May 31, 2009

புகை பிடிப்பதை நிறுத்த வழி..!


"புகை பிடிப்பதை நிறுத்த புத்தம் புது வழி" என்ற சென்ற பதிவில் புகை பிடிக்கும் பழக்கம் எப்படி ஏற்படுகிறது, செயல் படுகிறது, ஏன் அதை அதை நிறுத்துவது கடினமாக உள்ளது என்பதை பற்றி எழுதியிருந்தேன்.

இந்த பதிவில் அதனை நிறுத்தும் வழியை பார்ப்போம்.

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் என்பதனால் இந்த பதிவை இன்று எழுதுவது பொருத்தமாகவே இருக்கும்.

முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் சூர்யா கண்ணன் புதிதாக் வந்துள்ள NuLife Chewettes for Smokers என்ற சூயிங்கத்தை பற்றி எழுதியிருந்தார்.

முன்றைய பதிவில் சொல்லிய படி, தொடர்ந்து செய்யும் புகை பிடிக்கும் பழக்கம் நமது மூளையில், உடலில் ஒரு பதிவை ஏற்படுத்துகிறது.
அந்த பதிவு தொடர்ந்து புகைக்க புகைக்க ஆற்றல் வாய்ந்ததாய், தவிர்க்க முடியாததாய் மாறுகிறது.
தகுந்த சூழ்நிலையில் அந்த ஆற்றல் வேலை செய்து புகை பிடிக்கும் எண்ணத்தை தூண்டுகிறது.
புகை பிடித்து முடிக்கும் வரை அடங்குவதில்லை. பிடித்து முடித்த பின் அந்த தூண்டுதலின் ஆற்றல் தற்காலிகமாக நிறைவடைகிறது, நிறுத்தப்படுகிறது.

ஆக அந்த தூண்டுதலை, ஆற்றலை புகை பிடிக்காமலேயே சமன் செய்து விட்டால் சரிதானே?

அந்த சமன்பாட்டுக்கு தான் இது போன்ற சூயிங்கங்கள் உதவுகின்றன.

நான் எழுத நினைத்ததும், புகை பிடிக்கும் பழக்கத்திற்கு மாற்றாக ஏதாவது மிட்டாயை மெல்வதை பற்றி தான்.

அதே சமயத்தில் நமது நண்பர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தகவலுக்கு நன்றி சூர்யா கண்ணன்.
இதை தான் எண்ணங்களின் ஒத்த நிகழ்வு என்று கூறுவார்கள். (இன்னொரு பதிவுக்கு தலைப்பு கிடைத்து விட்டது!)

இந்த சூயிங்கம், மிட்டாயை விட சிகரெட்டுக்கு மிக சரியான மாற்று தான்.
இதன் விலை 2ருபாய் 50பைசாவாம்.

புகை பிடிக்கும் பழக்கம் மூளையில் மட்டுமல்ல, உடலின் செல்களில் கூட பதிவை ஏற்படுத்துகிறது.
எனவே புகை பிடிக்கும் தூண்டுதல் ஏற்பட்டவுடன் உடலின் செல்கள் சிகரெட்டை உடனே கேட்கின்றன.
அப்போது உடனே கொஞ்சம் கூட தாமதிக்காமல் இந்த சூயிங்கத்தை எடுத்து வாயில் போட வேண்டும்.

ஏனென்றால் தாமதித்தால் நமது மனம் நம்மை ஏமாற்றும். பல்வேறு காரணங்களை சொல்லும்.
'இன்றைக்கு ஒரே ஒரு நாள் தம் அடிக்கலாம். நாளையிலிருந்து கட்டி வைத்து அடித்தாலும் புகைக்க மாட்டோம்' என்று கூட சொல்லும்.

ஆகவே தாமதிக்காமல் இந்த சூயிங்கத்தை எடுத்து வாயில் போட்டு மெல்ல வேண்டும்.

இதன் மூலம் ஒரளவுக்கு அந்த தூண்டுதல் சமப் படுத்த பட்டு விடும்.

இப்போது அந்த பழைய பதிவுகளை, தூண்டுதலை எதிர்பபது அவ்வளவு கடினமாக இருக்காது.

