Aug 28, 2009

நமது இன்றைய நிலைக்கு முந்தைய எண்ணங்களே காரணம்!


நாம் இன்று இருக்கும் நிலைக்கு நாம் இது வரை எண்ணிய எண்ணங்களே காரணம் என்றால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

ஏற்றுக் கொள்ள தான் வேண்டியுள்ளது.

நமது இன்றைய நிலை எப்படி பட்டதாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இந்த நிலைக்கு, இந்த இடத்திற்கு நம்மை கொண்டு வந்து சேர்த்தது நாம் இது வரை எண்ணிய எண்ணங்களின் ஒட்டு மொத்த விளைவு தான்.

இதுவரை நாம் எண்ணிய எண்ணங்களின் ஒட்டு மொத்த கலவை தான் நமது தற்போதைய சுபாவம், உலகில் நாம் உள்ள நிலைக்கு முக்கிய காரணமாகின்றன.

இந்த இடத்தில் சமுதாய எண்ணங்கள், அதாவது நம்மை சுற்றியுள்ளவர்களின் எண்ணங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஆம்! நம்மை சுற்றியுள்ளவர்களின் எண்ணங்களும் நம்மை பாதிக்க தான் செய்கின்றன.

அவை நல்ல எண்ணமாகவும் இருக்கலாம் அல்லது தீயதாகவும் இருக்கலாம்.

தீய எண்ணங்கள் முதலில் எண்ணுபவருக்கு தீமை விளைவித்தாலும், அவற்றிலுருந்து நம்மை பாது காத்து கொள்வதும் அவசியமாகிறது.

அதற்கு விழிப்புணர்வு தேவை.

எந்த சூழ்நிலையிலும் மதி (அறிவு) மயங்காத விழிப்புணர்வு அவசியமாகிறது.

விழிப்புணர்வு மற்றவர்களின் எண்ணங்களிலிருந்து நம்மை பாது காப்பதோடன்றி நல்ல எண்ணங்களை, நமது குறிக்கோளுக்கு ஒத்த எண்ணங்களை எண்ண துணை புரிகின்றது.

அவ்வெண்ணங்கள் நம்மை நல்லவற்றை செய்யவும், நமது குறிக் கோளை அடையவும் வழி கோலுகின்றன.

ஆக நமது வருங்காலத்தை நமது தற்போதைய எண்ணங்களின் மூலம் நிர்ணயம் செய்வோம்! விழிப்புணர்வுடன் வாழ்வோம்!

Aug 27, 2009

விரும்புவதை எளிதாக அடைய என்ன தேவை?


நாம் விரும்புவதை அடைய ஒரு எளிய வழி உள்ளது.

அந்த வழி நமது மகத்தான ஆழ்மன சக்தியின் மூலமாக விரும்புவதை அடைய துணை புரிகின்றது.

அந்த வழி என்ன என்று கேட்கிறீர்களா? நிற்க.

அது தான் சுய உருவக மாற்றம். (இப்போது உட்காரலாம்!)

நாம் இப்போது உள்ள நிலைக்கு காரணம் நாம் நம்பிக் கொண்டிருக்கும், நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் நமது சுய உருவகம் தான்.

ஆகவே இந்த தற்போதைய சுய உருவகத்தை வைத்துக் கொண்டு நமது குறிக்கோளை விரும்புவதை அடைய முடியாது.

ஏனென்றால் நமது தற்போதைய அதிர்வுக்கும், நமது குறிக்கோளுக்கான அதிர்வுக்கும் இடைவெளி உள்ளது, தொலைவு உள்ளது.

அப்படியென்றால் விரும்புவதை அடைபவர்களும், குறிக்கோளை தொடுபவர்களும் இது போல் எங்காவது மூலையில் உட்கார்ந்து கொண்டு சுய உருவகத்தை மாற்றி கொண்டு தான் சாதிக்கிறார்களா என யாராவது நண்பர்கள் பின்னூட்டத்தில் கேட்கலாம்.

விஷயமென்னவென்றால் நமது குறிக்கோளை அடைய நாம் எடுக்கும் செயல்பாடுகள் தன்னிச்சையாகவே நமது சுய உருவகத்தை மாற்றி விடுகிறது.

அதற்கு பதிலாக சுய உருவகத்தை முதலில் மாற்ற முனைந்தால் அதுவே நம்மை நம் குறிக்கோளை நோக்கி சரியான வழியில் வேகமாக செயல்பட வைக்கும்.
தகுந்த சூழ்நிலைகளையும், மனிதர்களையும் நம்மிடம் சேர்க்கும்.

