Feb 24, 2009

வேலையை ஒத்தி போடும் பழக்கத்தை ஒத்தி போடுவது எப்படி?


படிக்கும் போது எனக்கு நாராயணசாமி, நாராயணசாமி என்று ஒரு நண்பன் இருந்தான்.

அவனிடம் எப்போதாவது " டேய் நாராயணசாமி..இன்னிக்கு அந்த மாத்ஸ் அசைன்மெண்ட்டை முடிச்சிரலாமா?" என்று கேட்டால் உடனடியாக "டேய்..டேய்..இன்னிக்கு வேணாண்டா..வயித்து வலி...நாளைக்கு பண்ணிரலாம்.." என்பான்.

"இன்டர்னல்ஸ் க்கு இன்னிக்கு க்ரூப் ஸ்டடி பண்ணிரலாமா.." என்றால் "இன்னிக்கு வேணாம். அடுத்த வாரம் வியாழக் கிழமை பண்ணிரலாம்.." என்று பஞ்சாங்கம் பார்த்து சொல்வான்.

அதே நாராயணசாமியிடம் "இந்த சண்டே பிலிம் போலாமா?" என்றால் "இன்னிக்கே நான் ஃப்ரீ தான்..இன்னிக்கே போலாமே.." என்று நா கூசாமல் சொல்வான்.

நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். நம்மில் இதே போல் எத்தனை நாராயணசாமிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!!

செய்ய வேண்டிய கடமைகளையும், வேலைகளையும் ஒத்தி போடுவதும் தேவையில்லாத பொழுது போக்கு விஷயங்களை  செவ்வனே செய்வதும் நம் அன்றாட வேலைகளில் ஒன்றாகி விட்டது.

இதற்கு காரணத்தை ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம். - விருப்பம்.

ஆமாம். நம் மனம் விரும்பும் செயல்களை உடனே செய்யும். விரும்பாத, கடினமாக உணரும் செயல்களை ஒத்திப் போட விரும்பும்.

இதில் ஒரு மகா காமெடி என்னவென்றால் நம் மனம் ஒத்திப் போடும் வேலைகளை எப்போதுமே செய்யாது. 
நாம் நம் மனதை பற்றி ஏதாவது தப்பாக நினைத்து விடக் கூடாது என்பதற்காக பெரிய மனது பண்ணி அந்த வேலையை நாளைக்கு செய்யாலாம் என்று சொல்லும். 
ஆனால் நாளைக்கும் அதே மனம் தானே நம்மிடம் உள்ளது? ஆகவே மறுபடியும் ஒத்திப் போட முனையும்.

இந்த மாதிரியான நண்பர்களை ஆங்கிலத்தில் procrastinator என்று அழைக்கிறார்கள்.

இது போன்ற procrasinate மகாஜனங்கள் உலகம் முழுதும் வியாபித்து உள்ளனர். 

கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம் என்பது போல் இந்த பழக்கத்தை மாற்றுவது மிக எளிது.

தேடிப் பார்த்ததில் இரண்டு வழி முறைகள் என்னை மிகவும் கவர்ந்தன. 

நல்ல விளைவுகளை ஏற்படுத்தின. 

முறை 1:

நம் மனம் விரும்பாத விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளாது. வசதியாக மறந்து விடும். 
ஆகவே நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் உடனேஅருகிலுள்ள பெட்டிக் கடைக்கு சென்று ஒரு குயர் நோட் ஒன்றை வாங்கி நாம் செய்ய வேண்டிய வேலைகளை அட்டவணை படுத்த வேண்டும். 

அடுத்தது அந்த வேலைகளின் முக்கியத்துவத்திற்கேற்ப  அவற்றை வரிசை படுத்த வேண்டும்.

வெறுமென வேலைகளை எழுதி வரிசை படுத்தினால் மட்டும் நாம் செய்து விடுவோமா என்ன? ஆகவே அவ்வேலைகளை முடிக்க ஒரு கால நிர்ணயம் செய்து குறித்துக் கொள்ள வேண்டும்.

இந்த முறையின் மூலம் சில எளிய வேலைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து விடுவோம். 

இந்த முறையை பின்பற்றினாலும் நான் வேலைகளை செய்ய மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு இருக்கிறது அடுத்த முறை.

முறை 2: 

நாம் பிடித்த செயலை மட்டும் நேரம் காலம் பார்க்காமல் செய்வோம். 

ஆனால் பிடிக்காத சில குறிப்பிட்ட வேலைகளை கட்டி வைத்து அடித்தாலும் செய்ய மாட்டோம்.