மேலும், புகை பிடிப்பதன் தீமைகளை தொடர்ந்து மனதில் எண்ணி பார்க்க வேண்டும்.
புகைப்பது உடலுக்கு, இதயத்துக்கு, நுரையீரலுக்கு, பிற உறுப்புகளுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எண்ணி பார்க்க வேண்டும்.

இதற்காக எப்போதும் சட்டைப் பையில் புகையிலையின் தீமைகளை விளக்கும் எழுத்துக்களையும், படங்களையும் வைத்திருப்பது சிறந்தது.
புகை பிடிக்கும் தூண்டுதல் செயல் பட ஆரம்பிக்கும் போது, அந்த குறிப்பை எடுத்து பார்க்க வேண்டும்.

அதன் தீமைகளை மனதில் எண்ணுவது தூண்டுதலை, பழைய ஆற்றலை எதிர்த்து சமப்படுத்தும்.

ஆரம்பத்தில் இது சிறிது சிரமமாக இருந்தாலும், தொடரும் போது பலன் தரும்.

அதிகமாக புகை பிடிப்போர் மருத்துவரின் ஆலோசனையை கேட்க தவற வேண்டாம்.

May 28, 2009

புகை பிடித்தல்: விடுவது எப்படி? - புத்தம் புதிய வழி!!



ஒருவர்: ஏன்யா, அதான் ’புகை பிடிக்காதீர்’ ன்னு போர்டு வச்சிருக்கே..இங்க உக்காந்து புகை பிடிக்கறே?

மற்றவர்: நான் எங்கேங்க புகை பிடிக்கிறேன்..? விட்டுட்டு தானே இருக்கேன்..

* * * * * * * *

ஒருவர்: ஏன் சார், நீஙக சிகரெட் பிடிக்கறதானல தானே உடம்புக்கு இவ்வளவு பிரச்சனை. பேசாம சிகரெட்டை விட்டுற வேண்டியது தான..?

மற்றவர்: விட்டா சிகரெட் கீழே விழுந்துடுங்க..

என்பது போன்ற நகைச்சுவை துணுக்குகளை நாம் ரசித்து படித்தாலும், புகை பிடிப்பதன் தீமையை நன்கு அறிவோம்.

விளையாட்டாகவும், நண்பர்களின் தூண்டுதலிலும் புகை பிடிக்க ஆரம்பித்து, விட முடியாமல் தவித்துக் கொண்டிருப்போரையும் அறிவோம்.

மனம் பழக்கத்திற்கு அடிமை.

சிகரெட் பிடிக்க ஆரம்பிக்கும் போது முதலில் அதில் எந்த வித மகிழ்ச்சியும் இருப்பதில்லை. தொடர்ந்து செய்யும் போது அது ஒரு பழக்கமாக மாறி ஒட்டிக் கொண்டு விடுகிறது.

இந்த பழக்கத்தை நிறுத்தவது எப்படி?

அதற்கு முதலில் அதன் அடிப்படையை தெரிந்து கொள்வோம்.

ஒவவொரு முறை புகை பிடிக்கும் போது அந்த செயல் அவர்களின் மூளையில் ஒரு பதிவை ஏற்படுத்துகிறது.

அந்த பதிவுகள் மெல்ல ஒரு ஆற்றலாக உருவாகி சேமித்து வைத்துக் கொள்ளப் படுகிறது.

முன்பு ‘சுய முன்னேற்ற நூல்களால் சுய முன்னேற்றம் ஏற்படுமா?’ என்ற பதிவில், சூழ்நிலை எவ்வாறு எண்ணங்களை தூண்டுகிறது என்பதை ஒரு வெளிநாட்டு விஞ்ஞானி நாயை வைத்து செய்த ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்ததை பற்றி, படித்தது நினைவிருக்கலாம்.

படிக்காதவர்கள் இந்த இணைப்பை சொடுக்கி தெரிந்து கொள்ளலாம்:


அதே போல் பொருத்தமான சூழ்நிலை ஏற்படும் போது, எடுத்துக்காட்டாக தேனீர் அருந்திய பின்போ, உணவு உண்ட பின்போ அல்லது நண்பர்களுடன் சேரும் போதோ அந்த சேமித்து வைக்கப் பட்ட எண்ண ஆற்றல் புகை பிடிக்க தூண்டுகிறது.

