May 14, 2021

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

 


தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள்.

தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும்.

ஞாபகசக்தி அதிகரிக்கும்.

உடல் நலமும் வாழ்க்கையில் வேண்டிய வளங்களும் உங்களை தேடிவரும்.

நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை சுற்றி ஒரு நல்ல அலை ஓட்டம் இருக்கும்.

அதன் மூலமாக நல்ல மனிதர்களும் நல்ல நிகழ்வுகளும் உங்களை நோக்கி ஈர்க்கப்படும்.

இது போன்ற நல்ல விஷயங்களை பெற நாம் தியானத்தை பழகுவது மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

ஆனால் பெரும்பாலானோர் நினைப்பது போல் தியானம் செய்யப் பழகுவது அவ்வளவு கடினமான செயல் அல்ல.

ஒரு சில நுட்பங்களை தெரிந்து கொண்டால் போதுமானது.

சரி, இப்பொழுது தியானம் எவ்வாறு எளிமையாக பழகுவது என்று பார்ப்போம்.

முதலில் ஒரு அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அங்கு சென்று உங்கள் உடலுக்கு சிரமம் இல்லாதவாறு ஒரு ஏற்ற முறையில் அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் படுத்தாலும் தவறில்லை. ஆனால் தூங்காமல் இருப்பது நல்லது.

அடுத்தது தியானம் செய்வதற்கு முன்பாக நாம் நமது மனதின் இயல்பை பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

நமது மனம் எப்பொழுதும் தொடர்ச்சியாக எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றது. அது மனதின் இயல்பு ஆகும். ஒரு குழந்தை இவ்வுலகில் பிறக்கும் பொழுது அதனுடைய மனம் அவ்வளவு வளர்ச்சி பெற்றதாக இல்லை. மெல்ல மெல்ல அந்த குழந்தை வளரும் போது இந்த சமுதாயம் அதனுடைய எண்ணங்களையும் தேவைகளையும் அந்த குழந்தையின் மனதில் திணிக்கிறது. அதன் மூலமாக அந்த குழந்தையின் மனம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தது, இந்த சமுதாயத்தின் எண்ணங்களை உட்கொண்டதாய் இருக்கின்றது. ஆனால் பிரச்சனை எப்பொழுது தொடங்குகிறது என்றால் மனம் நமது கட்டுப்பாட்டில் இருப்பது வரைக்கும் எந்த குறையும் இருப்பது இல்லை. சில காலத்திற்கு பின்பு மனம் நம்மை கட்டுப்பாட்டில் வைக்க தொடங்குகின்றது. அப்பொழுதுதான் பிரச்சினையும் துன்பங்களும் ஆரம்பமாகின்றன.

நாம் நமது ஆளுமைத் தன்மையை இழந்து விடுகின்றோம் அந்த ஆளுமை தன்மையை மனம் எடுத்துக்கொண்டு கொள்கின்றது. மனம் நம் கட்டுப்பாட்டில் இல்லை. மனதை நமது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர மிகப்பெரிய ஒரு ஆயுதம் தேவைப்படுகின்றது. அந்த ஆயுதம் தான் தியானம். ஒருமுறை நாம் நமது மனதை கட்டுப்படுத்தும் அந்த நுட்பத்தை தெரிந்து கொண்டால் மனம் உடனே அடங்கி விடுகின்றது. நாம் சொல்லும் செயல்களை மிகவும் நேர்த்தியாகவும் திறமையாகவும் செய்து முடிக்கின்றது. அதற்கு நாம் தியானத்தை பழகுவது உடனடி அவசியமாகின்றது.

சரி இப்பொழுது மீண்டும் தியானம் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். முதலில் சொந்தமாக ஒரு எளிதான வகையில் அமர்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை உங்கள் மனதில் தொடர்ச்சியாக ஓடும் எண்ணங்களை விழிப்புணர்வுடன் கவனித்து வாருங்கள். ஒரே விஷயம் அந்த எண்ணங்களுடன் நீங்கள் கலந்து விடக்கூடாது.