நம் லட்சியத்தை எளிதாக அடைய வழி வகுக்கும்!

Aug 18, 2009

எண்ணஙகளின் ஆற்றல்!


எண்ண ஆற்றல்களைப் பற்றி அனைவரும் அறிவோம்.

எண்ணங்கள் எவவளவு சக்தி படைத்தன, எண்ணஙகள் நமது வாழக்கையை கட்டுப்படுத்துவன என ஞானிகள் மற்றும் அறிஞர்கள் சொல்வதை கேட்டிருக்கிறோம்.

ஆகவே நாம் எண்ணங்களை கண்காணிக்க பழக வேண்டும்.

நாம் நமது எண்ணங்களை தொடர்ந்து ஆராய்ந்து வந்தால் விரைவில் நாமும் அறிஞர்களாக திகழலாம் என்றார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

கவலை, பயம், பொறாமை, சினம் முதலிய தீய எண்ணங்களை கவனித்து ஒதுக்க வேண்டும்.

பழக்கத்தில் வரும் இந்த எண்ணஙகளை விழிப்புணர்வுடன் கண்டு கொண்டு அதற்கு பதிலாக நல்ல எண்ணங்களை எண்ணி வர வேண்டும்.

இதனை ஒரு பயிற்சியாக செய்து வரலாம்.

தீய எண்ணஙகள் நமக்கும் நமது சூழ் நிலைக்கும் தீமை பயக்கும் என்பதை உணர வேண்டும்.

அடுத்தவருக்கு நாம் நன்மை நினைப்பது நமக்கும் நன்மை தரும் என்பதை அறிய வேண்டும்.

எண்ணங்கள் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவை என்பதையும் அவை அவற்றுக்கு ஒப்பான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் ஈர்க்க வல்லன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நமக்கும் மற்றவர்களூக்கும் நல்லதையே நினைப்போம். நல்லவற்றையே பெறுவோம்!!

Aug 15, 2009

ம்னதின் பிடியிலிருந்து சுதந்திரம்!


நாம் அனைவரும் ஏதாவது சில விஷயங்களில் சாதனை படைக்க, குறிக்கோளை அடைய விரும்பிகிறோம்.

ஆனால் நம் விருப்பத்தின் படி சாதனை சிகரத்தை தொட்டவர்கள் மிகச்சிலரே.

அதற்குக் காரணம் என்ன என்று பார்த்தால் நமது குறிக்கோளின் பால் நமது எண்ணங்கள் சரியான அளவு ஒரு முகப்படுத்தாமை அல்லது தன்னம்பிக்கையின்மை என்பது தெளிவாக தெரிய வரும்.

நம் உள் மனதில் கொண்டிருக்கும் நம்மை பற்றிய பழைய நம்பிக்கைகளின் பிடியிலுள்ளோம் நாம்!

அந்த மட்டுப் படுததப் பட்ட நம்பிக்கைகள் தான் நமது சாதனைகளுக்கு தடையாக உள்ளன.

பழைய எண்ணங்களை மாற்றுவோம்!

மனதின் பழைய தன்னம்பிக்கை அற்ற தடத்திலிருந்து விடுபடுவோம்.

மனதின் பிடியிலிருந்து சுதந்திரம் அடைவோம்!

புதிய நல்ல, தன்னமிபிக்கை தரும் எண்ணங்களை மட்டும் மனதில் விதைப்போம்!

எண்ணங்களின் அபார ஆற்றல் நம்மை சிறந்த முறையில் செயல் பட வைத்து வெற்றிகளை குவிக்கும் என்பது நிச்சயம்!

Aug 11, 2009

பழக்கத்தின் மாபெரும் ஆற்றல்..!

ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவனிடம் 'வாழைப்பழம்' என்று சொல்லிக் கொடுத்த போது அவன் "வாயப் பயம்" என்று சொல்ல அவனை திருத்த அவனது தந்தையிடம் விஷயத்தை சொன்ன போது
"எங்க பயக்க வயக்கமே அப்படி தாங்க.." என்று சொல்லப் படும் நகைச்சுவை துணுக்கை கேட்டிருக்கிறோம்.

இது வெறும் நகைச்சுவை துணுக்கு மட்டும் இல்லை. சிந்திக்க வேண்டிய சங்கதி.

பழக்கம் எவ்வாறு மனதை ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்.

ஆகவே தான் சிறு வயது முதல் நல்ல பழக்கத்தை பழகு என்று வழக்கமாக பெரியவர்கள் சொல்லுகிறார்கள்.