அந்த ஆற்றல் மன வலிமையை விட சக்தி வாய்ந்ததாக உள்ளதால், என்ன தான் அது தீமை என்று நமது மனதின் ஒரு பகுதி சொன்னாலும், அது ஜெயித்து விடுகிறது.

ஆகவே தான் புது வருட சபதம் எடுப்பவர்களால் சிறிது நாள் புகை பிடிக்காமல் தாக்குப் பிடிக்க முடிகிறது. அதற்கு அர்த்தம் அவர்களது மன சங்கல்பத்தின் சக்தி ஓரளவு உள்ளதால் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற தூண்டுதலை முறியடிக்க முடிகிறது.

ஆனால் விரைவில் அவர்கள் தங்கள் மன வலிமையை, சங்கல்பத்தின் சக்தியை இழந்து விடுகிறார்கள். அதன் சக்தி மங்கி விடுகிறது.

நீண்ட காலமாக அவர்கள் புகை பிடித்து சேமித்து வைத்த ஆற்றல் அவர்களது மன வலிமையை தோற்கடித்து விடுகிறது.

ஆக இந்த பழக்கததை விட்டி விட செய்ய வேண்டியது மிகவும் எளிது – உருவான அந்த ஆற்றலை சமப்படுத்த வேண்டும்!

அதற்கும் எளிய வழியுண்டு.


அதனை பின்வரும் இணைப்பை க்ளிக்கி படிக்கலாம்:



கீழே உள்ள தமிழிஷ் இணைப்பில் ஓட்டுப் பொத்தானை அழுத்தியும், ‘இந்த பதிவை நண்பருக்கு தெரிவியுங்கள்’ இணைப்பின் மூலம் மின்னஞ்சல் செய்தும் புகையில்லா சமுதாயத்தை உருவாக்க நாமும் கண்டிப்பாக பங்காற்ற முடியும்.

நன்றி.

May 14, 2009

நல்லெண்ணத்தின் அபார ஆற்றல்!


உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீஙகள் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் விளைவுகளை ஏற்படுத்தவல்லது.

எண்ணங்களே வாழ்க்கையின் சிற்பி என்று அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளார்.

நீங்கள் எண்ணுவது போலவே நீங்கள் உங்கள் நடைமுறை வாழ்க்கையில் செயல்பட்டு, அதற்கான விளைவுகள் ஏற்படுவது ஒரு புறம் இருப்பினும், இந்த பிரபஞ்சத்தில் உங்களது எண்ணம் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது.

அந்த அதிர்வுக்கும் விளைவுகள் உண்டு.

பிரபஞ்சம் அதற்கான விளைவுகளை நமக்கு சூழ்நிலைகள் மூலமாக தருகிறது.

நல்லெண்ணத்துக்கு நல்ல விளைவும், தீய எண்ணத்துக்கு தீய விளைவும் ஏற்படும் எனபது உண்மை.

நல்ல எண்ணங்கள் நல்ல சூழ்நிலைகளையும், நல்ல மனிதர்களையும் நம்முடன் இணைத்து விடும்.

ஆகவே தான் நமது முன்னோர்கள் நாம் எப்போது நல்லவற்றையே நினைக்க வேண்டும் என்று வலியுறுத்திகின்றனர்.

அதற்கு ஒரே வழி அருட்தந்தை கூறிவது போல் நல்ல எண்ணங்களை விரும்பி முயன்று மனதில் இருத்த வேண்டும்.

தொடர்ந்து நல்ல எண்ணங்களை மனதில் எண்ணி வர வர நமது வாழ்க்கையில் நாம் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை கண் கூடாகவே காணலாம்.

பயிற்சியினால் எதுவும் முடியும்.

இந்த நற்கருத்து அனைவருக்கும் பரவ கீழே உள்ள தமிழிஷ் ஓட்டு பொத்தானை அழுத்துவதும், மேலே உள்ள தமிழ் மண பரிந்துரை இணைப்பை அழுத்துவதும் கூட ஒரு நல்ல எண்ணமே.

May 13, 2009

மனதிற்கு எஜமானாகுங்கள்!