அந்த எண்ணங்களுக்கு வெளியே தனித்து நின்று அந்த எண்ணங்களை கவனியுங்கள். ஆரம்பத்தில் நீங்கள் உங்களின் ஆளுமைத் தன்மையை மறந்து அந்த எண்ணங்களுடன் கலந்து விடுவீர்கள். சில வினாடிகள், சில நிமிடங்களுக்கு பின்பு தான் உங்களுக்கு தெரியும் - நீங்கள் அந்த எண்ணங்களில் உங்களின் விழிப்புணர்வை இழந்து விட்டீர்கள் என்று. பரவாயில்லை மீண்டும் கவனிக்கத் தொடங்குங்கள் இப்படி தொடர்ச்சியாக நீங்கள் கவனிக்க கவனிக்க ஒரு கட்டத்தில் மனம் சலிப்படைந்து விடுகின்றது. அது தன்னுடைய எண்ண ஓட்டங்களை குறைக்கின்றது. எண்ண ஓட்டத்தை குறைக்க குறைக்க எண்ணங்களுக்கு இடையே சிறிய இடைவெளி ஏற்படுகின்றது. அந்த இடைவெளியை கவனியுங்கள். அந்த இடைவெளியை நன்கு உற்று நோக்கும் போது அந்த இடைவெளியில் தான் உங்களுக்கு தியானம் தென்படத் தொடங்கும். அதனைப் பிடித்துக் கொள்ளுங்கள். ந்த இடைவெளியில் ஒரு மிகப்பெரிய அமைதியை உணர்வீர்கள். ஒரு இன்பத்தை உணர்வீர்கள். அந்த அமைதி தான் தியானம். அந்த இன்பம் தான் தியானம். இதனை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்து வாருங்கள். உங்கள் மனம் உங்கள் வசப்படும்!

Nov 28, 2010

எப்போதும் மகிழ்ச்சி, சந்தோஷம் நிறைந்து வாழ...




இது இந்த கால கட்டத்துக்கு தேவையான ஒரு பதிவு தான்.

நாம் அனைவரும் எப்போதும் சந்தோஷம் நிறைந்து குதூகலத்துடன் வாழ விரும்புகிறோம். ஆனால் எப்போதும் சோகம் தேய்ந்த முகத்துடனும் கவலையுடனுமே நமது வாழ் நாள்கள் ஓடுகின்றன.

நாம் பேருந்தில் செல்லும் போதோ, தெருவில் நடக்கும் போதோ, உணவகத்தில் இருக்கும் போதோ சுற்றிலும் உள்ளவர்களை கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும். அனைவரும் ஏதோ ஒன்றை இழந்தது போல் வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

என்ன செய்வது கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் கலையில் நாம் கை தேர்ந்தவர்களாகி விட்டோம். பல நாட்கள், பல வருடங்கள், பல பிறவிகளின் பழக்கம்! அவ்வளவு சீக்கிரம் அகலுமா? மேலும் நமது உலகமும் சந்தோஷத்திற்கு எதிராகவே செயல் படுகிறது. கல கலப்பாக சிரித்து விளையாடி மகிழும் பள்ளி, கல்லூரி மாணவன் கண்டிக்கப் படுகிறான். விரக்திப் பார்வை பார்த்தவாறு புத்தகமும் கையுமாக இருக்கும் மாணவன் போற்றப் படுகிறான்.

ஆனால் உண்மை என்னவெனில் இந்த சந்தோஷம், ஆனந்தம், குதூகலம் மற்றும் உற்சாகம் அனைத்தும் நமது உள்ளத்தில் ஏற்கனவே இருக்கிறது. ஆனால் நாம் தான் எப்போதும் துக்கம் என்னும் உணர்வையே தேர்ந்தெடுத்து விடாப் பிடியாக பின் பற்றி வருகிறோம்.

