் கூட எதுவுமே தெரியலீயே?" என்றேன்.

"அது எங்க ஆளுகளோட வேலை. உங்க சாட்டிலைட் போய் படம் எடுக்க ஆரம்பிச்ச உடனே 'சிக்னல் டைவர்சிபயரை' போட்டிருவாங்க..அது நாங்க அனுப்பற பிக்சரை மட்டும் தான் உங்களுக்கு அனுப்பும். ஏன்னா அங்க உயிரினம் இருக்கிறது தெரிஞ்சா அது உங்களுக்கும் எங்களுக்கும் நல்லதில்ல.."

நான் சித்த பிரமை பிடித்தது போல் தான் அவர் சொல்வதை கேட்டு வந்தேன்.

அதற்குள் பொள்ளாச்சி வரவும் " சரி நான் கிளம்பறேன். ரொம்ப தாங்க்ஸ்.. நாளைக்கே ம்ணி ஆர்டர் பண்ணிடரேன். வரட்டுங்களா?" என்று கிளம்பினார்.

நானும் பின் தொடர்ந்து இறங்கினேன்.

பேருந்திலிருந்து இறங்கி பார்த்தால் ஆளைக் காணவில்லை.

அதற்குள் எங்கே மறைந்து போனார்?

எப்படியும் வால்பாறை பேருந்து ஏற வருவார் என அந்த பக்கம் போய் கொஞ்ச நேரம் காத்திருந்தேன். ஆளைக் காணவில்லை.

எனக்கு நடந்தது கனவு போல் தோன்றியது.

நண்பனை அலைபேசியில் கூப்பிட்டு "டேய்..நான் ஒரு வேற்று கிரக வாசியை பார்த்தேன்.." என்று நடந்ததை சொன்னேன்.    

"டேய்..எவனோ ஒருத்தன் உங்கிட்ட துட்டுக்கு வேண்டி ரீல் சுத்தியிருக்கான். நீயும் ஏமாந்திருக்கே..நல்ல ஆளூடா நீ.." என்றான்.

அட பாவிகளா..பணத்துக்கு வேண்டி பொய் சொன்னானோ? ஹ்ம்ம்...வித விதமா ஏமாத்தறானுகளே? உட்கார்ந்து யோசிப்பாங்களோ? என்று நொந்து கொண்டேன். 

ஆனால் அந்த இயந்திரக் கை? அது தான் ஆச்சரியமாக இருக்கிறது. 

நன்றாக பார்த்தேனே? உள்ளே முழுதும் எலக்ட்ரானிக் சர்க்யூட்! எனக்கென்னவோ அந்த ஆளிடம் பேசும் போது கண்டிப்பாக ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். பொய் சொன்னது போல் தெரியவில்லை.

திடீரென எங்கே மாயமாக மறைந்து போனார்? 

ஒரு வேளை சொன்னது போல் பணம் மணி ஆர்டரில் திரும்பிவந்தால் நிச்சயம் நம்பித் தான் ஆக வேண்டும். 

அப்படி வந்தால் கண்டிப்பாக உங்களுக்கும் சொல்கிறேன்.

(மேற்கண்ட கதையில் வரும் சம்பவங்கள் கற்பனையே) 
        

Jan 25, 2009

கி.பி. 2039 ல் ஒரு கிரிக்கெட் போட்டி.

கி.பி. 2039.

ஈடன் கார்டன் மைதானம்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம்.

ஆரம்பத்தில் 5 நாள் டெஸ்ட் போட்டியாக ஆரம்பித்த கிரிக்கெட் ஒரு நாளாக மாறி 20-20 ஓவர் போட்டிகளாக சுருங்கியது.

2012 ல் மக்களுக்கு அதுவும் போர் அடிக்க துவங்க அதனை 10-10 ஆக குறைத்தார்கள்.

பத்து ஓவர் மேட்சையும் விரைவில் 'ரொம்ப ஓவர்..' என நினைத்து 5-5 ஆக 2020ல் மாற்றினார்கள்.

நல்ல வேளையாக அடுத்த பத்து வருடங்களுக்கு அதை ஒன்றும் செய்யாதது கிரிக்கெட்டின் பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும்.

2030ல் மெதுவாக " 5-5 மேட்சை பார்ப்பதற்கு ரொம்ப மண்டை காயுது..எவனால ஆகும்...ஒரு ஓவர் மேட்சாக சுருக்கினால் மேட்ச் சூடு பிடிக்கும்.." என்று எவனோ ஒரு புண்ணியவான் ஆரம்பித்தான்.

விரைவிலேயே ஒரு ஓவரும் வந்தது. 6 பவுலர்கள் வந்து ஆளுக்கு ஒரு பந்தை வீசினார்கள்.

பதினைந்து நிமிடத்தில் மொத்த மேட்சும் முடிந்தது.

எல்லாம் நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது.

ஆனால் கொஞ்ச நாளிலேயே வழக்கம் போல் ஒரு ஓவரையும் இன்னும் குறைக்க முடியுமா என சில அறிவு ஜீவிகளின் குழு உட்கார்ந்து யோசித்தது.

இந்த சமயத்தில் தான் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியானது.

' மிக விரைவாக இயங்கி கொண்டிருக்கும் நம் உலகில் மெதுவாக கிரிக்கெட் அதன் அந்தஸ்தை இழந்து வருகிறது. மிக நீண்ட இரண்டு ஓவர்களை பார்ப்பது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே கிரிக்கெட்டின் சுவாரசியத்தை கூட்ட இந்த 2039 ஆண்டு உலகக்க் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு சிறந்த மாற்றத்தை செய்துள்ளோம். அது போட்டியை விறுவிறுப்பாக்கி கிரிக்கெட்டின் பக்கம் ரசிகர்களை ஈர்க்கும் என்று சொன்னால் மிகையாகாது.'