சென்ற 'எளிய தியானம்' பதிவை படித்து விட்டு 'விழிப்புணர்வு' என்றால் என்ன என்று சிலருக்கு ஐயம் வந்துள்ளது.

திடீரென எனக்கு ஜிலேபி பற்றி ஒரு எண்ணம் வருகிறது. உடனே ஜிலேபியின் இனிப்பு உணர்வு கூடவே நினைவுக்கு வருகிறது. தொடர்ச்சியாக ஒரு நாள் ஜிலேபி வாங்கி தராமல் ஏமாற்றிய என் நண்பனை பற்றிய எண்ணமும் எழுகிறது. அடுத்தது அவன் மீது கோப உணர்வு ஏற்படுகிறது.

நம் மனம் தொடர்ச்சியாக எண்ணங்களையும், உணர்வுகளையும் உற்பத்தி செய்தவாறு இருக்கிறது.

மனதின் வேலையே அது தான். இரவும், பகலும் நாம் தூங்கும் நேரம் உட்பட மனம் இயங்கி கொண்டிருக்கிறது. அதை தான் கனவு என்கிறோம்.

இந்த எண்ணங்களுக்கு நமது மூளை மூலமாகவும், உணர்வுகளுக்கு இதயம் மூலமாகவும் இருக்கிறது.

ஆனால் இந்த மனமும், உணர்வும் நான் என்ற மையம் அல்ல.

இந்த பதிவு எழுதும் போது உதிக்கும் எண்ணங்களும், இதை படித்து வெறுப்படையபவர்களுக்கு ஏற்படும் உணர்வும் 'நாம்' அல்ல.

நான் என்ற மையம் இவை இரண்டையும் தாண்டி நமக்குள் உள்ளது.

அது தான் உண்மையான 'நான்'

அது தான் எஜமான்.

ஆனால் நாம் 'நம்மை' மறந்து நமது மனதின் பின்னால் சென்று கொண்டிருக்கிறோம்.

மனம் என்னும் வேலைக்காரன் தன்னை எஜமானனாக பாவித்து கொண்டிருக்கிறான்.

ஏனென்றால் எஜமான் உறங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த வேலைக் காரன் தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். ஏனென்றால் அவனது இயல்பே அது தான்.

ஆனால் ஒரு முறை எஜமான் எழுந்து ஒரு பார்வை பார்த்தால் போதும்.

வேலைக்காரன் அடங்கி விடுவான்.

அதற்கப்புறம் தன்னுடைய 'வேலைத்தனங்களை' அடக்கிக் கொண்டு எஜமானனின் கட்டளைக்கு உற்பட்டு வேண்டும் போது மட்டும் முன்பை விட திறனுடன் வேலை செய்வான்.

ஆகவே இந்த மனம் என்னும் வேலைக்காரனின் செயல் பாட்டை நம் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.
அதற்கு நாம் நம்மை உணர வேண்டும்.

அது தான் விழிப்புணர்வு.

எண்ணங்கள் தவிர்த்த வெற்று உணர்வில் மையம் கொள்வது தான் விழிப்புணர்வு.

அதனை அறியத் தான் தியானம் அவசியம்!

பிடித்திருந்தால் கீழே உள்ள தமிலிஷ் ஓட்டும், மேலே தமிழ் மண பரிந்துரையும் செய்ய தயங்க வேண்டாம்.

May 12, 2009

உலகிலேயே மிகச் சிறிய தியானம்...!

ஆம். இந்த தியானம் தான் உலகிலேயே மிகக் குறுகிய நேரத்தில் செய்யக் கூடிய தியானம்.

இதனை செய்ய ஒரு நிமிடம் கூட தேவையில்லை.

வெறும் அரை நிமிடம் போதுமானது.

என்ன அந்த தியானத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா..?

இது ஓஷோ அவர்கள் சொன்ன தியானம் தான்.

இந்த தியானத்தை எதிர்பாராமல் திடீரென செய்ய வேண்டும். அதில் தான் இந்த தியானத்தின் மொத்த நுட்பமும் அடங்கியுள்ளது.

எங்காவது நடந்து போய் கொண்டிருக்கிறோம், திடீரென நின்று விட வேண்டும்.