பழக்கம் என்பது சாதாரண விஷயமில்லை.

நமது வெற்றியை, தோல்வியை நிர்ணயிப்பது பழக்கமே!

ஒரு பழக்கத்தை பழகி விட்டால் அதனை விட முயல்வது எவ்வளவு சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும்.

நாம் ஒரு செயலை செய்து முடித்தவுடன் அந்த செயல் வேண்டுமானால் முடிந்து விடலாம்.

ஆனால் அந்த செயலின் பதிவு ஒரு ஆற்றலாக நமது மூளையில் சேமிக்கப் பட்டு விடுகிறது.

அந்த செயலை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக செய்கிறோமோ அந்த அளவுக்கு அந்த ஆற்றலின் அளவு கூடுகிறது.

நாம் இப்போது கொண்டிருக்கும் சுபாவம், பாவனை அனைத்தும் இவ்வாறு ஏற்பட்டவையே.

எந்த செயலையும் தொடர்ந்து செய்யும் போது நமது மூளையில் உடல் செல்களில் பதிவாகும் அந்த செயல் மீண்டும் மீண்டும் நம்மை அந்த செயலை செய்ய தூண்டுகிறது.

நகம் கடிப்பது, புகை பிடிப்பது போன்றவை பழக்கதின் ஆற்றலை பறை சாற்றுகின்றன.

ஆகவே தான் நல்ல செயல்களையும் நல்ல எண்ணங்களையும் நாமே விரும்பி செய்து பழக்கி கொள்வதும்; தீய செயல்களையும் எண்ணங்களையும் தவிர்ப்பதும் இன்றியமையாததாகிறது.

பழக்கத்தின் ஆற்றலை அறிய நம் அன்றாட வாழ்க்கையிலேயே நிறைய உதாரணங்களை காண முடியும்.

தேர்வுக்கு சிரமப்பட்டு தொடர்ந்து படிப்பவர்கள் ஒரு விஷயத்தை உணர்வார்கள் - தேர்வுகள் முடிந்த பின்பும் படிக்க வேண்டும் போல் ஒரு உணர்வு ஏற்படும்.

தொடர்வண்டியில் நீண்ட பயணம் செய்து விட்டு வருபவர்கள் வீட்டுக்கு வந்தும் அதில் பயணிப்பது போல் உணர்வார்கள்.

சில பேர் எப்போதும் எங்கு செல்வதென்றாலும் தாமதமாகவே, கடைசி நிமிடத்தில் பரபரப்பாகவே செல்வர். யார் எவ்வளவு முறை சொன்னாலும், ஏன் அவர்களே நினைத்தாலும் அதனை மாற்றுவது மிகுந்த சிரமமாக இருக்கும். ஏனென்றால அப்படிப் பட்டோர் நிறைய முறை இதே போல் தாமதமாக சென்று சென்று அந்த பழக்கத்தின் ஆற்றல் அவரிடத்தில் தங்கி விடுகிறது.

ஆகவே அதனை மாற்றுவது கடினமாக உள்ளது.

இருந்தாலும் பழக்கத்தை மாற்றுவது சாத்தியமே! கொஞ்சம் மன உறுதி மட்டும் வேண்டும் பாஸ்! மீண்டும் சந்திப்போம்!

Aug 9, 2009

ஏன் நல்லவற்றையே நினைக்க வேண்டும்?


நாம் எல்லோரும் நினைவு தெரிந்த நாள் முதல் நல்லவற்றையே நினை, நல்லவற்றையே செய் என்ற அறிவுரைகளை கேட்டு வ்ருகிறோம்.

வழக்கமாக ஏதாவது ஆதாயம் இருப்பின் மட்டுமே மனித மனம் எதையும் செய்ய விழையும்.
ஆகவே நலலதை நினைப்பதால் என்ன நன்மை என்பதனை நமது நண்பர்களுடன் பகிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

எண்ணம் என்பது வெறும் வெற்று சமாச்சாரம் அல்ல. எண்ணங்கள் ஆற்றல் வாய்ந்தவை. நாம் எண்ணும் எண்ணங்கள் நம்மை எண்ணத்திற்கு ஒத்த செயல் புரிய தூண்டுவது மட்டுமின்றி நம்மிடத்தில் ஒரு பதிவை ஏற்படுத்துகிறது. மேலும் அது வெளியே சென்று நமது எண்ணத்திற்கு ஒப்பான சூழ்நிலைகளையும் மனிதர்களையும் ஈர்க்கிறது.