நீங்கள் இந்தக் கதையை எப்போதோ கேள்விப் பட்டிருக்கக் கூடும்:
ஏதோ ஒரு ஊரில் ஒரு பேராசிரியர் தனது மாணவர்கள் அனைவரையும் அழைத்தார். ஒரு வெள்ளைத் தாளை காண்பித்தார். அந்த தாளின் மையத்தில் ஒரு சிறிய கரும்புள்ளி வைக்கப் பட்டிருந்தது. தாளை காண்பித்து அதில் என்ன தெரிகிறது என மாணவர்களை கேட்டார். ஒரு ஆள் விடாமல் அனைவ‌ரும் ஒரு கரும் புள்ளி தெரிவதாக சொன்னார்கள்.
பேராசிரியர் சிறிது மௌனத்திற்கு பிறகு சொன்னார் "எனது அன்பு மாணவர்களே, இந்த தாளில் வெண்மையான மிகப் பெரிய பகுதி உள்ளது. ஆனால் நாம் அதை விட்டு விட்டு கரும்புள்ளியில் மட்டுமே கவனம் கொள்கிறோம். இது தான் மனதின் இயல்பு. வாழ்க்கையில் எவ்வளவோ சந்தோஷமான விஷயங்கள் இருந்தாலும், சின்ன சின்ன எதிர் மறையான நெருடல்களிலேயே நாம் கவனம் செலுத்துகிறோம். அதையே நினைத்து மனம் வருந்தி நேர விரையம் செய்கிறோம்."

அதற்காக ஒரு பிரச்சனை வரும் போது அதனை கண்டு கொள்ளாமல் ஜாலியாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்பது அர்த்தமில்லை. அந்த பிரச்சனையை சந்திக்க வேண்டும். அதனை வெற்றிகரமாக தீர்க்க வேண்டும். அதனை வெற்றி கொள்ளும் போது ஒரு சந்தோஷம் ஒரு திருப்தி ஏற்படுகிறதல்லவா, அதில் நிலை கொள்ள வேண்டும்.

ஆனால் நாம் எப்போதும் எதிர் மறையான எண்ணங்களையே நினைத்து வருந்தி வாழ்ந்தால் அது ஒரு பழக்கமாகவே மாறி விடுகிறது.மேலும் மேலும் கவலைகளை உற்பத்தி செய்கிறோம்.

நாம் வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்களை ச்ந்திக்காமலில்லை. சந்திக்கிறோம். ஆனால் எவ்வளவு நேரம் அந்த சந்தோஷத்தில் நிலை கொள்கிறோம் என்பதில் தான் விஷயம் உள்ளது.

சரி, இதற்கு மாறாக எப்போதும் மகிழ்ச்சியாக குதூகலமாக வாழ முடியுமா? கண்டிப்பாக முடியும். ஏனென்றால் சந்தோஷமானாலும், துக்கமானாலும் அந்த உணர்வு நமது உள்ளே இருந்து தான் வெளிப்படுகிறது. அதாவது அந்த உணர்வு ஏற்கனவே அங்கு உள்ளது. புறச் சூழ்நிலைகள் வெறும் கருவிகளே.

இந்த கருவிகளை தவிர்த்து நாமே வேண்டிய உணர்வுகளை உற்பத்தி செய்ய முடிந்தால் பிரச்சனை முடிந்த‌து.

உண்மையான ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் நாம் இழந்த நிலையில் உள்ளோம்.

நமது மனதை துக்கதின் பிடியிலிருந்து அகற்றி சந்தோஷத்தில் லயிக்க வைக்க தியானம் மிகச் சிறந்த, மிக எளிய வழியாகும்.

தியானம் நமது வாழ்க்கையை ஒழுங்கு செய்யவல்லது, நமது நேர்மறை சக்தியை பெருக்க வல்லது, சந்தோஷத்தையும் பேரானந்தத்தையும் தர வல்லது.

சொல்லப் போனால் அது நாம் கற்பனை செய்வதை விட மிகுந்த மகிழ்ச்சியை தரக் கூடியது.

தியானிப்போம். வளமாக வாழ்வோம். வாழ்க வையகம்.!வாழ்க வளமுடன்..!  

Apr 14, 2010

மனோபாவம் என்னும் மந்திரஜாலம்!


நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனோபாவம் உள்ளது.

நமது மனதின் தன்மை தான் மனோபாவம்.