முதல் போட்டி இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும்.

மைதானத்தில் 'என்ன மாற்றம் செய்திருப்பார்கள்?' என்ற ஆர்வத்தோடு ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

போட்டி ஆரம்பிக்க தயாரனது.

இந்திய கேப்டனும் ஆஸ்திரேலிய கேப்டனும் மேட்ச் ரெஃப்ரியுடன் மைதானத்துக்குள் நுழைந்தனர்.

இந்திய, ஆஸ்திரேலிய ரசிகர்கள் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்தனர்.

இந்திய கேப்டன் நாணயத்தை எடுத்து டாஸ் போட தயாரானார்.

ரசிகர்கள் கரகோஷம் செய்தனர்.

ஆஸ்திரேலிய கேப்டன் ' Tail..' என்று கேட்க, விழுந்தது தலை.

இந்திய கேப்டன் புன்னகைத்தார்.

ரெஃரி இந்திய கேப்டனுக்கு கை கொடுத்தார். " Congrates..."

மைதான டி.வி. திரையில் " இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டது'" என்று அறிவிக்கப் பட்டது.

இந்திய வீரர்கள் சந்தோஷத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து கும்மாளமிட்டனர்.

இந்திய ரசிகர்கள் ஆச்சரிய வெற்றிக் களிப்பில் கோஷமிட்டவாறு கலைந்து செல்ல துவங்கினர்.

'அடுத்த மேட்சிலேயும் இதே மாதிரி சூப்பரா காசை சுண்டி ஜெயிச்சுரணும்' என்று இந்திய கேப்டன் நினைத்துக் கொண்டார்.

போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான கிரிக்கெட் ரசிகர் தலையில் அடித்துக் கொண்டார்.

"எவ்வளவு கவுரவமா இருந்த கிரிக்கெட்..! இப்படி சுண்டாமுத்து ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டானுக...ரொம்ப ஓவரா தான் போறானுக.."

Jan 17, 2009

ஒரு சின்னஞ்சிறு கதை


2011ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.

அதுவும் கோப்பையை யார் வெல்வார்கள் என்பது கடைசி பந்து வரை யாரலும் தீர்மானிக்க முடியாமல் போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியிருந்தது.

கடைசி ஓவரின் கடைசி பந்து. தேவை மூன்று ரன்கள். இந்தியாவின் கையில் ஒரே விக்கெட் மட்டுமே பாக்கி இருந்தது.

டெண்டுல்கர் மட்டும் விக்கெட்டை இழக்காமல் ஒரு புறம் ஆடிக் கொண்டிருந்தார்.


கடைசி பந்தை டெண்டுல்கர் சந்திக்க தயாரானார்.

உலகக் கோப்பையை யார் கைப்பற்ற போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் கடைசி பந்து!

பிரட்லீ பந்தை கையிலெடுத்து ஓடி வர தொடங்கினார்.

வீடுகளில் தொலைக்காட்சியில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நாற்காலியின் நுனிக்கே வந்து விட்டனர்.

நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கை நகங்கள் அனைத்தையும் சுத்தமாக முடித்திருந்தனர். சில பேர் கால் நகத்தை கூட கடிக்க முற்படுமளவுக்கு போட்டி விறுவிறுப்பின் உச்ச கட்டத்தை எட்டியிருந்தது.

பிரட்லீ ஓடி வந்து மிகவும் சாதுரியமாக ஆஃப் ஸ்டம்பை குறி வைத்து போட்டார்.

பந்து சிறிதளவு பௌன்சர் ஆனது.

தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த யாரும் கண்ணை சிமிட்டவில்லை.

அந்த பந்தை டெண்டுல்கர் சிறிது குதித்து தேர்ட் மேன் திசையில் தட்டி விட்டார். அங்கு ஃபீல்டர்கள் யாரும் இல்லாததால் சுலபமாக இரண்டு ரன்களை பெற முடிந்தது.

மூன்றாவது ரன்னுக்கு ஓட முயலும் போது மிட் விக்கெட்டில் இருந்த ஃபீல்டர் ஓடி வந்து பந்தை எடுத்து விக்கெட் கீப்பரிடம் வீசினார்.

விக்கெட் கீப்பர் பந்தை எடுத்து விக்கெட்டை வீழ்த்துவதும், இந்திய வீரர் மூன்றாவது ரன்னை அடைவதும் ஒரே சமயத்தில் நடந்தது.

ஆஸ்திரேலிய அணியினர் "அவுட்..!!" என கூக்குரலிட்டு அம்பயரிடம் அப்பீல் செய்தனர்.

அம்பயருக்கே குழப்பமாக இருந்தது.

தேர்ட் அம்பயரை கேட்டார்.

இந்திய வீரர் ரன்னை அடைவதும், ஸ்டம்பிங்க்கும் ஒரே சமயத்தில் நிகழ்ந்ததால் தேர்ட் அம்பயரும் திணறினார்.

தொலைக் காட்சியில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் உறைந்து போய் அமர்ந்திருந்தனர்.

தேர்ட் அம்பயர் மீண்டும் மீண்டும் ரீப்ளே செய்து பார்த்தார். நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்திக் கொண்ட தொலைக் காட்சி சானல் உடனடியாக விளம்பரங்களை போட ஆரம்பித்தது.

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...