Jan 26, 2009

பொள்ளாச்சி பேருந்தில் ஒரு வேற்று கிரக வாசி.



உக்கடம் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்து செல்ல இடம் உள்ள பொள்ளாச்சி பேருந்தாக பார்த்து அமர்ந்த போது அந்த ஆள் திரு திருவென விழித்தவாறு என் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.

அவரிடம் கொஞ்சம் படபடப்பு காணப் பட்டது. 

மெதுவாக என்னிடம், "தம்பி ஒரு சின்ன ரிக்வஸ்ட்.." என்றார்.

நான் புரியாமல் "என்னங்க?.." என்றேன்.

"அது வந்து...டவுன் பஸ்ல வரும் போது எவனோ பர்ஸை அடிச்சுட்டான்..ஒரு டிக்கெட் மட்டும் எடுத்து ஹெல்ப் பண்ணினீங்கன்னா பரவாயில்ல..நான் அப்புறம் உங்க அட்ரஸூக்கே வந்து திருப்பி தந்துடறேன்..ப்ளீஸ்.."

யாரென்றே தெரியாமல் எடுத்த எடுப்பிலேயே பணம் கேட்கிறாரே..! சொல்வது உண்மையாக இருக்குமோ? என்று எனக்குள் ஒரு சந்தேகம்.

"அத்னால என்ன..டிக்கெட் நான் எடுத்துடரேன். எப்படி பர்ஸை மிஸ் பண்ணினீங்க..?" என்றேன்.

நான் அவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பேன் என்று அவர் எதிர் பார்க்கவில்லை. 
"டவுன் பஸ்ல தான்...ஹ்ம்ம்..பர்ஸ் ல இருந்த எல்லா கார்டும் போச்சு.." 

அவர் பேச்சில் மிகுந்த விரக்தி தெரிந்தது.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர், மெதுவாக "நான் உங்க கிட்ட ஒரு உண்மையை சொல்லணும்..உங்களை பார்த்தா நல்லவர் மாதிரி தெரியுது. அதனால இந்த உண்மையை யார் கிட்டயும் சொல்ல மாட்டீங்கன்னு நம்பறேன். நான் ஆக்சுவலா ஒரு வேற்று கிரக வாசி.." என்றார்.

வேற்று கிரக வாசியா! என்ன சொல்கிறார் இந்த ஆள்? ஒரு வேளை நட்டு கழண்ட கேஸோ? இல்லை பேருந்து சத்தத்தில் எனக்கு தான் சரியாக கேட்கவில்லையா? அதிர்ச்சி அடைந்து " என்ன சொன்னீங்க?"
என்றேன்.

"உண்மை தாங்க. நான் ஒரு வேற்று கிரக வாசி. ஐ ஆம் ஃப்ரம் மார்ஸ்"

கண்டிப்பாக மன நிலை பாதிக்கப் பட்ட ஆளாக தான் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

"சரி..ஆனா க்ளியரா தமிழ் பேசறீங்க..நான் எப்படி நம்பறது.." என்றேன்.

"நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும்..இங்க பாருங்க.." என்று சொல்லியவாறு திடீரெனே தன்னுடைய விரலில் இருந்த ஒரு 'ஜிப்' போன்ற சாதனத்தை லேசாக இழுத்தார்.

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அந்த 'ஜிப்' திறந்ததும் உள்ளே கையினுள் ஏதோ எலக்ட்ரானிக் சர்க்யூட் போல் தெரிந்தது. 

என் கண்களை நம்ப முடியவில்லை.

" நீங்க 'ஏலியன்ஸ்' படம் பார்த்திருக்கீங்களா?"

"இல்ல.." 

"மென் இன் பிளேக்.?"

"ம்..பார்த்திருக்கேன்.." எனக்கு இன்னும் அதிர்ச்சி தீரவில்லை. எவ்வளவு பெரிய விஷயம்? இது யாராவது மீடியாகாரர்களுக்கு தெரிந்தால் உலகமே இங்கு திரண்டு விடுமே..!

அவர் தொடர்ந்து " அந்த படத்துல சொல்லப் பட்டிருக்கிறது உண்மை தான். நான் ஒரு தடவை சின்ன வயசுல 'எர்த் டூர்' வந்தேன். இந்த பூமி பிடிச்சுருச்சு..அதனால இங்கேயே செட்டில் ஆயிட்டேன். பையன் கோயம்புத்தூர்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கறான்..நான் வால் பாறையில தங்கியிருக்கேன். நல்ல இடம். மறுபடியும் கேட்கிறேன்னு தயவு செய்து தப்பா நினைச்சிடாதீங்க..ஒரு பிஃப்டி ரூபீஸ் கொடுத்தீங்க்கன்னா அப்படியே ஊருக்கு போயிடுவேன். உங்க அட்ரஸ் சொல்லுங்க..நான் மணி ஆர்டர் பண்ணிடறேன்."

ஒரு வேற்றுக்கிரக வாசியுடன் பேசிக் கொண்டிருந்த ஆச்சரியத்தில் பணம் ஒன்றும் எனக்கு பெரிதாக தெரியவில்லை. அப்போதே எடுத்து கொடுத்தேன். 
" தாராளமா தர்றேன்..நீங்க திருப்பி கூட கொடுக்க வேணாம். இருந்தாலும் என் அட்ரஸ் சொல்றேன் " என்றேன்.