ஒவ்வொருவருக்கும் இத்தன்மை வேறு படலாம்.

நம்முடைய மனோபாவம் எது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

நாம் பெரும்பாலும் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பதை வைத்து நமது மனோபாவம் அமைகிறது.

சில பேர் எப்போதும் கவலைப்படுபவர்களாகவோ, கோபப்படுபவர்களாகவோ, பயப்படுபவர்களாகவோ அல்லது தன்னம்பிக்கையின்றி சலனபுத்திக்காரர்களாகவோ இருப்பர்.

சிலர் எப்போதும் இனிய முகத்துடன் கம்பீரமாகவும், தன்னம்பிக்கையுடனும், நேர் மறையான அணுகுமுறையுடனும் இருப்பர்.

சரி, ஏன் மனிதர்க்கு மனிதர் மனோபாவம் வேறு படுகிறது?

காரணம் அவர்களின் உள்ளங்களில் அது வரை அவர்கள் கொண்டிருக்கும் எண்ணங்கள், நம்பிக்கைகள் தான்.

ஆக, நமது எண்ணங்களை மாற்றுவதன் மூலம் நமது மனோபவத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

மனோபாவம் மாறினால் அனைத்தும் மாறும். நமது முழு வாழ்க்கையிலும் மாற்றத்தைக் காணலாம்.

நேர்மறை மனோபாவத்துடன் எப்போதும் நாம் இருந்து வந்தால் அனைத்தும் சாத்தியம்!

ஏதாவது சூழ்நிலையில் மிகவும் கவலையாகவோ தன்னம்பிக்கையின்றியோ உணர்கிறீர்களா?

உடனே உஙகள் மனோபாவத்தை மாற்றுங்கள்! நம்பிக்கையான எண்ணஙகளை எண்ணுங்கள்.

அந்த கணமே நீங்கள் மந்திரம் போட்டது போல் சட்டென்று ஒரு தன்னம்பிக்கை கொண்ட மனிதராக மாறி விடுவீரகள்!

உங்கள் மனோபாவம் மாறிய உடன் நீஙகள் வேறு ஒரு அலை இயக்கத்தில் பிரவேசிக்கிறீரகள்!

அந்த அலை இயக்கத்தில் நுழைந்தவுடன் நீஙகள் ஒரு வித்தியாசமான ஆற்றல் மிக்க மனிதராக மாறி விடுகிறீரகள்!

உங்கள் முன்னுள்ள பிரச்சனைகள் காணாமல் போய் விடுகிறது. உங்கள் முன்னுள்ள எதிர்மறையான விஷயங்கள் காணாமல் போய் விடுகின்றன.

ஆம். அது அப்படித் தான். ஏனென்றால் எதிர் மறையான விஷயங்களின் அலை வேகமும், நேர் மறையான விஷயங்களின் அலை வேகமும் வேறு வேறு. அவை எப்போதும் பொருந்தாது.

அவை உங்களை விட்டு விலகித் தான் ஆக வேண்டும்!

உங்கள் முழு சூழ்நிலையும் மாறி விடுகிறது - நீங்கள் ஒரு ஆற்றல் மிக்க மனிதராகி விடுகிறீர்கள்!

உங்கள் இலக்கை எளிதில் அடைகிறீர்கள்!

சரியான முயற்சி இருந்தால் இது மிகவும் எளிது தான்.

ஆகவே நமது மனோபாவத்தை மாற்றுவோம் - மகத்தான வெற்றி காண்போம்!

