Jan 31, 2009

சிபியும் நானும்


(இந்த கதைக்கும் அபியும் நானும் படத்துக்கும் எந்த ஸ்னான ப்ராப்தியும் கிடையாது என்பதை கதையின் முடிவில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள். மேலும் கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் யாவும் கற்பனையே)

சிபி நிறைய முறை படை எடுத்து பார்த்து விட்டான்.

இருந்தும் அவனுக்கு வெற்றி கிட்டவில்லை.

" டேய்...உன்னை எவ்வளவோ ட்யூஷனுக்கு அனுப்பி பார்த்தாச்சு...டுட்டோரியலுக்கு அனுப்பிச்சேன்..இன்னும் உன்னால பத்தாவது கணக்கு பரீட்சையில ஜெயிக்க முடியலை. வெளியில கேட்கற ஆளுகளுக்கு என்னாலேயே பதில் சொல்ல முடியலடா.."

சிபியை பெரியப்பா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். 

"வாப்பா..நீயாவது அவனுக்கு கொஞ்சம் சொல்லிக் கொடுக்கக் கூடாதா?" என்றார் என்னை பார்த்ததும்.

இந்த இடத்தில் பெரியப்பாவின் கடைசி மகனான சிபியை பற்றி கொஞ்சம் சொல்வது என் கடமை ஆகிறது.

சிபிக்கு கணக்கு என்றாலே ரொம்ப பிணக்கு என்று இந்த மாநகராட்சிக்கே தெரியும்.

நானும் சில முறை முயன்று பார்த்துள்ளேன்.

ம்ஹூம்..ஒவ்வொரு முறையும் சிபியின் மூளை நான் சொல்லிக் கொடுத்தவற்றிற்கு 'Access Denied' என்ற பதிலை தான் தந்தது.

காரணம் அவரது மனம் கிரிக்கெட் பார்ப்பதிலும், டீ கடை முன் பக்த கோடிகளுடன் நின்று கொண்டிருப்பதிலுமே நாட்டம் கொண்டிருந்தது.

அவனாக படித்து தேறுவது சிரமம் என்று தெரிந்து கொண்டேன்.

எனவே நான் ஒரு முயற்சி செய்து பார்க்க முடிவு செய்தேன். 

எங்கள் ஊரில் ஒரு மனிதர் இருந்தார்.  

குறி சொல்வதில் கில்லாடி. நடக்கப் போவதை சரியாக கூறுவார். 

சூசகமாக தான் சுட்டிக் காட்டுவார். நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் யாரிடமும் பைசா வாங்க மாட்டார். ஆகவே அவரை ஒரு தொழில் முறை சோதிடர் என சொல்ல முடியாது.

கண்டிப்பாக ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டும். 

அவரிடம் சிபியை கூட்டி செல்ல முடிவு செய்தேன்.

"அவரு கிட்ட போய் என்ன பண்ண போறோம்?" என்றான் சிபி.

"உனக்கு கணக்கு பாடம் தானே பிரச்சனை? உன்னோட கணக்கு புக்கை எடுத்துக்கோ..அவர் கிட்ட போய் என்னென்ன கேள்வி வரும்னு குறி கேட்கலாம்.." என்றேன்.

"அதெப்படி அவர்னால சொல்ல முடியும்..?" 

"எதாவது இ.எஸ்.பி. பவரா இருக்கும்.."

"என்ன...இ.எஸ்.பி.என் ஆ.."

"இல்லை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சும்மா வாடா.." என்றேன்.

நான் விஷயத்தை சொன்னதும் அவர் சிரித்து "இதுக்கெல்லாம் போய் குறி சொல்ல முடியுமா..என்ன சொல்றீங்க" என்றவர் கொஞ்சம் யோசித்து, "சரி..முயற்சி பண்ணி பார்த்துடலாம்..என்ன சொல்றீங்க.." என்றார்.

சிபியை முன்னால் உட்கார சொல்லி புத்தகத்தை திறந்து வைக்க சொன்னார்.

கொஞ்சம் கண்களை மூடிக் கொண்டார்.

கண்ணை திறந்தவர் முகம் திடீரென்று மாறி இருந்தது.கண்களை அகல விழித்துக் கொண்டு " நான் சொல்ற பக்கத்தை குறிச்சுக்கோ..என்ன சொல்றே.!" என்று கூவினார்.

சிபியின் முகம் வெளிறி இருந்தது.

ஐந்து நிமிடம் தான். எல்லா கேள்விகளையும் சொல்லி விட்டார்.

அவருக்கு நன்றி கூறி புறப் பட்ட போது " இந்த கேள்விகள் மட்டும் தான் வரும்..பயப்படாம எழுது..என்ன சொல்றீங்க.." என்றார்.

"டேய்..இதை மட்டும் தெளிவா போட்டுப் பார்த்துக்கோ..கண்டிப்பா பாஸ்..பாஸ் என்ன, மார்க்கை அள்ளிடலாம்.." என்றேன் சிபியிடம்.

அதற்கு பின்னால் நான் வேலை கிடைத்து வடக்கு பக்கம் போனதும் சிபியை மறந்து போனதும் இந்த கதைக்கு தேவை இல்லாதது.

ஆனால் விடுமுறையில் ஊருக்கு வந்த போது என்னை பார்த்த போது சிபி ஓடி ஒளிந்தது கண்டிப்பாக தேவையானது.

விடாமல் துரத்தி பிடித்து பிடித்து "என்னாச்சு..பாஸ் தானே..?" என்றேன்.

" இல்லை.."

அந்த பதிலை நான் எதிர் பார்க்கவில்லை.

" என்னாச்சுடா..அவர் சொன்ன கொஸ்டீன்ஸ் வரலையா? " என்றேன்.

அவன் தயங்கி "அது வந்து நானும் படிச்சு பார்த்தேன்..முடியலை..அதனால பிட் எடுத்துட்டு போனேன்..அவர் சொன்ன கணக்கு தான் வந்தது..காப்பி அடிக்கும் போது மாட்டிட்டேன்.." என்றான்.

நான் கால்களை உதறியவாறு சிபியை உதைக்க தயாரானேன். 

No comments:

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...