எண்ணம் இரு முனை கத்தி போன்றது. ஒருவர் மற்றவருக்கு எண்ணும் கெடுதல் எண்ணம் முதலில் அவரிடத்தில் பதிவை ஏற்படுத்தி விட்டு வெளியே செல்கிறது. அந்த பதிவு எண்ணுபவருக்கு துன்பமாக விளைகிறது.

ஆகவே எப்போதும் நல்ல எண்ணங்களையே தொடர்ந்து எண்ணி வருவது நல்லது.

நல்ல எண்ணங்களை ஒரு பயிற்சி போல் பழகி எண்ணி வர வேண்டும். தீய எண்ணங்கள் ஏற்படும் போது விழிப்புணர்வுடன் உடனே அதனை களைந்து நல்ல எண்ணத்தை விதைக்க வேண்டும்.

விழிப்புணர்வுடன் வாழ்ந்தால் நமக்கு ஏற்படும் தீய எண்ணங்களை எளிதாக தவிர்ப்பதோடன்றி மற்றவர்களின் தீய எண்ணங்கள், செயல்களிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ள முடியும்.

தொடர்ந்து எண்ணும் நல்ல எண்ணங்கள் நம்மை சுற்றி நல்ல அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன். நாம் இருக்கும் சூழலுக்கும் நன்மை விளைவிப்பதாக உள்ளது. நாம் இருக்கும் சமுதாயத்திற்கும் நன்மை விளைவிக்கும்.

ஞானிகள் கூறிய வழியில் இவ்வுலகில் உள்ள யாவரும் நல்லறிவை உபயோகித்து வாழ்ந்து, யாருக்கும் தீங்கு எண்ணாமல் எப்போதும் நல்லதையே எண்ணி வந்தால் இப்பூமி மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் சந்தோஷ பூங்காவாக மாறி விடும்!

Aug 8, 2009

வேலையை ஒத்திப் போடும் பழக்கம்:

வேலையை ஒத்தி போடுவது மனிதன் தோன்றிய காலத்திலிருந்து தொன்று தொட்டு கடை பிடித்து வந்த பழக்கமாக இருக்க வேண்டும்.

எதையும் கடைசி நாளில், கடைசி நிமிடத்தில் செய்வதை பரம்பரை பரம்பரையாக பின் பற்றி வருகிறோம்.

அதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் அந்த செயலை செய்ய பிடிக்காததே என அறிந்து கொள்ளலாம். ஆகவே மனம் அந்த செயலை செய்ய பிடிக்காமல் அப்போதைக்கு தப்பிக்க ஒத்திப் போட முயல்கிறது.

கடைசி நேரத்தில் பயம் வந்து அடித்து பிடித்து செய்து விடுகிறோம்.
அவ்வாறு செய்கையில் தவறு நேர்ந்தாலும் தெரியாது.

செய்ய வேண்டிய வேலையை திட்டமிட்டு முன்னரே முடிக்கும் போது ஏற்படும் திருப்தியும், மகிழ்ச்சியும் நம்மை பதட்டமில்லாமல் அமைதியாக வாழ வழி வகுக்கிறது.

வேலையை ஒத்திப் போடுவதை தவிர்க்க ஏதாவது வழி இருக்கிறதா என தேடியதில் சில வழி முறைகள் கவர்ந்தன, நன்கு பயன் தருவதாகவும் அமைந்தன.

முதல் வழி:

நம் மனம் ஏதாவது வேலையை ஒத்திப் போட முனைந்தால், எப்பாடு பட்டாவது அந்த வேலையில் முதல் அடியை எடுத்து வைத்து விட வேண்டும். விஷயம் என்னவென்றால், எதிலும் முதல் அடியை எடுத்து வைப்பது தான் கடினம். முதல் அடியை எடுத்து வைத்து உள் நுழைந்து விட்டால் அப்புறம் சுலபமாகி விடும். அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது முதல் குவளை நீரில் நனைவது மட்டும் தான் கடினம். நனைந்து விட்டால் அப்புறம் எளிதே. இதற்கு கொஞ்சம் மன உறுதி மட்டும் அவசியம்.

இரண்டாவது வழி:

மனப் பட வழி முறை. – இதுவும் சிறந்த வழிமுறை தான். இதனை பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் விவாதித்துள்ளோம். அதனுடைய சுட்டி இதோ:


நண்பர்கள் தங்கள் கருத்துக்களையும், வேறு வழிகளையும் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...