Feb 11, 2010

பெண்ணினத்தின் பெருமை - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி


ஆணகளுக்கும், பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் இது தான். கணவன் அலுவலகத்திற்கோ தொழிற்சாலைக்கோ போகும் போது கூட மனைவியானவள் "அவரை நல்லபடியாகக் காப்பாற்று," என்று ஏதேனும் ஒரு தெய்வத்தை வேண்டிக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். சமுதாயத்தில் ஒரு பழக்கமாகவே இது வந்து விட்டது. ஆனால் ஆண்களோ நல்லதாக இருந்தாலும் பெண்ணை பாராட்டுவதற்கு ஒரு கஞ்சத்தனம்! பெரிய பெரிய நன்மைகளை எல்லாம் தொடர்ந்து பெற்றவர்கள் கூட என்ன எண்ணத்தில் இருக்கிறார்கள்? ஒரு சிறிய பாராட்டு வாய் திறந்து சொன்னால் அவள் கை ஓங்கி விடுமாம்!  தானாக தன்னுடைய மனைவியைப் பாராட்டி அதிலே இருந்து அந்த இன்பத்தை அடையக் கூடிய மறுக்கக் கூடிய உள்ளங்களுக்கு அன்பு என்பது எங்கே உண்டாகும்? இதற்கு அடிப்படைக் காரணம் என்ன என்றால் நீண்ட காலமாகப் பழக்கத்தில் பெண்களை சாதாரணமாக உபயோகப்படக் கூடிய பொருளாகவே மதித்து மதித்து, அதே மாதிரி நிலையிலே பல நூல்கள் வந்ததனால் அந்தக் கருத்து இன்றும் நிலவி வருகிறது. பெண்களுக்குச் சம உரிமை மாத்திரம் இல்லை, பெரிய மதிப்பும் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அது தான் எனது கவிதை நூலிலே ஒரு கவியிலே எழுதி இருக்கிறேன்:

"பெண் வயிற்றி லுருவாகிப்
பெண் பாலுண்டே வளர்ந்தாய்
பெண் துணையால் வாழ்கின்றாய்
பெண்ணின் பெருமை உணர்,"

என்று, தாய்க்குலத்திற்கு நாம் ஏன் அவ்வளவு மதிப்புத்தர வேண்டியதாக இருக்கிறது என்று உலக சமாதானம் என்ற நூலில் ஒரு இடத்தில் விளக்கம் கொடுக்கும் போது,

"பெண்ணினத்தின் பெருமதிப்பை உணர்ந்தே உள்ளேன்
பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறென்ன
பெருமை இதை விட எடுத்துச் சொல்லுதற்கு?
பெண்ணினத்தின் இயல்பு பெற்ற மக்கள் தம்மை,
பிறர் வளர்க்க அனுமதியார், மனமும் ஒவ்வார்,
பெண்ணினத்தின் விடுதலைக்கு இந்தத் தியாகம்,
பேருலக அமைதிக்கும் அவசியம் ஆம்,"

என்று எழுதியுள்ளேன்.  வேறு என்ன பெருமை இதைவிட எடுத்துக் கூறுவதற்கு? வேறு ஒரு பெருமையும் நீங்கள் பேச வேண்டியதில்லை; எல்லாருமே பெண்களால் அளிக்கப்பட்ட, பெறப்பட்ட பிள்ளைகள்தான் என்பதை உணர்ந்தாலே போதும்.  சம உரிமை மாத்திரம் அல்ல, இன்னும் பிரத்தியட்சமாக சில உரிமைகள்கூட அவர்களுக்குக் கொடுத்து நாம் வாழ வைக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். போன காலம் எல்லாம் போகட்டும், இனி வருங்காலத்திலேயாயினும் முதலில் அவரவர்கள் வீட்டிலே தொடங்க வேண்டும்.

- அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். - நன்றி: வேதாத்திரி பதிப்பகம், 180, காந்திஜி ரோடு, ஈரோடு - 638 001.

Jan 15, 2010

தியானம் செய்வது எப்படி?



தியானம் செய்வது எப்படி என்று, நீட்டி முழக்காமல் ஒரே வரியில் சொல்லுங்கள் என்று யாராவது கேட்டால்
- மனதை வெறுமையாக்குவது தான் தியானம் என்று சொல்லலாம்.

ஆனால் மனதை வெறுமையாக்குவது எப்படி என்று மறுபடியும் கேட்டால், நீட்டி முழக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

மனதின் இயல்பு தொடர்ச்சியாக எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டு இருப்பது.

நமது ஆழ் மனப்பதிவுகளின் பிரதிபலிப்பே இந்த எண்ண ஓட்டங்கள்.