காரணம் என்னவென்றால் அந்த வேலைகளை பற்றி நினைக்கும் போதே நம் மனம் உருவாக்கும் எதிர்மறை உணர்வு தான்!

அந்த எதிர் மறை உணர்வை நீங்கள் போக்கி கொண்டால் நீங்கள் வெறுக்கும் செயலும் உங்களுக்கு பிடித்த செயலாகி விடும்.

அப்புறம் என்ன? அந்த வேலையை விரும்பி செய்து பட்டையை கிளப்புவீர்கள்.

சரி அந்த எதிர் மறை உணர்வை போக்குவது எப்படி?

மிக மிக எளிது..!

கொசு கடிக்காத ஒரு இடத்தில் உட்கார்ந்து, நீங்கள் செய்ய விரும்பாத ஒத்திப் போடும் செயலை முதலில் மனதில் செய்து பாருங்கள்.

உண்மையாக அந்த செயலை எப்படி செய்வீர்களோ அதே போல் மனதில் நன்கு உணர்ந்து செய்யுங்கள். 

அப்படி செய்யும் போது உங்கள் எதிர் மறை உணர்வு சமப்படுத்த பட்டு விடும். 

(குறிப்பு: இந்த முறையை வேறு வேலையை செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது வாகனத்தை ஓட்டும் போதோ செய்து பார்க்க வேண்டாம்.)

அப்புறம் என்ன முதலில் நீங்கள் ஒத்திப் போட்ட செயலை இனி மேல் முதல ஆளாக முடித்து விட்டு ஏதாவது காமெடி சானலை பார்த்து கொண்டிருப்பீர்கள்.

ஒத்திப் போடும் பழக்கத்தை ஒரேடியாக ஒத்தி போடுங்கள்.

பிடித்திருந்தால் ஒத்திப் போடாமல் உடனே பின்னூட்டம் எழுதுங்கள்.

Feb 8, 2009

ஐ.பி.எல் : ஏலங்களும் சில ஓலங்களும்.


கோவாவில் உள்ள பனாஜியில் ஐ.பி.எல் இரண்டாவது தொடருக்கான ஏலம் நடந்து முடிந்துள்ளது.

பேசாமல் கிரிக்கெட் விளையாடி பழகியிருக்கலாம் என எல்லோரும் ஆசை படும் அளவுக்கு போட்டு தாக்கியிருக்கிறார்கள். 

2008ல் நடை பெற்ற ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் விடப் பட்ட தானை 
தலைவர் தோனி (ரூ 6 கோடி) மற்றும் சைமண்ட்ஸ் (ரூ 5.4 கோடி) யே மிஞ்சி இந்த முறை பீட்டர்சன் மற்றும் பிளிண்டாஃப் ஆகிய இருவருக்கும் யோகம் அடித்துள்ளது.

அவர்கள் இருவரும் தங்கள் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் ஒரு வேளை இப்போது சுக்கிர திசை நடந்து கொண்டிருக்கலாம்.

சும்மா சொல்லக் கூடாது. இருவருக்கும் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டியிருக்கிறது.

அவர்களது ஏலத் தொகையைக் கேட்டால் வடிவேலு வராமலே கண்ணை கட்டுகிறது.

இருவரும் தனித் தனியாக ரூ 7.35 கோடிகளுக்கு ஏலத்தில் எடுக்கப் பட்டிருக்கிறார்கள்.
பீட்டர்சன் பெங்களுர் ராயல் சேலன்ஜர்ஸுக்கும், பிளிண்டாஃப் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும் எடுக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த இருவரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மேற்கிந்திய தீவுகளிடம் டெஸ்ட் தொடர் விளையாட வேண்டி உள்ளதால் ஐ.பி.எல் லின் ஆறு வார அட்டவணையில் மூன்று வாரங்கள் மட்டுமே விளையாட போகிறார்கள்.       
( கவலைப் பட வேண்டாம். அதற்கேற்றாற் போல் சம்பளம் கொஞ்சம் குறைத்து விடுவார்கள்). 

இது போக அனைத்து இங்கிலாந்து வீரர்களும் தங்களது ஏலத் தொகையில் பத்து சதவிகிதம் தங்கள் நாட்டுக்கு இந்த ஐ.பி.எல் சுற்றுக்கு விளையாட அனுமதித்ததற்காக கொடுக்க வேண்டுமாம்.

பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ் உரிமையாளர் விஜய் மல்லையா பீட்டர்ஸன்னை எப்படியும் வாங்கி விட வேண்டுமென்று வந்ததாகவும், 
அவரை வாங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறி உள்ளார்.  
வங்க தேச வீரர் மொர்டாசா ரூ.3 கோடிகளுக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸுக்காக எடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்த ஏலத்தில் யாரும் வாங்காமல் புறக்கணிக்கப் பட்ட வீரர்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்டூவர்ட் கிளாக், மெக்கெய்ன், இலங்கையின் குலசேகரா ஆகியோர் அடங்குவர்.

ஐ.பி.எல் லின் வாண வேடிக்கை விரைவில் ஆரம்பிக்க போகிறது. இப்போதே போட்டியை காண துண்டு போட்டு இடம் பிடிக்க எல்லாரும் காத்திருக்கின்றனர்.

என் நண்பன் இதைக் கேட்டதிலிருந்து, "எனக்கு வெறும் ஆயிரம் ரூபாயும், மூணு வேளை சாப்பாடும் போட்டால் போதும்... கிரிக்கெட் என்ன, கூடவே கரகாட்டம், ஒயிலாட்டம், கதகளி எல்லாம் ஆடிக் காமிப்பேன்" என்று புலம்பிக் கொண்டிருக்கிறான்.

என்ன செய்ய..?

Feb 5, 2009

உலக சாதனை படைத்த முரளிதரனும், கம்பீரும்.



இன்று நான்காவது ஒரு நாள் போட்டியில் டாஸிலும் ஜெயித்துக் கொண்டிருக்கும் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இன்று சச்சினையும், ஜாகீரையும் சாப்பிட்டு விட்டு ஒய்வு எடுக்க சொல்லி அதற்கு பதிலாக ரோஹித் மற்றும் யூசுப்பின் சகோதரரையும் சேர்த்திருந்தனர்.

ஆரம்பமே அடியாக இருந்தது இந்தியாவுக்கு.

மூன்று ஓவர்களில் 14 ரன் களுக்கு முதல் விக்கெட் விழுந்தது. சேவக் 5 ரன் களில் வெளியேறினார்.

வலது இடது ஆட்டக் கார கலப்புக்காக தோனி இன்று மூன்றாவதாக இறங்கினார்.

கம்பீரும், தோனியும் சேர்ந்து விக்கெட்டுக்கு இடையே கபடி விளையாடி ரன்களை குவித்தனர்.

தோனி அடித்த 94ல் போட்டியின் தொனியே மாறிப் போனது.

கம்பீரின் கம்பீரமான ஆட்டத்தால் 147 பந்துகளில் 150 ரன்களை குவித்தார். அதில் 14 நான்குகளும் ஒரு 6ம் அடங்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

இலங்கையில் ஒரு நாள் போட்டிகளில் இது வரை அரவிந்த் டிசில்வா மற்றும் ஆண்டி ஃபிளவர் எடுத்த 145 தான் அதிக பட்சமான ஸ்கோராக இருந்தது.

இன்று கம்பீர் அதனை கடந்து உலக சாதனை புரிந்தார்.

கம்பீர் 150 ரன்களில் இருந்த போது முரளிதரன் வீசிய பந்தை மெதுவாக பாசத்துடன் தடவி சங்கககாரா கையில் கொடுக்க நடுவர் தர்ம சேனா ஒரு விரலை உயர்த்த மைதானத்தில் சத்தம் காதை பிளந்தது.

வாசிம் அக்ரமின் சாதனையை கடந்து முரளிதரன் 503 விக்கெட் எடுத்து உலக சாதனை புரிந்தார்.

அப்போது ஆடிக் கொண்டிருந்த தனது சக அணி வீரரான சுரேஷ் ரெய்னா அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். (சென்னை சூப்பர் கிங்ஸ்)

இறுதியில் இந்தியா 323 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

என்னதான் ஆனாலும் இந்த போட்டியிலும் இந்தியா ஜெயித்து விடும் என்று எங்கள் ஊர் டீ கடைகளிலும் சலூன்களிலும் பேசி கொண்டிருக்கின்றனர்.

Feb 4, 2009

ஒரு நாள் தொடர் - வந்தது இந்தியா வசம்!


இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா நேற்று கைப்பற்றியுள்ளது.

மேலும் தொடர்ச்சியாக 8 ஒரு நாள் போட்டிகளில் வென்றுள்ளது உபரித் தகவல்.

சத்தியமாக இது வரை இவ்வளவு பலம் பொருந்திய இந்திய அணியை வாழ் நாளில் பார்த்தது கிடையாது.