அரை நிமிடம் போதும்!

அப்படியே உறைந்தது போல் ஆக வேண்டும். நமது விழிப்புணர்வில் மட்டும் ஐக்கியமாகி விட வேண்டும்.

(இதனை சாலையிலோ வாகனங்கள் வரும் வழியிலோ நின்று கொண்டு செய்ய கூடாது என்பது அனைவரும் அறிந்ததே!!!)

திடீரென நாம் செய்யும் இந்த நிகழ்வு நமது உடல் இயக்கத்தை மட்டும் நிறுத்துவதில்லை. மனமும் உடனே நின்று விடுகிறது.

நமக்குள் உருவான அந்த சக்தி இந்த திடீர் நிறுத்தத்தால் நமது விழிப்புணர்வுக்கு செல்கிறது.

அப்போது தியானம் நிகழ்கிறது.

இந்த தியானத்தை கண்டு பிடித்தவர் ரஷ்ய ஞானி ஜார்ஜ் குருட்ஜீஃப்.

இந்த தியானத்தை ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு முறை செய்ய வேண்டும். அதிக பட்சம் எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆக இந்த தியானத்தை செய்ய ஒரு நாளைக்கு மூன்று நிமிடங்கள் ஒதுக்கினால் போதுமானது.

மேலும் எளிய தியான விளக்கத்தை வரும் பதிவில் பார்ப்போம்.

அது வரை கீழே உள்ள தமிழிஷ்-ஷில் ஓட்டுப் போடவும் முந்தைய பதிவுகளை பார்க்க கீழே உள்ள இணைப்புகளை
கிளிக் செய்யவும் தவற வேண்டாம்.

May 9, 2009

வாங்க சார், தியானம் பண்ணலாம்..!

நானும், ’தியானம் செய்வது எப்படி?’ , ‘30 நாட்களில் தியானம் பழகுங்கள்’ ; ’இது தாண்டா தியானம்’ போன்ற தியான புத்தகங்களை 90A பேருந்து பிடித்து உக்கடம் சென்று பழைய புத்தக கடையில் பேரம் பேசி வாங்கி வந்து தூசி தட்டி படித்து பார்த்தேன்.

ஒன்றும் புரியவில்லை.

மேலும் தலைக்கு எண்ணெய் தேய்த்து நன்கு குளித்து வித விதமான ஆசனங்களில் அமர்ந்து முயற்சி செய்தும் பார்த்தேன்.

எனக்கு தியானம் செய்வது எப்படி, தியானம் என்றால் எப்படி இருக்கும் என்று பிடிபடவில்லை.

பொதுவாக சரியாக புரிந்து கொள்ளாமல் புத்தகங்களை படித்து தியானம் செய்வது நலன் பயக்காது என்று சொல்வார்கள். அது உண்மையும் கூட.

இருந்தாலும் நான் தியானம் செய்து பழகிய கதையை உங்களுக்கு சொல்வதில் உவகை அடைகிறேன்.

’தியானம் என்றால் என்ன என்று ஒரு வரிக்கு மிகாமல் ஒரு சிறுகுறிப்பு வரைக:’ என்று யாராவது கேட்டால் – எண்ணங்கள் அற்ற நிலையில் அல்லது எண்ணங்கள் குறைந்த நிலையில் முழ்கி இருத்தல் தான் தியானம் என்று சொல்லலாம்.

நம் மனம் எப்போதும் ஓடிக் கொண்டே தான் இருக்கும். இரவில் தூங்கும் போதும் கூட அது தன் செயல்பாட்டை நிறுத்துவதில்லை. அதை தான் கனவு என்கின்றோம்.

அப்படி தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கும் மனதின் எண்ண ஓட்டத்தை குறைப்பது கண்டிப்பாக ஒரே நாளில் நடக்கக் கூடியது இல்லை.

மிதிவண்டி ஓட்ட பயிற்சியின் மூலமே பழக முடியும். ஆனால் ஒரு முறை அந்த சமனிலை (Balance) கிடைத்து விட்டால் அப்புறம் எப்போதும் மறக்காது.

அது போல் தான் தியானமும்.