அவை இழுத்த இழுப்பிற்கெல்லாம் நாமும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் மனம் ஒரு கருவி மட்டுமே.

ஆன்மிக குரு ஓஷோ சொல்லுவார் - மனம் நமது கால்களைப் போல் ஒரு உறுப்பு. அதனை எப்போது வேண்டுமோ அப்போது உபயோகப் படுத்த வேண்டும். நாம் எப்போதுமே கால்களை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை - என்று.

நம்முடைய சுயம் மனதை தாண்டி இருக்கிறது.

நாம் என்கின்ற சுயம் தான் எஜமான். மனம் வெறும் வேலைக்காரன் தான்.

ஆனால் எஜமான் காணாமல் போயிருப்பதால் அல்லது பலம் குன்றியிருப்பதால் வேலைக்காரனின் கொட்டம் அதிகமாகி விட்டது.

வேலைக்காரனின் கொட்டத்தை அடியோடு ஒழிப்பது தான் தியானம்.

எஜமானின் இழந்த கவுரவத்தை, பலத்தை மீட்டுவது தான் தியானம்.

வேலைக்காரனை அதட்டி கொட்டத்தை மட்டுமே அடக்குகிறோம். வேலையை விட்டு நீக்க வேண்டியதில்லை. நீக்கவும் கூடாது. அவனுடைய உதவி அவசியம் தேவை.

ஆனால் எப்போது தேவைப்படுகிறதோ அப்போது உதவி செய்தால் போதுமானது. எஜமான் சொல்வதை கேட்டு நடந்தால் போதுமானது.

அப்படியானால் அவனை முதலில் கட்டுப் படுத்த வேண்டும்.

எஜமான் இருப்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும்.

மனம் எப்போதும் கூச்சலிட்டுக் கொண்டு பிதற்றிக் கொண்டு திரிவதால் எஜமான் இருப்பதை கவனிப்பதே இல்லை.

எண்ண ஓட்டத்தை படிப்படியாக குறைத்தால் தான் தியானம் நிகழ்கிறது.

தியானத்திற்கு நிறைய வழி முறைகளை பெரியோர்கள் வகுத்துச் சென்றுள்ளனர்.

அதில் ஒன்று தான் எண்ணங்களை கவனித்தல்.

எண்ணங்களை கவனிப்பது தான் நம் சுயம் - விழிப்புணர்வு - எஜமான்!

வேலைக்காரனின் சேட்டைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாலே, மெதுவாக அடங்க ஆரம்பிப்பான்.

இவ்வளவு நாள் வேலைக்காரனுடன் சேர்ந்து சுற்றிய பழக்கத்தில் எஜமானுக்கு  அவனை தொடர தோன்றினாலும் விருப்பு வெறுப்பின்றி அவனது நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும்.

நமது சுயம் மனதுடன் சேராமல் தனித்து விலகி நின்று பார்க்க பார்க்க மனம் எண்ண ஓட்டத்தை மெல்ல நிறுத்துகிறது.

நமது விழிப்புணர்வு இன்னும் அதிகமாக அதிகமாக மனம் வெறுமையாகிறது.

அந்த வெற்று மனதில் தான் தியானம் என்னும் அந்த அற்புதம் நிகழ்கிறது!

வெற்று மனதின் சக்தி அபாரமானது.

வெற்று மனதின் சக்தியை பற்றி பின்வரும் சிறிய காணொளி (வீடியோ) யில் புரூஸ்லீ கூறியதை பாருங்கள்:


“Empty your mind, be formless… shapeless, like water. If you put water into a cup, it becomes the cup. You put water into a bottle; it becomes the bottle. You put it into a teapot; it becomes the teapot. Water can flow, or it can crash. Be water, my friend…”
"Be Water, my friend..!"

Dec 1, 2009

பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி?



உங்கள் முன் ஒரு பிரச்சனை வந்துள்ளது.

முதலில் அது எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

ஓடி ஒளிய வேண்டாம்! நெஞ்சை நிமிர்த்தி வீரமாக அதனை அணுகுங்கள்!

