ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவனிடம் 'வாழைப்பழம்' என்று சொல்லிக் கொடுத்த போது அவன் "வாயப் பயம்" என்று சொல்ல அவனை திருத்த அவனது தந்தையிடம் விஷயத்தை சொன்ன போது
"எங்க பயக்க வயக்கமே அப்படி தாங்க.." என்று சொல்லப் படும் நகைச்சுவை துணுக்கை கேட்டிருக்கிறோம்.
இது வெறும் நகைச்சுவை துணுக்கு மட்டும் இல்லை. சிந்திக்க வேண்டிய சங்கதி.
பழக்கம் எவ்வாறு மனதை ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்.
ஆகவே தான் சிறு வயது முதல் நல்ல பழக்கத்தை பழகு என்று வழக்கமாக பெரியவர்கள் சொல்லுகிறார்கள்.
பழக்கம் என்பது சாதாரண விஷயமில்லை.
நமது வெற்றியை, தோல்வியை நிர்ணயிப்பது பழக்கமே!
ஒரு பழக்கத்தை பழகி விட்டால் அதனை விட முயல்வது எவ்வளவு சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும்.
நாம் ஒரு செயலை செய்து முடித்தவுடன் அந்த செயல் வேண்டுமானால் முடிந்து விடலாம்.
ஆனால் அந்த செயலின் பதிவு ஒரு ஆற்றலாக நமது மூளையில் சேமிக்கப் பட்டு விடுகிறது.
அந்த செயலை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக செய்கிறோமோ அந்த அளவுக்கு அந்த ஆற்றலின் அளவு கூடுகிறது.
நாம் இப்போது கொண்டிருக்கும் சுபாவம், பாவனை அனைத்தும் இவ்வாறு ஏற்பட்டவையே.
எந்த செயலையும் தொடர்ந்து செய்யும் போது நமது மூளையில் உடல் செல்களில் பதிவாகும் அந்த செயல் மீண்டும் மீண்டும் நம்மை அந்த செயலை செய்ய தூண்டுகிறது.
நகம் கடிப்பது, புகை பிடிப்பது போன்றவை பழக்கதின் ஆற்றலை பறை சாற்றுகின்றன.
ஆகவே தான் நல்ல செயல்களையும் நல்ல எண்ணங்களையும் நாமே விரும்பி செய்து பழக்கி கொள்வதும்; தீய செயல்களையும் எண்ணங்களையும் தவிர்ப்பதும் இன்றியமையாததாகிறது.
பழக்கத்தின் ஆற்றலை அறிய நம் அன்றாட வாழ்க்கையிலேயே நிறைய உதாரணங்களை காண முடியும்.
தேர்வுக்கு சிரமப்பட்டு தொடர்ந்து படிப்பவர்கள் ஒரு விஷயத்தை உணர்வார்கள் - தேர்வுகள் முடிந்த பின்பும் படிக்க வேண்டும் போல் ஒரு உணர்வு ஏற்படும்.
தொடர்வண்டியில் நீண்ட பயணம் செய்து விட்டு வருபவர்கள் வீட்டுக்கு வந்தும் அதில் பயணிப்பது போல் உணர்வார்கள்.
சில பேர் எப்போதும் எங்கு செல்வதென்றாலும் தாமதமாகவே, கடைசி நிமிடத்தில் பரபரப்பாகவே செல்வர். யார் எவ்வளவு முறை சொன்னாலும், ஏன் அவர்களே நினைத்தாலும் அதனை மாற்றுவது மிகுந்த சிரமமாக இருக்கும். ஏனென்றால அப்படிப் பட்டோர் நிறைய முறை இதே போல் தாமதமாக சென்று சென்று அந்த பழக்கத்தின் ஆற்றல் அவரிடத்தில் தங்கி விடுகிறது.
ஆகவே அதனை மாற்றுவது கடினமாக உள்ளது.
இருந்தாலும் பழக்கத்தை மாற்றுவது சாத்தியமே! கொஞ்சம் மன உறுதி மட்டும் வேண்டும் பாஸ்! மீண்டும் சந்திப்போம்!
1 comment:
Post a Comment