ஆகவே அந்த நிலையை உணரும் வரை முயற்சிப்பது முக்கியம்.

சொல்லப் போனால் முயற்சிப்பது என்பதே தியானத்தை பொறுத்தவரை ஒரு தவறான வார்த்தை பிரயோகம் தான்.

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பிரயத்தனத்துடன் முயற்சிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தியானத்தை விட்டு விலகிப் போகிறீர்கள்.

’அப்புறம் என்ன தான்யா செய்யணும்’ என்று கேட்டால், எதையும் எதிர்பாராமல் ஒரு ஒய்வு நிலையில் இருந்தாலே தியானம் ஏற்படும் என்று கூற வேண்டும்.

ஏனென்றால் கடும் முயற்சியுடன் இருக்கும் போது உங்கள் மனநிலை பரபரப்புடன் காணப்படும். அப்போது மன அலை வேகம் அதிக பட்சமாக இருக்கும். அது தியானத்திற்கு எதிரானதாகும். எண்ண அலையின் வேகம் குறைவாக இருக்க வேண்டும்.

மேலும் எந்த வித எதிர்பார்ப்புடனும் இருக்கக் கூடாது என்று சொன்னேன்.

ஏனென்றால் எதிர்பார்ப்புடன் இருக்கும் போது மனம் ஒடிக் கொண்டே இருக்கும். ‘என்ன தியானம் இன்னும் வரலை..? தியானம் எப்படி இருக்கும்..? எனக்கு மட்டும் தியானம் ஏன் வர மாட்டேங்குது..? ஏதோ வித்தியாசாமா உணர்வு ஏற்படுதே இது தான் தியானமா? பறக்கற மாதிரி இருக்கும்னு சொன்னாங்களே ஒண்ணும் தோணலையே?’ என்று மனம் எதையாவது தொடர்ச்ச்சியாக நினைக்கும் போது, எங்கே போய் தியானம் வரும்?

இருந்தாலும் தியானம் செய்வது எளிது தான்.

எனக்கு குறுகிய காலத்தில் பயனளித்த வழியை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

அதுவரை, இப்படி தியானம் செய்து பழகுவதால் என்ன பயன் என்று கேட்பவர்கள் முந்தைய பதிவை கீழ்க்காணும் சுட்டியை கிளிக்கி படிக்கலாம்:

May 8, 2009

தியானத்தால் ஏற்படும் நன்மைகள்:

1) அறிவுக் கூர்மை ஏற்படும்.

2) மன உறுதி உண்டாகும்.

3) மனம் ஆனந்த அமைதியில் திளைக்கும்.

4) பிரச்சனைகளை எளிதாக தீர்க்க கூடிய மன வலிமை ஏற்படும்.

5) ஞாபக சக்தி அதிகரிக்கும்.

6) நம்மை சுற்றி நல்ல அதிர்வு அலை ஏற்படும்.

7) நல்ல நண்பர்களும், நல்ல சூழ்நிலைகளும் சூழும்.

8) முகம் பிரகாசமடையும்.

9) மனதிற்கு எஜமானனாகலாம். நாம் சொல்வதை மனம் கேட்கும்.

10) பழக்கத்திலிருந்து விடு படக் கூடிய மன சக்தி கிட்டும்.

11) மனம் அமைதி அடைவதால் பரபரப்பு குறைந்து உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும்.

12) தேவையற்ற கோபம் போகும்.

13) மாணவர்களுக்கு படிப்பில் விருப்பம் ஏற்படும். நல்ல பழக்கங்கள் உண்டாகும்.

14) மன ஒருமைப்பாடு உண்டாகும்.

15) மனம் கட்டுப் பாட்டில் இருப்பதால் தேவையற்ற எண்ணங்கள் குறையும்.

ஆதலினால் தியானிப்பீர்...!

May 6, 2009

பிரச்சனைகளுக்கு எளிதாக முடிவு காண்பது எப்படி?

முந்தையபதிவில் முடிவெடுக்கும் கலையை பற்றிகொஞ்சம் விவாதித்தோம்.

அதனுடையசுட்டி:

http://mukkonam.blogspot.com/2009/05/blog-post_04.html

இன்றைக்கு முடிவு எடுக்க இயலா தன்மையை போக்குவதற்கான வழி முறையை பார்ப்போம்.