'அச்சமில்லை, அச்சமில்லை.. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்' என்ற மகாகவியின் பாடலை நினைவு படுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் சிறிது கூட எதிர்பார்க்காத பிரச்சனை ஆனாலும், 'சரி நடந்தது நடந்து விட்டது. நடந்ததை மாற்ற முடியாது. அதனை நினைத்து அப்படி செய்திருக்கலாம், இப்படி நடந்திருக்கலாம் என குழம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை. இப்போது நாம் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்று தான். என்னவென்றால் இந்த பிரச்சனையில் இந்த சமயத்திலும் நமக்கு சில சாதகமான விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அவற்றை கண்டுபிடித்து அவற்றை உபயோகித்து இந்த பிரச்சனையை இருந்த இடம் தெரியாமல் வெற்றி கொள்ள முடியும்' என்ற உறுதி ஏற்க வேண்டும்.

பிரச்சனையில் ஜெயிப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் துணிவுடன் எதிர் கொண்டு ஜெயிப்பதில் தான் மனிதனின் வீரம் உள்ளது.

'இப்படி நடந்திருக்கலாம்..அப்படி பண்ணியிருக்கலாம்' என இறந்த காலத்தையே நினைத்து வருந்துவது கோழைகளின் செயல்!

நடந்தது நடந்து விட்டது. இப்போது நிகழ்காலத்தில் அதனை அலசி ஆராய்ந்து நாம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தான் பிரச்சனையை போக்கும்.
குறைந்த பட்சம் இப்போது என்னென்ன செய்யலாம் என்று முடிவு எடுக்க வேண்டும். நல்ல வேளை பிரச்சனையை தீர்க்க இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதை நினைத்து கவலையை போக்கிக் கொள்ள வேண்டும்.

முடிவெடுக்காமல் நடந்ததையே நினைத்து கோழையாய் வருந்துவது நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தடுக்கும். பிரச்சனையை மேலும் அதிகப் படுத்தும்.

முக்கியமான விஷயமென்னவென்றால் தவறான முடிவுகள் மட்டும் தோல்விக்கு காரணமல்ல. முடிவெடுக்காத தன்மையும் தான்!
ஆனால் நாம் தைரியமாக எடுக்கும் முடிவுகள் கூட நமது தன்னம்பிக்கையை அதிகரித்து பிரச்சனையின் வீரியத்தை குறைப்பதற்கு உதவும்.

ஆனால் பயந்து கொண்டு எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால் நாம் மனதின் ஆழத்தில் அந்த பிரச்சனையை பார்த்து பயந்து அப்படி ஆகி விடுவோமோ, இப்படி ஆகி விடுவோமோ என்று பயப்படுகிறோம் என்று அர்த்தம். அந்த ஆழ்மன பயமே நாம் விரும்பத்தகாத விளைவுகளை அழைத்து வரலாம்.

ஆக பிரச்சனை வந்து விட்டால் துணிந்து அதனை எதிர் கொள்ள வேண்டும்.

'இந்த பிரச்சனைக்கு நாம் விரும்பும் முடிவு என்ன? இந்த முடிவு நமக்கும், மற்றவர்களுக்கும் இப்போதும், வருங்காலத்திலும் என்னென்ன முடிவுகளை ஏற்படுத்தும்' என நன்கு ஆழமாக அலசி எண்ணி பார்க்க வேண்டும்.

முடிவுகளின் விளைவுகளை நமது அனுபவத்தை வைத்தும், நண்பர்களின் ஆலோசனையை கேட்டும் கணித்து முடிவு எடுக்க வேண்டும்.

சிறிய முடிவுகள் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்தவை என்பதை உணர்ந்து நன்கு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

அதற்காக பயந்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது இன்னும் பிரச்சனையை கொடுமையாக்கும்.

மேலும் அலசி ஆராய்ந்து முடிவு எடுப்பது சரியான முடிவு எடுப்பதற்கு மட்டும் உதவாமல், நாளை நாம் எடுக்கும் முடிவு எந்த விளைவை ஏற்படுத்தினாலும் ' நாம் ஒன்றும் ஒற்றையா ரெட்டையா போட்டு முடிவெடுக்கவில்லை..நன்கு அலசி ஆராய்ந்து தான் எடுத்தோம் என்று மனம் சமாதானமாகும்.