அட்ரஸை கேட்டதும் " சிங்கநல்லூரா?..பையனை பார்க்க இன்னிக்கு அந்த வழியா தான் வந்தேன்" என்றார்.

"மார்ஸ்ல உயிரனமே இல்லைன்னு சொன்னாங்களே? சாட்டிலைட் பிக்சர்ல் கூட எதுவுமே தெரியலீயே?" என்றேன்.

"அது எங்க ஆளுகளோட வேலை. உங்க சாட்டிலைட் போய் படம் எடுக்க ஆரம்பிச்ச உடனே 'சிக்னல் டைவர்சிபயரை' போட்டிருவாங்க..அது நாங்க அனுப்பற பிக்சரை மட்டும் தான் உங்களுக்கு அனுப்பும். ஏன்னா அங்க உயிரினம் இருக்கிறது தெரிஞ்சா அது உங்களுக்கும் எங்களுக்கும் நல்லதில்ல.."

நான் சித்த பிரமை பிடித்தது போல் தான் அவர் சொல்வதை கேட்டு வந்தேன்.

அதற்குள் பொள்ளாச்சி வரவும் " சரி நான் கிளம்பறேன். ரொம்ப தாங்க்ஸ்.. நாளைக்கே ம்ணி ஆர்டர் பண்ணிடரேன். வரட்டுங்களா?" என்று கிளம்பினார்.

நானும் பின் தொடர்ந்து இறங்கினேன்.

பேருந்திலிருந்து இறங்கி பார்த்தால் ஆளைக் காணவில்லை.

அதற்குள் எங்கே மறைந்து போனார்?

எப்படியும் வால்பாறை பேருந்து ஏற வருவார் என அந்த பக்கம் போய் கொஞ்ச நேரம் காத்திருந்தேன். ஆளைக் காணவில்லை.

எனக்கு நடந்தது கனவு போல் தோன்றியது.

நண்பனை அலைபேசியில் கூப்பிட்டு "டேய்..நான் ஒரு வேற்று கிரக வாசியை பார்த்தேன்.." என்று நடந்ததை சொன்னேன்.    

"டேய்..எவனோ ஒருத்தன் உங்கிட்ட துட்டுக்கு வேண்டி ரீல் சுத்தியிருக்கான். நீயும் ஏமாந்திருக்கே..நல்ல ஆளூடா நீ.." என்றான்.

அட பாவிகளா..பணத்துக்கு வேண்டி பொய் சொன்னானோ? ஹ்ம்ம்...வித விதமா ஏமாத்தறானுகளே? உட்கார்ந்து யோசிப்பாங்களோ? என்று நொந்து கொண்டேன். 

ஆனால் அந்த இயந்திரக் கை? அது தான் ஆச்சரியமாக இருக்கிறது. 

நன்றாக பார்த்தேனே? உள்ளே முழுதும் எலக்ட்ரானிக் சர்க்யூட்! எனக்கென்னவோ அந்த ஆளிடம் பேசும் போது கண்டிப்பாக ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். பொய் சொன்னது போல் தெரியவில்லை.

திடீரென எங்கே மாயமாக மறைந்து போனார்? 

ஒரு வேளை சொன்னது போல் பணம் மணி ஆர்டரில் திரும்பிவந்தால் நிச்சயம் நம்பித் தான் ஆக வேண்டும். 

அப்படி வந்தால் கண்டிப்பாக உங்களுக்கும் சொல்கிறேன்.

(மேற்கண்ட கதையில் வரும் சம்பவங்கள் கற்பனையே) 
        

6 comments:

Sathik Ali said...

நிசமான ஒரு மார்ஸ் ஆளு எங்கிட்ட வந்து பொள்ளாச்சியிலே ஒரு ஆளு கிட்டே 50 ரூபா வாங்கியிருந்தேன் இந்த இதை எப்படியாவது அவருகிட்ட கொடுங்கன்னு 50 ரூபா எங்கிட்ட தந்தார்.
கொடுத்துதவியது நீங்கதான் நெனச்சா (மேற்கண்ட கதையில் வரும் சம்பவங்கள் கற்பனையே) என்று போட்டு விட்டீர்களே?

Thekkikattan|தெகா said...
This comment has been removed by the author.
Thekkikattan|தெகா said...

:-) ஆனா ஒண்ணு தெரியுது, நீங்க நிறைய படிக்கிறீங்கன்னு. பேருந்து பயணத்தில், பாவம் யாரையும் இப்படி போட்டுத் தள்ளியிராதீங்க கதை சொல்லி, வாழ்க்கை முழுதுக்கும் கிலிபிடிச்சே திரிவாய்ங்க :-))

முக்கோணம் said...

மிக்க நன்றி Sathik Ali .வருகைக்கு நன்றி Thekkikattan|தெகா.

Vishnu - விஷ்ணு said...

என்ன சார் மணியார்டர்ல பணம் வந்ததா. அசல் மட்டும் வந்ததா இல்ல வட்டியோட வந்ததா.

முக்கோணம் said...

இன்னும் வரலை விஷ்ணு..காத்திட்டிருக்கேன்..வந்தா ட்ரீட் வைக்கிறேன்..

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...