முடிவெடுப்பதை தவிர்ப்பதற்கும், , ,- முடிவு எடுப்பதை ஒத்தி போடுவதற்கும் முக்கியமான காரணம் - அந்த முடிவை செயல்படுத்தும் போது ஏற்படுவதாக நம்பும் விளைவுகளை கண்டு பயந்து தான்.

ஆகவே முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால் ஏதாவது ஒரு பழைய நோட்டிலிருந்து ஒரு முழு பக்க வெள்ளைத்தாளை கிழிக்க வேண்டும்.

அடுத்து நம் முன்னே உள்ள பிரச்சனையை எழுத வேண்டும்.

அடுத்து அதனை தீர்க்க சாத்தியக் கூறான முடிவுகளை எழுத வேண்டும்.

நமது அனுபவத்தை வைத்து அந்த முடிவுகளை சீர் தூக்கி பார்த்து சரியான ஒரு முடிவை தேர்வு செய்ய வேண்டும்.

அந்த முடிவை செயல்படுத்த தயங்குவதற்கான (பயப்படும்) காரணங்களை எழுத வேண்டும்.

அந்த பயங்களை போக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுத வேண்டும்.

அதனை செயல்படுத்த வேண்டும்.

இப்போது பார்த்தீர்களென்றால் முடிவெடுப்பது மிக சுலபமாக இருக்கும்.

இந்த வழிமுறை உஙகளூக்கு பிடித்து உள்ளதா???..

பிடித்திருந்தால் கீழே தமிலிஷில் ஓட்டு போடவும்.

சந்தேகங்களையும், - உஙகளுக்கு தெரிந்த வழிமுறைகளையும் பின்னூட்டத்தில் எழுதவும்.

May 4, 2009

முடிவு எடுக்கும் கலை

நமது தினசரி வாழ்க்கையில் ஏராளமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

ஆனால் முடிவு எடுக்கும் கலையில் நன்கு தேறியவர்கள் ஒரு சிலரே.

பெரும்பாலோனோர் எந்த விஷயத்திலும் உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியாமல் தடுமாறுகின்றனர்.

அதற்கு மிக சிறந்த உதாரணம் ஒரு சில மகளிர் புடவை கடைக்கு சென்று நாள் கணக்கில் தங்கி, புடவையை தேர்வு செய்ய முடியாமல் பிறகு வேறு கடைக்கு செல்வதை கூறலாம்.

இன்னும் சிலர் முடிவு எடுக்க பயந்து அடுத்தவரை நம்பி இருப்பர். அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது தான். அதற்காக ஒவ்வொரு விஷயத்திலும் அடுத்தவரையே சார்ந்து பிழைப்பு நடத்துவது நமது தன்னம்பிக்கையை குறைத்து விடும். மேலும் அடுத்தவர்களின் சாவிக்கு இயங்கும் பொம்மையை போல் மாறி விடுவோம். சுற்றியுள்ளவர்கள் நம்மை ஆட்டுவிப்பவராக மாறி விடுவார்கள்.

அடுத்த வகையினர் தான் மிகவும் சுவாரசியமானவர்கள். அவர்கள் அடுத்தவர்களிடம் ஏதும் கேட்க மாட்டார்கள் அதே சமயம் தானும் முடிவெடுக்க மாட்டார்கள். முடிவு எடுக்க பயந்து முடிவெடுப்பதை ஒத்தி வைத்தவாறு இருப்பார்கள்.

தவறான முடிவெடுப்பதும் முடிவே எடுக்காமல் இருப்பதும் ஒன்று தான். இன்னும் சில நேரங்களில் தவறான முடிவெடுப்பதை விட முடிவே எடுக்காமல் இருப்பது இன்னும் தவறாக முடியும்.

சூழ்நிலை நம்மிடம் ஏதாவது ஒரு முடிவை எதிர் நோக்கியுள்ளது. அந்த நேரத்தில் முடிவெடுக்காமல் போவது நமது முன்னேற்றத்தை தடுத்து கீழே தள்ளும்.