அடுத்தது நமது முடிவை அடைய, செயல் படுத்த தற்போது என்னென்ன வழிகள் உள்ளன என்று ஆராய வேண்டும்.

கண்டிப்பாக பிரச்சனையை ஆராய்ந்தால் நமக்கு சாதகமான ஆயிரம் வழிகள் இருக்கும்! அவற்றை ஒரு தாளில் எழுத வேண்டும். இதற்கு நமது படைப்பு ஆற்றலை உபயோகப்படுத்தினால் வித விதமான யோசனைகள் வரும்.

அடுத்தது தைரியமாக அவற்றை ஒவ்வொன்றாக செயல் படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்தால் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் போவதை கண் கூடாக பார்க்கலாம்.

மேலும் இந்த பிரச்சனையை அணுகும் செயல்பாடுகள் முழுவதிலும் நமது மனோபாவம் நேர்மறையாகவும், வெற்றியை எதிர் நோக்கி இருப்பதாகவும் இருக்க வேண்டும்.

ஒரு கப்பல் மாலுமியின் மனக் கண்ணில் சென்று சேர வேண்டிய இடம் குறிக்கோளாக இருப்பது போல் வெற்றி நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அது நமக்கு சரியான யோசனைகளையும், சரியான சூழ்நிலைலைகளையும் நம்முடன் இணைத்து விடும். வெற்றியை தேடித்தரும்.

இது என்னுடைய கருத்து மட்டுமே ஏற்கனவே நீங்கள் Probelm solving ங்கிற்கு சிறந்த நுட்பத்தை கையாண்டு வந்தால் அதனை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

Nov 23, 2009

அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி பதில்




ஐயா, நீங்கள் பெண்களை உயர்த்திப் பேசி அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். இது சரியா?


நீங்கள் இந்த உலகத்திற்கு எப்படி வந்தீர்கள்? உங்களை ஒரு பெண் அல்லவா தன் வயிற்றில் பத்து மாதம் வைத்து காத்து உருவாக்கினாள்! 
அப்பொழுது அவள் உண்ட உணவை, அவள் சுவாசித்த காற்றை அல்லவா நீங்கள் பங்கிட்டு கொண்டிருந்தீர்கள்? மேலும் முதன் முதலில்
இந்த உலகிற்கு வந்தீர்களே, அங்கு உங்களுக்கு தன் ரத்தத்தை அல்லவா பாலாக மாற்றி முதல் உணவாக அளித்தாள்.


நாம் கடைகளில் சென்று ஒரு புதிய வாகனம் வாங்கும் பொழுது அந்தக் கம்பெனியே உங்களுக்கு முதல் பெட்ரோலை இட்டு நிரப்பி நீங்கள் சிறிது தூரம் வாகனத்தை இயக்குவதற்கு உதவி செய்வது போல், தாய் தானே உங்களுக்கு தன் ரத்தத்தை பாலாக்கி முதல் உணவு (Fuel) அளித்து நீங்கள் உயிர் வாழ உதவினாள். அதற்கு மேலும் பல மாதங்கள் அந்தத் தாயின் பாலைக் குடித்து தானே வளந்தீர்கள்.


"அந்தப் பெண்மை தானே உங்களுக்கு வாழ்க்கைத் துணையாகவும் வந்து வாழ்நாள் முழுவதும் உங்கள் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு நீங்கள் வீடு பேறு அடையவும் உதவுகிறாள். இயதில் ஏதாவது ஒன்றை உங்களால் மறுக்க முடியுமா? இவ்வளவு பெருமை வாய்ந்த பெண்ணினத்தைப் போற்றுவதில் உங்களுக்கு கஞ்சத்தனமும் பொறுக்க முடியாமையும் ஏன் வர வேண்டும்?" 

- நன்றி: அருள் தந்தையின் பதில்கள் பாகம் 2 - வேதாத்திரி பதிப்பகம். 

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...