ஒவ்வொரு வீரரும் சும்மா போட்டு தாக்குகிறார்கள்.

முன்பு அணிக்கு யாரை சேர்ப்பது என்று தவிப்பார்கள். இப்போதும் யாரை சேர்ப்பது என்ற பிரச்சனை உண்டு.

ஆனால் ஒரு வித்தியாசம் - முன்னெல்லாம் சரியான ஆள் கிடைக்காமல் தேடுவார்கள்.

இப்போது ஏகப் பட்ட அண்ணன்மார்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அதனால் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்று மாபெரும் குழப்பம் நிலவுகிறது.

எல்லாம் ஐ.பி.எல் லால் வந்த வினை என்று தோன்றுகிறது.

 தர்ம அடி மன்னன் சேவக், 
கச்சித ஆட்ட கம்பீர், 
ரவுண்டு கட்டி அடிக்கும் யுவராஜ், 
கவலைப் படாமல் கலக்கும் ரெய்னா, 
"எங்கிருந்துய்யா புடிச்சீங்க, இந்த ஆளை?" என எதிரணியினரரை வருந்ததுடன் கேட்க வைக்கும் யூசுப் பதான்,  
இவ்வளவு போதாது என பந்து வீச்சில் எதிரணி விக்கெட்டுக்களை வீடு கட்டி அடிக்கும் இஷாந்த்
என ஆளாளுக்கு சமயம் கிடைக்கும் போதெல்லாம் பட்டையைக் கிளப்புவதால் மொத்த அணியுமே அமர்க்களமாய் தயாராகி உள்ளது.

 தானைத் தலைவர் தோனியின் தலைமையின் கீழ் இந்தியா இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது.

இந்த நேரந்தில் 1983 ல் கபிலின் தலைமையின் கீழ் முதன் முதலாக இந்தியாவுக்கு உலகக் கோப்பையை அறிமுகம் செய்த ஜாம்பவான்களை நினைவு கூர்வோம்.

Feb 3, 2009

மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட்: அதிரடி சேவக்கும் சூப்பர் யுவராஜும்.

இன்றைய இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் அதிரடி மன்னன் சேவக் வழக்கம் போல் தனது தர்ம அடியின் மூலம் வெறும் 75 பந்துகளில் செஞ்சுரி அடித்தார்.

இன்றைய இந்திய ஆட்டத்தில் வீரேந்திரர் பின்னிய 116ம் (90 பந்துகள்) அண்ணன் யுவராஜ் எடுத்த 117ம் (95 பந்துகள்) அசாதாரணமானவை.

24 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்த போது இருவரும் சேர்ந்து அணியை கரை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல் டெண்டுல்கர் ஆட்டமிழந்ததும் கம்பீர் ஆட்டமிழந்ததும் கூட குறிப்பிடத் தக்கது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக சச்சின் (7) L.B.W வில் ஆட்டமிழந்தார்.

பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றது போல் இருந்தது.

டெண்டுல்கரின் அவுட்டின் போது பெவிலியனில் யுவராஜ்சிங் வருத்தப் பட்டதை காண முடிந்தது.

பிறகு யுவராஜ் சிங் நூறு அடித்த போது பெவிலியனில் இருந்த டெண்டுல்கரை நோக்கி ஆர்ப்பரித்து சைகை செய்ததும் பதிலுக்கு டெண்டுல்கர் உற்சாகத்தில் கை அசைத்து எதையோ சொல்லியதையும் கண்டிப்பாக கூறியாக வேண்டும்.

கம்பீரின் அவுட் (10) சிறிதும் எதிர் பாராதது.

ஃபெர்னாண்டோவின் பந்தை சேவக் நேராக அடிக்க அது பவுலரின் கையில் பட்டு ஸ்டம்பில் மோத கம்பீர் அவுட்.

ஏழாவது விக்கெட்டுக்கு வந்த யூசுப் பதான் அந்த அடி அடிப்பார் என ஐ.பி.எல். பார்க்காத யாரும் நம்ப மாட்டார்கள்.

வழக்கம் போல் தலைவர் 38 பந்துகளில் 59 ரன் கள் அடித்து தர்ம அடி மன்னனாக விளங்கினார்.

இறுதியில் இந்தியா 147 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்று தொடரை கைப்பற்றியதும், ஆட்ட நாயகன் விருது யுவராஜ் சிங்கிற்கும் வழங்கப் பட்டது குறிப்பிடத் தக்கது. 
 

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...