மன உறுதியில்லாமல், முடிவெடுக்க பயந்து ஒத்தி போடும் பழக்கம் நாளைடைவில் நமக்குள் ஊறி ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கும்.

முடிவெடுப்பதை பற்றி பிரபல ஆங்கில எழுத்தாளர் பிரிஸ்டல் பின்வருமாறு கூறினார்:

நீங்கள் முடிவு எடுக்கவும், பொறுப்பு ஏற்கவும் தயங்குகிறீர்களா????? ? ?.. பெரும்பாலான மக்கள் அப்படி தான். ஆகவே தான் மிக சில தலைவர்களும், தொண்டர்கள் நிறைய பேரும் உள்ளனர். நீங்கள் ஒரு பிரச்சனையை சந்திக்க நேர்ந்து ஒரு முடிவு எடுக்காமல் அப்படியே விட்டு விட்டால் அந்த பிரச்சனை பெரிதாகி அதனை தீர்ப்பதற்கான உங்கள் திறன் மீது உங்களுக்கு மேலும் பயம் ஏற்படும். ஆகவே வேகமாக முடுவெடுக்க பழகுங்கள். ஏனென்றால் முடிவெடுக்காமல் இருப்பதன் மூலம் நீங்கள் செயல் பட தவறுகிறீர்கள். செயல் பட தவறினால் தோல்வியை வரவேற்கிறீர்கள். ஒரு முடிவு எடுத்து விட்டீர்களென்றால் உடனே பிரச்சனைகள் காணாமல் போக ஆரம்பிப்பதை சீக்கிரமே உங்கள் அனுபவத்தில் கண்டு கொள்வீர்கள்...”

நாளைய பதிவில் முடிவெடுக்க முடியாத தன்மையை போக்க என்ன செய்ய வேண்டும் என்ற எளிய பயனுள்ள செய்முறையை காண்போம்.

பின்குறிப்பு:

இந்த பதிவை மற்றவர்களும் படித்து பயன் பெற கீழே உள்ள தமிலிஷ் வாக்கு பட்டையில் VOTE பொத்தானை க்ளிக்கியும், ,-பதிவின் மேலே உள்ள தமிழ் மணத்தில் பரிந்துரை செய்தும் உதவுங்கள்.

கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை பின்னூட்டத்தில் எழுதவும். நன்றி.

May 1, 2009

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அருள் மொழிகள்

குகையிலிருக்கும் ஆன்மீக ரகசியங்கள் வெளியே பரவ வேண்டும் என்று விவேகானந்தர் கூறினார்.

அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் தியானத்தின் முழு எல்லையை தொட்டவர். 
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இல்லறத்தில் வாழ்ந்து கொண்டே காவி உடுத்தாமல், கடமைகளை துறக்காமல் உலகத்திற்கு மிக அரிதான எளிய முறை தியானத்தை பரப்பி உள்ளார்.

அருட்தந்தையின் அருள் மொழிகளில் சில:

1. எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி.

2. எண்ணம் எங்கும் செல்லும் வல்லமை உடையது. விழிப்பு தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும். 
தவறான எண்ணங்களை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். 
அதற்கு வழி எப்போதும் நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

3. எணணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன். மகான். ஞானி. 
எண்ணம் என்பது எப்படி இயங்குகிறது, அதிலிருந்து பல்வேறு அகக் காட்சிகள் எவ்வாறு தோன்றுகின்றன என அடிக்கடி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் நீங்களும் அறிஞர்களாக திகழலாம்.

4. எண்ணியவெல்லாம் எண்ணியபடியாகும் எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அமைந்திடில்.

5. உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்திலெழும் ஒழுங்கற்ற எண்ணமே 
உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்
எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயுமே.

6. இயற்கையின் சிறப்பே எண்ணமாகும். தெளிந்து திறன் பெற்ற எண்ணத்திற்கு இயற்கை ஒத்துழைக்கின்றது; கட்டுப்படுகின்றது.

7. வெற்றி வேண்டுவோர் எதிர் வரும் பிரச்சனையைப் பிரித்து அலசி ஆராய வேண்டும். நேர்முகமான துணிவான அணுகுமுறை வேண்டும்.

நன்றி - வேதாத்திரி பதிப்பகம்.

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...