சென்ற பதிவில் விழிப்புணர்வு தியான முறையை பற்றி விவாதித்தோம்.
அதன் நுட்பத்தை பற்றி இன்று தொடர்வோம்.
எண்ணங்களற்று போகும் நிலையே தியானம்.
எண்ணங்கள் அற்ற நிலையே மனம் கடந்த நிலை.
மனதை கடக்க உதவுவது விழிப்புணர்வு.
இந்த விழிப்புணர்வு என்றால் என்ன?
உதாரணமாக - நாம் தியானம் செய்ய அமர்கிறோம்.
அப்போது தூரத்தில் இருந்து ஏதோ ஒரு புதிய திரைப்படப்பாடல் வந்து நம் செவியில் விழுகிறது.
உடனே நமக்கு சமீபத்தில் அந்த படத்துக்கு சென்ற நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
- கூட வந்த நண்பனின் ஞாபகம் வருகிறது
- நண்பனின் பிறந்த நாள் இந்த வாரம் என்பது ஞாபகம் வருகிறது
- பிறந்த நாளுக்கு சிறு விருந்துக்கு எங்கு போகலாம் என்று மனம் சிந்திக்கிறது
- ஒரு குறிப்பிட்ட உணவு விடுதியில் பதார்த்தங்கள் சிறப்பாக இருக்கும் என்று மனம் சொல்கிறது
- அங்கு ஒரு முறை போய் சாப்பிடும் போது நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது...
இந்த எண்ணங்களெல்லாம் நொடிகளில் வந்து போகும்.
ஆக இது தொடர்ச்சியாக போய் கொண்டே இருக்கும். நாம் தியானம் செய்ய அமர்ந்ததையே மறந்து விடுவோம்.
ஏனென்றால் நமது மனம் அவ்வாறு பழ(க்)கி விட்டது. நாம் மனம் போன போக்கில் போய் கொண்டிருக்கிறோம்.
எப்போதாவது நாம் என்னென்ன எண்ணங்களை எண்ணுகிறோம் என்று கவனித்து பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.
நமது மனமாகிய வேலைக்காரன் நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஏனென்றால் எஜமான் அங்கு இல்லை.
எஜமான் வந்தால் வேலைக்காரன் அடங்கி விடுவான் .
அந்த எஜமான் தான் விழிப்புணர்வு.
வேலைக்காரனாகிய மனத்தை கண்காணிக்கும் எஜமான் தான் விழிப்புணர்வு!
இன்னும் சொல்வதென்றால் மேலே சொன்ன அதே உதாரணம்:
இப்போது நாம் விழிப்புணர்வுடன் தியானத்தில் அமர்கிறோம்.
அப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
நாம் தியானம் செய்ய அமர்கிறோம்.
அப்போது தூரத்தில் இருந்து ஏதோ ஒரு புதிய திரைப்படப்பாடல் வந்து நம் செவியில் விழுகிறது. ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டிருக்கிறோம்.)
உடனே நமக்கு சமீபத்தில் அந்த படத்துக்கு சென்ற நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)
- கூட வந்த நண்பனின் ஞாபகம் வருகிறது - நண்பனின் பிறந்த நாள் இந்த வாரம் என்பது ஞாபகம் வருகிறது ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)
- பிறந்த நாளுக்கு சிறு விருந்துக்கு எங்கு போகலாம் என்று மனம் சிந்திக்கிறது - ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)
ஒரு குறிப்பிட்ட உணவு விடுதியில் பதார்த்தங்கள் சிறப்பாக இருக்கும் என்று மனம் சொல்கிறது - ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)
அந்த கவனிப்பு உணர்வு தான் விழிப்புணர்வு.
இப்படி பார்த்து கொண்டு வரும் போது விரைவில் எண்ணங்கள் வலுவிழந்து போய், மறந்து விடும்.
அங்கு தான் தியானம் நிகழ்கிறது.
(குறிப்பு: மேலே சொன்னது தியானத்தில் ஒரு முறை தான். தியானம் செய்ய விரும்புகிறவர்கள் தகுந்த ஞான ஆசிரியரின் துணையுன் அவரவர்களுக்கேற்ற முறையை ஆலோசித்து செய்யவும்.)
6 comments:
நல்ல விசயங்களை பதிவு பண்ணுறீங்க..
நானும் தியானம் பண்ண ஒரு காலத்துல முயற்சி பண்ணீயிருக்கேன்.. ஆனா என்னவோ முடிந்ததில்லை..
நிறைய தடவை ஆரம்பிச்சுட்டு அப்புறம் அப்படியே விட்டிருக்கேன்..
//'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்//
நாம் என்ற எண்ணோத்தோடு எப்படி பார்க்க வேண்டும்?
கொஞ்சம் விளக்கமா சொன்னால் என்றை போன்றவர்களுக்கு எளிதில் புரியும்.
உங்கள் ஊக்கத்துக்கு நன்றி அருமை தீப்பெட்டி..
//நாம் என்ற எண்ணோத்தோடு எப்படி பார்க்க வேண்டும்? கொஞ்சம் விளக்கமா சொன்னால் என்றை போன்றவர்களுக்கு எளிதில் புரியும்//
ஒரு முக்கியமான கேள்வியை கேட்டிருக்கிறீர்கள் அருமை நண்பர் விஷ்ணு..பதிவை நீங்கள் கவனமாக படித்தது கேள்வி கேட்டது மகிழ்ச்சியை தருகிறது.
.'நாம் என்ற எண்ணத்தோட எப்படி பார்க்க வேண்டும்' என்று கேட்டுள்ளீர்கள்.
ஒரு சின்ன திருத்தம்..நாம் என்ற எண்ணம் இல்லை..நாம் என்ற உணர்வு! - அது தான் நமது மையம்.
அது வேறொன்றுமில்லை. மனதில் ஓடும் எண்ணங்களை அது தோன்றுவதையும் மறைவதையும் பார்க்க ஒரு பார்வையாளனாக பார்க்க முடிகின்ற கவனிப்பு உணர்வு தான் அந்த் 'நான்' என்கின்ற மையம்.
அதை தான் விழிப்புணர்வு என்றும் சொல்கிறோம்.
ஆக அந்த மையத்தில் - அந்த உணர்வில் நிலைத்திருந்தால் எண்ணங்கள் ஓடுவதை அவற்றுடன் கலந்து நம்மை மறந்து விடாமல் ஒரு பார்வையாளனாக, ஒரு திரைப்படம் பார்ப்பதை போல் விலகி நின்று பார்க்க முடியும்.
அந்த மையத்தை மறந்து விட்டால், கவனிப்பு தன்மையை விட்டு விட்டால் மீண்டும் நாம் மனதின் பிடியில், எண்ணங்களின் பிடியில் சிக்கி கொள்வோம்.
ஆகவே தான் அந்த 'நாம்' என்கின்ற மையத்தை, அந்த கவனிப்பு உணர்வை, விழிப்புணர்வை விட்டு விடாமல் மையம் கொண்டிருக்க வேண்டும்!
வாழ்த்துக்கள்!
நல்ல பயனுள்ள விஷயம்
தொடரட்டும்........
முக்கோணம் Annna,
நல்ல விசயங்களை பதிவு பண்ணுறீங்க..
Very Good.
The "I" feeling you are talking about, does it appear & dissapear or is it permenant?
Jacob thambi
Post a Comment