
படிக்கும் போது எனக்கு நாராயணசாமி, நாராயணசாமி என்று ஒரு நண்பன் இருந்தான்.
அவனிடம் எப்போதாவது " டேய் நாராயணசாமி..இன்னிக்கு அந்த மாத்ஸ் அசைன்மெண்ட்டை முடிச்சிரலாமா?" என்று கேட்டால் உடனடியாக "டேய்..டேய்..இன்னிக்கு வேணாண்டா..வயித்து வலி...நாளைக்கு பண்ணிரலாம்.." என்பான்.
"இன்டர்னல்ஸ் க்கு இன்னிக்கு க்ரூப் ஸ்டடி பண்ணிரலாமா.." என்றால் "இன்னிக்கு வேணாம். அடுத்த வாரம் வியாழக் கிழமை பண்ணிரலாம்.." என்று பஞ்சாங்கம் பார்த்து சொல்வான்.
அதே நாராயணசாமியிடம் "இந்த சண்டே பிலிம் போலாமா?" என்றால் "இன்னிக்கே நான் ஃப்ரீ தான்..இன்னிக்கே போலாமே.." என்று நா கூசாமல் சொல்வான்.
நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். நம்மில் இதே போல் எத்தனை நாராயணசாமிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!!
செய்ய வேண்டிய கடமைகளையும், வேலைகளையும் ஒத்தி போடுவதும் தேவையில்லாத பொழுது போக்கு விஷயங்களை செவ்வனே செய்வதும் நம் அன்றாட வேலைகளில் ஒன்றாகி விட்டது.
இதற்கு காரணத்தை ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம். - விருப்பம்.
ஆமாம். நம் மனம் விரும்பும் செயல்களை உடனே செய்யும். விரும்பாத, கடினமாக உணரும் செயல்களை ஒத்திப் போட விரும்பும்.
இதில் ஒரு மகா காமெடி என்னவென்றால் நம் மனம் ஒத்திப் போடும் வேலைகளை எப்போதுமே செய்யாது.
நாம் நம் மனதை பற்றி ஏதாவது தப்பாக நினைத்து விடக் கூடாது என்பதற்காக பெரிய மனது பண்ணி அந்த வேலையை நாளைக்கு செய்யாலாம் என்று சொல்லும்.
ஆனால் நாளைக்கும் அதே மனம் தானே நம்மிடம் உள்ளது? ஆகவே மறுபடியும் ஒத்திப் போட முனையும்.
இந்த மாதிரியான நண்பர்களை ஆங்கிலத்தில் procrastinator என்று அழைக்கிறார்கள்.
இது போன்ற procrasinate மகாஜனங்கள் உலகம் முழுதும் வியாபித்து உள்ளனர்.
கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம் என்பது போல் இந்த பழக்கத்தை மாற்றுவது மிக எளிது.
தேடிப் பார்த்ததில் இரண்டு வழி முறைகள் என்னை மிகவும் கவர்ந்தன.
நல்ல விளைவுகளை ஏற்படுத்தின.
முறை 1:
நம் மனம் விரும்பாத விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளாது. வசதியாக மறந்து விடும்.
ஆகவே நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் உடனேஅருகிலுள்ள பெட்டிக் கடைக்கு சென்று ஒரு குயர் நோட் ஒன்றை வாங்கி நாம் செய்ய வேண்டிய வேலைகளை அட்டவணை படுத்த வேண்டும்.
அடுத்தது அந்த வேலைகளின் முக்கியத்துவத்திற்கேற்ப அவற்றை வரிசை படுத்த வேண்டும்.
வெறுமென வேலைகளை எழுதி வரிசை படுத்தினால் மட்டும் நாம் செய்து விடுவோமா என்ன? ஆகவே அவ்வேலைகளை முடிக்க ஒரு கால நிர்ணயம் செய்து குறித்துக் கொள்ள வேண்டும்.
இந்த முறையின் மூலம் சில எளிய வேலைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து விடுவோம்.
இந்த முறையை பின்பற்றினாலும் நான் வேலைகளை செய்ய மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு இருக்கிறது அடுத்த முறை.
முறை 2:
நாம் பிடித்த செயலை மட்டும் நேரம் காலம் பார்க்காமல் செய்வோம்.
ஆனால் பிடிக்காத சில குறிப்பிட்ட வேலைகளை கட்டி வைத்து அடித்தாலும் செய்ய மாட்டோம்.
காரணம் என்னவென்றால் அந்த வேலைகளை பற்றி நினைக்கும் போதே நம் மனம் உருவாக்கும் எதிர்மறை உணர்வு தான்!
அந்த எதிர் மறை உணர்வை நீங்கள் போக்கி கொண்டால் நீங்கள் வெறுக்கும் செயலும் உங்களுக்கு பிடித்த செயலாகி விடும்.
அப்புறம் என்ன? அந்த வேலையை விரும்பி செய்து பட்டையை கிளப்புவீர்கள்.
சரி அந்த எதிர் மறை உணர்வை போக்குவது எப்படி?
மிக மிக எளிது..!
கொசு கடிக்காத ஒரு இடத்தில் உட்கார்ந்து, நீங்கள் செய்ய விரும்பாத ஒத்திப் போடும் செயலை முதலில் மனதில் செய்து பாருங்கள்.
உண்மையாக அந்த செயலை எப்படி செய்வீர்களோ அதே போல் மனதில் நன்கு உணர்ந்து செய்யுங்கள்.
அப்படி செய்யும் போது உங்கள் எதிர் மறை உணர்வு சமப்படுத்த பட்டு விடும்.
(குறிப்பு: இந்த முறையை வேறு வேலையை செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது வாகனத்தை ஓட்டும் போதோ செய்து பார்க்க வேண்டாம்.)
அப்புறம் என்ன முதலில் நீங்கள் ஒத்திப் போட்ட செயலை இனி மேல் முதல ஆளாக முடித்து விட்டு ஏதாவது காமெடி சானலை பார்த்து கொண்டிருப்பீர்கள்.
ஒத்திப் போடும் பழக்கத்தை ஒரேடியாக ஒத்தி போடுங்கள்.
பிடித்திருந்தால் ஒத்திப் போடாமல் உடனே பின்னூட்டம் எழுதுங்கள்.